மேடே... மேடே... மேடே...


மேடே... மேடே... மேடே...
x
தினத்தந்தி 11 May 2021 8:28 PM GMT (Updated: 11 May 2021 8:28 PM GMT)

உலகம் முழுவதும் 1920-ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து கப்பல் கேப்டன்களாலும், விமான பைலட்டுகளாலும் ஆபத்தான சூழ்நிலையில் விடுக்கும் அபயக்குரல் ‘மேடே... மேடே... மேடே...’ என்பதாகும்.

பிரெஞ்சுமொழியில் இதற்கு ‘எங்களுக்கு உதவுங்கள்... வந்து எங்களுக்கு உதவுங்கள்...’ என்பது பொருள். இது அபாயத்தில் சிக்கியுள்ளவர்கள் விடுக்கும் அபயக்குரலாகும். அதே குரலில்தான் இப்போது மத்திய அரசாங்கத்தை நோக்கி, தமிழக அரசு ‘மேடே... மேடே... மேடே...’ என்று கூறும் நிலையிருக்கிறது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருக்கிறது. கொரோனா வராமல் தடுக்கும் தடுப்பூசி மருந்துகளும், தமிழ்நாட்டுக்கு போதுமானஅளவு ஒதுக்கப்படுவதில்லை. கடந்தாண்டு அக்டோபர் 1-ந்தேதியன்று உள்ள மக்கள்தொகை கணக்கின்படி, தமிழ்நாட்டில் 7 கோடியே 62 லட்சத்து 55 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். இவ்வளவு மக்கள்தொகை கொண்ட தமிழ்நாட்டுக்கு இப்போதைய நிலவரப்படி, 76 லட்சத்து 43 ஆயிரத்து 10 டோஸ் தடுப்பூசி மருந்துகள்தான் வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் சற்றே அதிக மக்கள்தொகையை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்துக்கு 1 கோடியே 47 லட்சத்து 37 ஆயிரத்து 360 டோஸ் தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. கர்நாடகா, குஜராத் மாநிலங்களில் தமிழ்நாட்டைவிட மக்கள்தொகை குறைவாக இருந்தாலும், மிக அதிகமாக தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

சரி! தடுப்பூசிக்குத்தான் தட்டுப்பாடென்றால், உயிர்காக்கும் ஆக்சிஜன் சப்ளையும் மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் தினமும் 470 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவை என்ற நிலையில், உயர்ந்து கொண்டுவரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை கருத்தில்கொண்டு தினமும் 500 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உடனடியாக அனுப்புங்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமரிடம் கேட்டதற்கிணங்க இப்போது 419 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளது. இன்றைய கணக்குப்படி, தமிழ்நாட்டின் ஆக்சிஜன் தேவை 470 மெட்ரிக் டன் என்ற வகையில், இப்போதே தட்டுப்பாடு தொடங்கிவிட்டது.

இந்தநிலையில், கொரோனா பாதிப்பு இன்னும் அதிகமானால், அடுத்த 15 நாட்களில் 850 மெட்ரிக் டன் வரை ஆக்சிஜன் தேவைப்படும் சூழ்நிலை உருவாகும். நிலைமை இவ்வாறு மோசமாக இருக்க கேரள மாநிலம் கஞ்சிக்கோட்டிலிருந்து ‘ஐனாக்ஸ்’ நிறுவனம் அனுப்பும் 40 மெட்ரிக் டன் ஆக்சிஜனை இன்று வரை மட்டுமே வழங்கப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு ஸ்டெர்லைட் நிறுவனத்திலிருந்து ஆக்சிஜன் கிடைக்கும் என்று ஒரு காரணத்தை சொல்கிறார்கள். ஆனால், ஸ்டெர்லைட் நிறுவனம் இன்று உற்பத்தியை தொடங்கி, 40 மெட்ரிக் டன் உற்பத்தியை எட்ட குறைந்தது 10 நாட்களாவது ஆகும். எனவே பெருகிவரும் தேவைக்கேற்ப கஞ்சிக்கோடு சப்ளையும் நீடிக்கவேண்டும். ஸ்டெர்லைட் சப்ளையும் தொடக்கம் முதல் தமிழ்நாட்டின் தேவைக்கேற்ப முழுமையாக வழங்கப்படவேண்டும். இத்தகைய சூழ்நிலையில்தான் தமிழக அரசு அபயக்குரலை எழுப்பியுள்ளது.

இதேபோல, “ரெம்டெசிவிர்” தேவையும் முழுமையாக பூர்த்திசெய்யப்படாமல், தினமும் 7 ஆயிரம் குப்பிகள் என்ற அளவிலேயே ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் தற்போது சென்னை, சேலம், திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் “ரெம்டெசிவிர்” சப்ளை செய்யப்படுகிறது. வருகிற கூட்டமோ நாளுக்குநாள் கட்டுக்கடங்காமல் இருக்கிறது. எனவே, மத்திய மந்திரி பியூஷ் கோயலிடம், மு.க.ஸ்டாலின் நாளொன்றுக்கு 20 ஆயிரம் “ரெம்டெசிவிர்” குப்பிகளை ஒதுக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

புயலில் சிக்கிக்கொண்டிருக்கும் ஒரு கப்பலின் கேப்டன் ‘மேடே... மேடே... மேடே...’ என்று உதவிகேட்டு கதறுவதைப்போல, தமிழக அரசும், ஆக்சிஜன் தாருங்கள்... ரெம்டெசிவிர் தாருங்கள்... தடுப்பூசி மருந்து தாருங்கள்... என்ற அபயக்குரலை எழுப்புகிறது. ஆபத்தில் சிக்கிக்கொண்டிருப்பவர்களை கை தூக்கிவிடுவதுதான் மனிதாபிமானம் என்ற அடிப்படையில், உடனடியாக மத்திய அரசு, தமிழக அரசின் இந்த அபயக்குரலை கேட்டு, தேவையான அளவு ஆக்சிஜன், ரெம்டெசிவிர், தடுப்பூசி மருந்துகளை தட்டுப்பாடில்லாமல் வழங்கவேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Next Story