தேசிய தலைவர்களாக உருவெடுக்கும், மு.க.ஸ்டாலின் - மம்தா பானர்ஜி


தேசிய தலைவர்களாக உருவெடுக்கும், மு.க.ஸ்டாலின் - மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 3 May 2021 7:00 PM GMT (Updated: 3 May 2021 7:00 PM GMT)

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், அசாம், புதுச்சேரி மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. இந்தத்தேர்தல் முடிவுகள், பல எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியிருந்தாலும், பல ஆச்சரியங்களையும், அதிர்ச்சிகளையும் கலந்த ஒரு கலவையாகவும் இருக்கிறது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், அசாம், புதுச்சேரி மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. இந்தத்தேர்தல் முடிவுகள், பல எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியிருந்தாலும், பல ஆச்சரியங்களையும், அதிர்ச்சிகளையும் கலந்த ஒரு கலவையாகவும் இருக்கிறது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.

மறைந்த கலைஞர் கருணாநிதி அடிக்கடி, அதிலும் குறிப்பாக தேர்தல் முடிவுகள் வரும்போதெல்லாம், “நான் வெற்றியைக் கண்டு வெறிகொள்பவனும் அல்ல. தோல்வியைக்கண்டு துவள்பவனும் அல்ல” என்பார். அதையே வெற்றி வாய்ப்பை இழந்த எதிர்க்கட்சிகளும் ஒரு அறிவுரையாக ஏற்றுக்கொண்டு துவண்டுவிடாமல் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. ஆட்சிப் பொறுப்பை ஏற்க இருக்கும் நிலையில், மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திரமோடி உள்பட இந்தியா முழுவதிலும் உள்ள தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, நாடாளுமன்றத்தில் 3-வது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை தி.மு.க. பெற்றுள்ள நிலையில், இப்போது தமிழகத்தின் முதல்-அமைச்சராகவும் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்க இருக்கிறார். தேசிய அளவில் எதிர்க்கட்சி தலைவர்கள் வரிசையில் அவர் இனி முக்கிய இடத்தைப் பெறுவார். தேசிய பிரச்சினைகளில் அவரது குரல் எப்படி ஒலிக்கப்போகிறது? என்பதை நாடு உற்று நோக்குகிறது.

அண்டை மாநிலமான கேரளாவில் எப்போதுமே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டணியும், காங்கிரஸ் கூட்டணியும் மாறி மாறித்தான் ஆட்சியை பிடிக்கும். ஆனால், ஏற்கனவே ஆட்சியில் இருக்கும் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி மீண்டும் ஆட்சியை பிடித்து ஒரு பெரிய சாதனையை படைத்துள்ளது. எவ்வளவோ பிரச்சினைகளுக்கு மத்தியில், 140 இடங்கள் கொண்ட கேரள சட்டசபையில், 99 இடங்களைப் பெற்று ஒரு மகத்தான வெற்றியை பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் தி.மு.க. கூட்டணியில் ஒன்றாக இருக்கும் நிலையில், கேரளாவில் எதிரும், புதிருமான கட்சிகளாக இருக்கிறது. எந்தப்பிரச்சினை என்றாலும், போர்க்குரல் எழுப்பும் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசாங்கமும், எல்லோரையும் கவரும் அரசாங்கமாகத்தான் இருக்கிறது.

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் 3-வது முறையாக வெற்றிபெற்று “ஹாட்ரிக்” சாதனை படைத்துள்ளது. 292 இடங்களில் 213 இடங்களில் வெற்றிபெற்று இந்த “பெண் சிங்கம்” அசைக்க முடியாத சக்தியாக விளங்குகிறது. நாடாளுமன்றத்தில் தி.மு.க.வுக்கு அடுத்த படியாக, அதிக இடங்களை பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, மிகவும் துணிச்சல் மிக்கவர். எப்படியும் அவரை தோற்றகடிக்கவேண்டும் என்று, 3 மாதங்களில் நரேந்திரமோடி 17 முறையும், அமித்ஷா 21 முறையும் சுற்றுப்பயணம் செய்தும் அவரது வெற்றியை யாராலும் தடுக்க முடியவில்லை. ஆக, இனி அவரது குரலும் தேசிய அளவில் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் ஓங்கி ஒலிக்கும்.

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காள மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகள் ஆட்சியை அமைக்கும் சூழ்நிலையில் புதுச்சேரியில் அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை அமைக்கிறது. கடந்த முறை ஆட்சிப்பொறுப்பில் இருந்த காங்கிரஸ் 2 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றிருக்கிறது. இங்கு பா.ஜ.க. தன் கால் தடத்தை பதித்து புதுக்கணக்கை தொடங்கிவிட்டது.

இதுபோல, அசாம் மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையிலான மகா கூட்டணி போட்டியிட்டும், ஏற்கனவே ஆட்சியிலிருந்த பா.ஜ.க. கூட்டணியை தோற்கடிக்க முடியவில்லை. அசாம் மாநிலத்தில் பா.ஜ.க. தன்னை அசைக்க முடியாத சக்தியாக நிரூபித்துவிட்டது. அங்கு இப்போது முதல்-அமைச்சராக இருக்கும் சர்பானந்தா சோனாவால் தொடர்வாரா?, ஹிமந்த பிஸ்வா சர்மா பதவி ஏற்பாரா? என்பதில்தான் சிக்கல் இருக்கிறது.

மொத்தத்தில், இந்த 5 மாநில தேர்தல் முடிவுகளும் புதுப்புது பாடங்களை, கணக்குகளை தேசிய அரசியலில் வகுத்து இருக்கிறது.

Next Story