ஒரு பக்கம் கொரோனா; மற்றொரு பக்கம் விலைவாசி உயர்வா?


ஒரு பக்கம் கொரோனா; மற்றொரு பக்கம் விலைவாசி உயர்வா?
x
தினத்தந்தி 16 Jun 2021 6:37 PM GMT (Updated: 2021-06-17T00:07:07+05:30)

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார், “எந்த செய்தியை கொடுத்தாலும், வாசகர்களுக்கு எளிதில் புரியும் வகையில் இருக்க வேண்டும்.

படிக்கும்போது என்ன சொல்லியிருக்கிறார்கள்? என்று புரியாமல் குழம்பும் நிலை இருக்கக்கூடாது” என்பதில் ஒரு நல்ல பாதையை ‘தினத்தந்தி’க்கு வகுத்துக் கொடுத்திருக்கிறார். தினத்தந்தியின் பொன் விதியே, “பேச்சு வழக்கில் உள்ள தமிழே உயிருள்ள தமிழ். அதை கொச்சை நீக்கி எழுத வேண்டும்” என்பதுதான். அந்தவகையில், பணவீக்கம் என்றால், சாதாரண வாசகர்களுக்கு புரியாது. அதை விலைவாசி உயர்வு என்றுதான் எழுத வேண்டும் என்பார்.

அதைத்தான் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரமும் பணவீக்கம், அதாவது விலைவாசி உயர்வு எவ்வளவு தெரியுமா? என்று குறிப்பிட்டு, டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தேசிய புள்ளிவிவர அலுவலகம் நாட்டில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளதை, புள்ளிவிவரமாக வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி நிர்ணயித்த குறியீட்டு அளவைத்தாண்டி, மொத்த விற்பனை விலை உயர்வு 12.94 சதவீதமும், சில்லரை விற்பனை விலை உயர்வு 6.3 சதவீதமும் அதிகரித்துள்ளது. பெட்ரோல் - டீசல் மற்றும் மின்சாரம் ஆகிய விலைகள் 37.61 சதவீதமும், உணவுப் பொருட்களின் விலை 6.3 சதவீதமும், பருப்பு வகைகள் விலை 9.39 சதவீதமும், எண்ணெய் விலை 30 சதவீதமும் உயர்ந்திருக்கிறது. வெங்காயத்தின் விலைகூட 23.24 சதவீதம் உயர்ந்து, இல்லத்தரசிகளின் கண்களில் இருந்து, வெங்காயத்தால் அல்ல, அதன் விலை உயர்வால் கண்ணீரை வரவழைத்துக் கொண்டிருக்கிறது.

சில்லரை பொருட்களின் விலை உயர்வுக்கு பெட்ரோல் - டீசலின் விலை உயர்வும், உணவு பொருட்களின் விலை உயர்வுமே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. சமையல் எண்ணெய் மற்றும் கொழுப்பு பொருட்களின் விலை மிக அதிகமாக உயர்ந்துள்ளது. முட்டை, போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு, பழங்கள், பெட்ரோல் - டீசல் மற்றும் மின் தொகுப்பு, உணவுப் பொருட்கள், பருப்பு வகைகள், தானியங்கள், இறைச்சி, மீன், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் சேவைகள், பால் பொருட்கள் என்று எல்லா பொருட்களின் சில்லரை விற்பனை விலையும் வெகுவாக உயர்ந்துள்ளது.

கிராமப்புறங்களில் 6.5 சதவீத விலைவாசி உயர்வும், நகர்ப்புறங்களில் அதைவிட சற்று குறைவாக 6 சதவீத விலைவாசி உயர்வும் இருக்கிறது. கொரோனாவின் பாதிப்பால் மக்கள் வருமானம் குறைவு, வருமான இழப்பு என்று அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், பல குடும்பங்களில் எதிர்பாராத செலவுகள் என்ற வகையில், கொரோனா மருத்துவ சிகிச்சையும் அழுத்திக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், விலைவாசி உயர்வும் இப்படி தாங்க முடியாத அளவில் சென்று கொண்டிருந்தால், எப்படி வீட்டு செலவை சமாளிப்பது?, இதில் எதை குறைப்பது? என்று தெரியாமல், ஏழை - எளிய, நடுத்தர குடும்பங்கள் தவித்துக் கொண்டிருக்கின்றன. தடுமாறிக் கொண்டிருக்கின்றன.

ஊரடங்கினால் பொருட்கள் உற்பத்தி மற்றும் வினியோகம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள தடைகளும் இந்த விலைவாசி உயர்வுக்கு கூடுதல் காரணங்களாகும். காரணங்கள் எவ்வளவோ இருக்கலாம். ஆனால், விலைவாசி உயர்வு என்பது இந்த கொரோனா நேரத்தில், அதன் பாதிப்புகளால் வாடிக் கொண்டிருக்கும் மக்களால் நிச்சயமாக தாங்கவே முடியாது. எனவே, மத்திய - மாநில அரசுகள் உடனடியாக விலைவாசியை மக்கள் தாங்கக் கூடிய அளவில் குறைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். மொத்த விற்பனை விலை உயர்வுக்கும் முக்கிய காரணம் பெட்ரோல்-டீசல் விலை உயர்வும், சமையல் எண்ணெய் விலை உயர்வும்தான் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, பெட்ரோல் - டீசல் விலையை குறைப்பதற்கு மத்திய அரசு தன் பெரும் பங்கையும், மாநில அரசுகள் ஒரு சிறு பங்கையும் அளித்தால், அதன் பிரதிபலிப்பாக நிச்சயம் சில்லரை விற்பனை விலை குறையும். மக்களாலும் தாங்க முடியும்.

Next Story