கூட்டு முயற்சியில் கொரோனாவை வெல்வோம்!


கூட்டு முயற்சியில் கொரோனாவை வெல்வோம்!
x
தினத்தந்தி 9 May 2021 10:00 PM GMT (Updated: 2021-05-09T23:43:43+05:30)

உலகத்தையே புரட்டிப்போட்டுவிட்ட கொடிய பெருந்தொற்றான கொரோனா, இந்தியாவையும், ஏன் தமிழ்நாட்டையும் விட்டுவைக்கவில்லை.

முதல் அலை ஓய்ந்துவிட்டது, இனி அமைதி திரும்பும் என்று எல்லோரும் எதிர்பார்த்த நிலையில், 2-வது அலை விஸ்வரூபம் எடுத்துவிட்டது. கடந்த பிப்ரவரி மாத கடைசியில் ஒரு நாளைக்கு 450 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இப்போது 29 ஆயிரத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இது எங்கு கொண்டுபோய் விட்டுவிடுமோ? என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில், முதல்-அமைச்சர் பொறுப்பை ஏற்ற மு.க.ஸ்டாலின், கொரோனா பரவலை எப்படியும் தடுத்தே தீரவேண்டும் என்ற உறுதியான எண்ணத்தில், பதவியேற்ற அன்றே மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, “தமிழ்நாட்டிலுள்ள நிலைமைகளை அதிகாரிகள் உள்ளதை உள்ளபடியே முன்வைத்து தனது செயல்பாட்டின் நுணுக்கம், தேவைகளை, அமைப்பின் குறைபாடுகளை, கடக்க வேண்டிய தூரத்தை ஒளிவுமறைவின்றி எடுத்துரைக்கவேண்டும். புகழுரையையோ, பொய்யுரையையோ, எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் எனக்கு இல்லை. உள்ள உண்மையை நேருக்குநேர் சந்திப்போம். மக்களை காப்போம். இந்த இக்கட்டான சூழ்நிலையை அனைவரது கூட்டு முயற்சியினால் மட்டுமே வெல்ல இயலும்” என்று வெளிப்படையான ஆலோசனைகளை வழங்கினார்.

முதல்-அமைச்சர் இவ்வாறு தெரிவித்தவுடன், அனைத்து மாவட்ட கலெக்டர்களும், போலீஸ் சூப்பிரண்டுகளும், கொரோனா பரவலின் உண்மையான நிலையை அவருக்கு எடுத்துக்கூறினார்கள். அனைவரிடமும் நன்கு ஆலோசித்துவிட்டு, இப்போது பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வேகத்தை கட்டுப்படுத்த வேண்டுமென்றால், ஏற்கனவே கடந்த 1-ந்தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், அதை தீவிரப்படுத்த கடந்த 6-ந்தேதி முதல், பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளன. இப்போது தமிழ்நாட்டில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், இன்று அதிகாலை 4 மணி முதல் 24-ந்தேதி அதிகாலை 4 மணி வரை 2 வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த ஊரடங்கு, நோய்களுக்கு ஊசிபோடும்போது ஏற்படும் சிறிய வலி போன்றதாகும். இந்த சிறிய வலியை தாங்கிவிட்டால், நோயை குணமாக்கிவிட முடியும். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும், மக்களுக்கு தேவை யான அத்தியாவசிய பண்டங்களான மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சி, மீன் விற்பனை கடைகள், ஓட்டல்களில் பார்சல் சேவை, பத்திரிகை வினியோகம், மருத்துவமனை ஆகியவை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படமாட்டாது என்று அறிவித்தது நிச்சயம் வரவேற்கத்தக்கது. முக்கிய அரசு அலுவலகங்கள் தவிர, மாநில அரசு அலுவலகங்கள் இயங்காது. அம்மா உணவகங்கள் முழு நேரமும், நியாய விலைக்கடைகள் பகல் 12 மணி வரையும் செயல்படும். ஊடகம் மற்றும் பத்திரிகை துறையினர் தொடர்ந்து பணியாற்றலாம் என்பதுபோன்ற பல தளர்வுகளும், ஊரடங்கு கட்டுப்பாடுகளோடு அறிவிக்கப்பட்டுள்ளன.

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஊரடங்கு விதிக்கப்பட்ட நேரத்தில், துணை போலீஸ் சூப்பிரண்டு ஷில்பா சாகு, தான் கர்ப்பிணியாக இருந்த நிலையில், சாதாரண உடை யில் கையில் லத்தியை வைத்துக்கொண்டு, “உங்கள் பாதுகாப்புக்காக நாங்கள் சாலையில் நிற்கிறோம். எல்லோருடைய பாதுகாப்புக்காக நீங்கள் வீட்டிலேயே இருங்கள்” என்று கூறிய ஆலோசனையையே மக்கள் பின்பற்றி, இந்த இருவார கால ஊரடங்குகளிலும், அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்றி, தேவையில்லாமல் வெளியே நடமாட்டத்தை குறைத்தாலே கொரோனா பரவலை அடக்கி ஒடுக்கிவிட முடியும்.

இனிமேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படக்கூடாது, 24-ந்தேதியுடன் முடிந்துவிட வேண்டும் என்றால், அதிகாரிகளும் ஊரடங்கை முழுமையாக நிறைவேற்ற கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். பொதுமக்களும் ஊரடங்கை மதித்து, அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். “கூட்டு முயற்சியில் கொரோனாவை வெல்வோம்” என்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் முழக்கம் நிறைவேற அனைவரும் ஒன்றுபடுவோம்.

Next Story