எட்டிப்பார்க்கும் கருப்பு பூஞ்சை


எட்டிப்பார்க்கும் கருப்பு பூஞ்சை
x
தினத்தந்தி 21 May 2021 12:28 AM GMT (Updated: 2021-05-21T07:34:15+05:30)

“கோடை காலத்தில் கூரை வேய்ந்தால், மழை காலத்தில் தண்ணீர் ஒழுகுவதை தடுக்க முடியும்” என்று கிராமத்தில் ஒரு வழக்கு மொழி உண்டு.

அதுபோல, பல மாநிலங்களில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்டுவரும் “மியூகோர்மைகோசிஸ்” என்று கூறப்படும் கருப்பு பூஞ்சை என்ற நோய் தமிழ்நாட்டில் அதிகம் பரவாவிட்டாலும், ஒரு சிலருக்கு வரத் தொடங்கிவிட்டது. இப்போதே உரிய நடவடிக்கை எடுத்தால் பெரும்பாதிப்பு ஏற்படாமல் நிச்சயமாக தடுத்து விடலாம்.கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு 
மரணத்தை வென்று குணம் அடைந்தவர்களை இந்த கருப்பு பூஞ்சை நோய் தாக்கும் அபாயம் இருக்கிறது. கொரோனாவிலிருந்து மீண்டெழுந்த அனைவரையும் இது பாதிக்காது. ஆனால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், கட்டுப்படுத்த முடியாத அளவு சர்க்கரை நோய் உள்ளவர்களை இந்த நோய் தாக்கும்நிலை ஏற்படும். ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவாது. ஆரம்ப கட்டத்தில் இது அமைதியாகத்தான் இருக்கும். ஆனால் நாளாக.. நாளாக.. சளிப்பிடித்தல், மூக்கடைப்பு, மூக்கில் இருந்து கருப்பு நிற திரவம் ஒழுகுதல், ரத்தம் ஒழுகுதல், கன்னத்திலுள்ள எலும்புகளில் வலி, முகத்தில் ஒரு பக்கம் வலி, உணர்ச்சி இல்லாமலோ, வீக்கமோ இருத்தல், மூக்கில் கருப்பு நிறம் ஏற்படுதல், பற்கள் வலு இழத்தல், கண் பார்வை மங்குதல், கண்வலி, நெஞ்சுவலி போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

கொரோனா சிகிச்சையின்போது உயிரைக் காப்பாற்ற அதிகமான அளவு ஆக்சிஜன் கொடுக்க வேண்டிய நேரத்தில் ஸ்டீராய்டு (ஊக்க மருந்து) கொடுக்கப்படவேண்டும். அப்போது அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவதாலும், சிலர் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளும் நேரத்தில், மருத்துவர் ஆலோசனை இல்லாமலேயே ஸ்டீராய்டை எடுத்துக்கொள்வதாலும் கருப்பு பூஞ்சை நோய் பாதிக்கும்நிலை ஏற்படும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூக்கு, வாய், கண்களின் கீழ் என சில இடங்களில் பூஞ்சை ஏற்படுகிறது. இதை கவனிக்காமல் விட்டுவிட்டால், அப்படியே அரித்துக்கொண்டு, கண்களுக்கு சென்று பார்வை குறைபாடு மட்டுமல்லாமல், கண்களையே எடுக்க வேண்டிய நிலையை ஏற்படுத்திவிடும். சில நேரங்களில், மூளையை பாதிப்படைய செய்து உயிரிழப்பைக்கூட ஏற்படுத்திவிடும். இந்த நோய் வராமல் தடுக்க என்னென்ன வழிகளை கையாளவேண்டும்? என்பதை மருத்துவர்களுக்கும், பொதுமக்களுக்கும் மத்திய, மாநில மக்கள் நல்வாழ்வுத் துறைகள், வழிமுறைகளை உடனடியாக வகுத்துக் கொடுக்கவேண்டும்.

கருப்பு பூஞ்சை நோயை குணமாக்குவதற்கு லைபோசோமல் ஆம்போடெரிசின் பி அல்லது ஆம்போடெரிசின் பி என்ற ஊசி மருந்து செலுத்தப்படுகிறது. இதன் விலை மிக அதிகம். ஆனால், இப்போது இந்த மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் 4, 5 மருந்து கம்பெனிகள்தான் இந்த மருந்தை தயாரிக்கின்றன. இதற்கு தேவையான மூலப்பொருள் சீனாவில் இருந்துதான் வரவேண்டும். ஆனால், அங்கிருந்து இப்போது சரியாக கிடைப்பதில்லை. இந்தநிலையில், மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை இணை மந்திரி மன்சுக் மண்டாவியா, “இந்த மருந்தை உள்நாட்டில் அதிக அளவில் தயாரிப்பதற்கும், உலகம் முழுவதிலும் இருந்து இறக்குமதி செய்வதற்கும் ஒரு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது”என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில், தமிழக மருத்துவ பணிகள் சேவை கழகம் 5 ஆயிரம் ஆம்போடெரிசின் பி ஊசி மருந்தை வாங்குவதற்கு ஆர்டர் கொடுத்துள்ளது. இது பாராட்டுக்குரியது என்றாலும், இன்னும் தேவையான அளவு மருந்துகள், மருத்துவமனைகளில் வார்டுகள் தயாராக வைத்திருக்கவேண்டும். கருப்பு பூஞ்சை நோய்க்காக மக்கள் பீதியடைய தேவையில்லை. ஏனெனில், இதை குணப்படுத்த மருந்துகள் இருக்கிறது. தமிழக அரசு பெரும் முயற்சி எடுத்து வருகிறது. அறிகுறிகள் ஏற்பட்டால், ஆரம்பத்திலேயே டாக்டர்களை அணுகினால் முளையிலேயே கிள்ளி எறிந்துவிடலாம். கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கு, சர்க்கரை நோயை கட்டுக்குள் வைப்பது பற்றியும், ஏதாவது அறிகுறிகள் இருந்தால், மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்வது பற்றியும் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.

Next Story