வரவேற்கத்தக்க ஊரடங்கு தளர்வுகள்!


வரவேற்கத்தக்க ஊரடங்கு தளர்வுகள்!
x
தினத்தந்தி 20 Jun 2021 7:18 PM GMT (Updated: 2021-06-21T00:48:54+05:30)

இன்று 21-ந்தேதி காலை 6 மணிக்கு முடிவுறும் ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு (28-ந் தேதி வரை) நீட்டிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா பாதிப்பு இன்னும் எதிர்பார்த்த அளவு குறையாத நிலையில், அதை குறைக்க தமிழக அரசு மிகத்தீவிர நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அந்தவகையில், கடந்த மே 24-ந்தேதி முதல், எந்தவித தளர்வுகளும் இன்றி பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு, பாதிப்பு குறையத் தொடங்கியபிறகு, இம்மாதம் 1-ந்தேதி முதல் ஒவ்வொரு வாரமாக சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், இன்று 21-ந்தேதி காலை 6 மணிக்கு முடிவுறும் ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு (28-ந் தேதி வரை) நீட்டிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மருத்துவ வல்லுநர்கள், அரசு உயர் அதிகாரிகளுடன் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு எவ்வளவு இருக்கிறது? என்பதை தராசின் ஒரு தட்டிலும், மற்றொரு தட்டில் மக்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி இருக்கமுடியாது என்பதையும் வைத்து, நன்றாக சீர்தூக்கி பார்த்து, அறிவியல் ரீதியாக மிக நல்ல முடிவை அவர் எடுத்துள்ளார்.

தமிழ்நாட்டிலுள்ள 38 மாவட்டங்களின் நிலைமையும் அலசி ஆராயப்பட்டு, நோய்த்தொற்று பாதிப்பின் அடிப்படையில், 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. தொற்று அதிகமாக உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் மட்டும் தொடர்ந்து அனுமதிக்கப்படுகிறது.

அடுத்து, சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் நீங்கலாக மீதமுள்ள 23 மாவட்டங்களில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட சில செயல்பாடுகளுக்கான நேரத்தளர்வுகளும், கூடுதலாக சில செயல்பாடுகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. ஏற்றுமதி நிறுவனங்கள், அவைகளுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடனும், இதர தொழிற்சாலைகள் 33 சதவீத தொழிலாளர்களுடனும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஹார்டுவேர் கடைகள், வாகனங்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் கடைகள், கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், சாலையோரங்களில் செயல்படும் காய்கறிகள், பழங்கள், பூக்கடைகளையும் திறக்க அனுமதியளித்திருப்பது ஏழைகள் வாழ்வில் ஒளியேற்றுவதாக அமையும். மேலும், கட்டுமான பணிகளுக்கும் அனுமதி வழங்கியது வேலைவாய்ப்பை அதிகரிக்கும்.

தொற்று சற்று குறைந்துள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், 23 மாவட்டங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளுடன், மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களை விற்கும் பல கடைகள் இரவு 7 மணிவரை திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமாக, மாவட்டத்திற்குள்ளும், 4 மாவட்டங்களுக்கு இடையேயும் குளிர்சாதன வசதியில்லாமல், 50 சதவீத இருக்கைகளில் பயணிகள் அமர்ந்து பயணிக்கவும், சென்னையில் மெட்ரோ ரெயில் 50 சதவீத பயணிகளுடன் இயங்கவும் அனுமதியளித்திருப்பது மிகமிக வரவேற்புக்குரியதாகும். இதனால், அரசு ஊழியர்களுக்கும், தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் மற்றும் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கும் போக்குவரத்து வசதி ஏற்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்வுகளுக்கு 2-ம்வகை, 3-ம்வகை மாவட்டங்களுக்கு இடையே இ-பாஸ் பெற்று பயணம் செய்யவும், 50 நபர்கள் மட்டும் கலந்துகொள்ளவும் அனுமதிக்கப்படுகிறது. இந்த நகரங்களில் அரசின் அத்தனை துறை அலுவலகங்களும் இயங்கும் என்றவகையில், இனி நிர்வாகத்தின் வேகமும் அதிகரிக்கும்.

“ஊரடங்கு தளர்வுகளை நடைமுறைப்படுத்தும்போது, கொரோனா பரவல் அதிகரிக்காத வகையிலும், நடவடிக்கை எடுக்கவேண்டும். எவ்வளவு அதிகமான பேர்களுக்கு தடுப்பூசிபோட முடியுமோ? அதற்கு ஏற்றவகையில், தடுப்பூசிபோடும் பணிகளை வேகப்படுத்தவேண்டும். மார்க்கெட்டுகள் போன்ற இடங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கவேண்டும். மக்களும் முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுவதை உறுதிப்படுத்தவேண்டும்” என்று மத்திய அரசாங்கம் கூறியிருக்கிறது.

இந்தத் தளர்வுகள் நிச்சயமாக வரவேற்புக்குரியது. ஆனால், இதுமட்டும் போதாது. இன்னமும் தளர்வுகள் வேண்டும். சகஜ வாழ்க்கை திரும்பவேண்டும். அதற்கு கொரோனா பரவல் இன்னும் வேகமாக குறையவேண்டும். அது மக்கள் கையில்தான் இருக்கிறது.

Next Story