மெல்ல, மெல்ல திரும்புகிறது இயல்பு வாழ்க்கை!


மெல்ல, மெல்ல திரும்புகிறது இயல்பு வாழ்க்கை!
x
தினத்தந்தி 7 Jun 2021 6:50 PM GMT (Updated: 7 Jun 2021 6:50 PM GMT)

கொரோனா பரவலின் வேகம் முதல் அலை இறுதியில், அதாவது கடந்த பிப்ரவரி மாதம் 20-ந்தேதி 438 பேர் மட்டும் பாதிக்கப்பட்ட நிலையில், “போய் வா கொரோனா அலையே..” என்று விரட்டியடித்துவிடலாம் என எல்லோரும் நினைத்துக்கொண்டிருந்தனர்.

கொரோனா பரவலின் வேகம் முதல் அலை இறுதியில், அதாவது கடந்த பிப்ரவரி மாதம் 20-ந்தேதி 438 பேர் மட்டும் பாதிக்கப்பட்ட நிலையில், “போய் வா கொரோனா அலையே..” என்று விரட்டியடித்துவிடலாம் என எல்லோரும் நினைத்துக்கொண்டிருந்தனர். ஆனால் பதுங்கி இருக்கும் புலி பாய்வது போல, அடுத்த நாளே கொரோனா பாதிப்பு உயரத்தொடங்கியது. கடந்த மே மாதம் 21-ந்தேதி, 36 ஆயிரத்து 184 பேர் பாதிக்கப்பட்டு, 467 பேர் உயிரிழந்த நிலையில், இனி இந்த பரவலை கட்டுப்படுத்தவேண்டும் என்றால் ஊரடங்கு தான் ஒரே வழி என்ற வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 24-ந்தேதி முதல் மே மாதம் 31-ந்தேதி காலை 6 மணி வரை முழு தளர்வுகளற்ற ஊரடங்கை பிறப்பித்தார்.

இந்த முதல் ஊரடங்கில், தொற்று சற்று குறைந்தது. 30-ந்தேதி, 28 ஆயிரத்து 864 பேர் பாதிக்கப்பட்டனர். ஆக ஊரடங்கினால் தொற்று குறைகிறது என்று உறுதிப்பட்ட நிலையில், 7-ந்தேதி (நேற்று) வரை முதல்-அமைச்சர் ஊரடங்கை நீட்டித்தார். ஊரடங்கு அமலில் இருந்தாலும் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க பல நல்ல முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டது. இதன் விளைவாக கடந்த 6-ந்தேதி பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்து 421 ஆக குறைந்தது. ஆனால் சில மாவட்டங்களில் பரவலின் வேகம் குறையவில்லை. இந்த 20 ஆயிரத்து 421-ம் அதிக பாதிப்புதான். எனவே இன்னும் இந்த பரவலின் எண்ணிக்கையை குறைக்கவேண்டும் என்றால் ஊரடங்கை மேலும் ஒரு வார காலத்துக்கு நீட்டிப்பு செய்தால்தான் முடியும் என்ற அடிப்படையில், நேற்று முதல் 14-ந்தேதி காலை 6 மணி வரை சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வார காலத்துக்கு நீட்டிப்பு செய்ய முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் மட்டும் நோய்த்தொற்று பரவல் அதிகமாக இருப்பதை கருத்தில்கொண்டு, சில தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை மெல்ல, மெல்ல திரும்பும் வகையில் மேலும் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக கடந்த இரு ஊரடங்குகளிலும், தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் ஆகியவை விற்பனை செய்யும் திட்டம் பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று அறிவித்தது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். முதல்-அமைச்சர் அந்த அறிவிப்பில், பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருட்களை வாங்குமாறும், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கடைகளுக்கு செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்கிறேன். கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்களின் நலன் கருதி தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அவசியம் இன்றி வீட்டில் இருந்து வெளியே வருவதையும், கூட்டங்களையும் தவிர்க்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இயல்பு வாழ்க்கை திரும்பவேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு நிறைய தளர்வுகளுடன் 3-வது முறையாக ஊரடங்கை நீட்டித்துள்ளது. ஆனால் இந்த ஊரடங்குக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்றால், அது பொதுமக்களின் ஒத்துழைப்பிலும், அதிகாரிகளின் நடவடிக்கையிலும் தான் இருக்கிறது. தளர்வுகள் இருக்கிறது என்பதற்காக பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியே செல்வதையும், அவசியம் ஏற்படும் சூழ்நிலையில் இரட்டை முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் நடந்தால்தான் கொரோனா பரவலை தடுக்கமுடியும். இதுவரை நன்றாக குறைந்த கொரோனா பாதிப்பு, பிப்ரவரி 20-ந்தேதி நிலைமைக்கு, செல்வது பொதுமக்கள் கையில் தான் இருக்கிறது.

Next Story