அதிகாரிகளின் நிம்மதி பெருமூச்சு!


அதிகாரிகளின் நிம்மதி பெருமூச்சு!
x
தினத்தந்தி 22 July 2021 10:50 PM GMT (Updated: 23 July 2021 1:18 AM GMT)

நமது அரசியல் சட்டத்தை வகுத்துத்தந்த மேதைகள், மிக துல்லியமாக ஒவ்வொருவருக்கும் உள்ள அதிகாரங்களை கொடுத்திருக்கிறார்கள். இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இந்த ஜனநாயகத்தை 4 தூண்கள் தாங்கியிருக்கும் வகையில் உருவாக்கியிருக்கிறார்கள். சட்டமன்றம், நீதிமன்றம், நிர்வாகம், பத்திரிகை ஆகியவைதான் அந்த 4 தூண்கள். இந்த 4 தூண்களுக்குமே தனித்தனியான எல்லைகள், தனித்தனியான அதிகாரங்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

ஒருவர் எல்லைக்குள் அடுத்தவர் நுழையக்கூடாது. ஒருவர் அதிகாரத்தில் அடுத்தவர் தலையிடக்கூடாது என்பதுதான் அரசியல் சட்டத்தின் பொருளாகும்.ஆனால், சமீபகாலமாக இந்தநிலைமாறி, ஒரு தூணைப்பற்றி அடுத்த தூணில் உள்ளவர்கள் விமர்சனம் செய்வதும், ஒருவர் எல்லைக்குள் அடுத்தவர் நுழைவதும், ஒருவர் அதிகாரத்தை மற்றவர்கள் கையில் எடுத்துக்கொள்வதும் வழக்கமாக இருக்கிறது. பல நீதிமன்றங்களில் வழங்கும் தீர்ப்புகளைப்பார்த்து, “இது அரசாங்கத்தின் கொள்கை முடிவுகள் அல்லவா?, அரசாங்கம்தானே இதை நடைமுறைப்படுத்தவேண்டும். நீதிமன்றங்கள்  அதை கையில் எடுத்துவிட்டதே” என்றுகூட சில பேச்சுகள் அடிபட்டன.

இந்தநிலையில், இதற்கு யார் வழிகாட்டப்போகிறார்கள்? என்று எல்லோரும் எதிர்பார்த்த நேரத்தில், நமது சுப்ரீம் கோர்ட்டு அதை கையில் எடுத்து, முதலில் ஐகோர்ட்டுகள் அதிகாரிகளை அடிக்கடி அழைப்பதை கண்டனம் செய்துள்ளது. உத்தரபிரதேச அரசாங்கத்தில் பணிபுரிந்த ஒரு டாக்டர் தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்தபோது, இந்த வழக்கு விசாரணையில் பல அதிகாரிகள்  விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டதைக் கண்டது. இதையொட்டி, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கவுல், ஹேமந்த் குப்தா ஆகியோர், “இவ்வாறு அதிகாரிகளை அடிக்கடி எதற்கெடுத்தாலும் கோர்ட்டுக்கு அழைப்பது சரியல்ல. நீதிபதிகள் பேரரசர்கள் போல நடந்துகொள்ளக்கூடாது. இவ்வாறு உயர் அதிகாரிகளை அழைப்பது, நீதிமன்றத்திற்கும், நிர்வாகத்துக்கும் தனித்தனியாக பிரித்துக்கொடுத்திருக்கும் அதிகார எல்லைகளை மீறுவதுபோல் ஆகும்” என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், “அதிகாரிகளும் 3-வது தூணாக நிர்வாகத்தை நடத்தி வருகிறார்கள். அதிகாரிகள் ஆற்றும் பணிகள், எடுக்கும் முடிவுகள், அவர்களுக்கு பலனளிப்பதற்காக மேற்கொள்ளப்படுவதில்லை. பொது நிதியின் புரவலர்கள் என்ற வகையில், அரசின் நிர்வாக நலனுக்காக சில முடிவுகளை எடுக்கிறார்கள். நீதிமன்ற ஆய்வில் இது சரியான முடிவாக இல்லை என்றால், தாராளமாக ஐகோர்ட்டுகள் தள்ளுபடி செய்ய முடியும். அதற்கு பதிலாக அடிக்கடி அதிகாரிகளை கோர்ட்டுக்கு வரவழைப்பது என்பது ஏற்புடையதல்ல” என்றும் தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகளை பொறுத்தமட்டில், “நாங்கள் நீதிமன்றத்தை பெரிதும் மதிக்கிறோம். நீதிமன்றத்தின் உத்தரவுகளை நாங்கள் நடைமுறைப்படுத்த வில்லை என்றால், அது நீதிமன்ற அவமதிப்பு என்பதை நன்றாக  அறிவோம். ஆனால், ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியோ, ஐ.பி.எஸ். அதிகாரியோ, வனத்துறை அதிகாரியோ, அல்லது எந்த உயர் அதிகாரி என்றாலும் சரி, ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான கோப்புகளை மிக நுணுக்கமாக பார்க்க வேண்டியுள்ளது. இந்தநிலையில், ஐகோர்ட்டுகள், மாவட்ட கலெக்டர்கள் போன்ற உயர் அதிகாரிகளை கோர்ட்டுக்கு வந்து ஆஜராக வேண்டும் என்று சொல்வதால், வெகுதூரம் பயணம் செய்து ஐகோர்ட்டுக்கு வரவும், பிறகு விசாரணை முடிந்து திரும்பி செல்லவும் ஓரிரு நாட்கள் ஆகிவிடுகின்றன. இதனால், எங்கள் வேலையிலும் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், ஒரு அதிகாரியை கோர்ட்டில் ஆஜராகச் சொல்லி வலியுறுத்தும்போது, அவர்கள் ஏதோ தவறு செய்துவிட்டதுபோல, ஒரு தோற்றம் கீழ்மட்ட அதிகாரிகளிடம் ஏற்படுகிறது. எனவே, சுப்ரீம் கோர்ட்டு கூறிய இந்த தீர்ப்பை நாங்கள் பெரிதும் வரவேற்கிறோம். எங்கள் முடிவுகள், நடவடிக்கைகள் அரசியல் சட்டத்திற்கோ, மத்திய-மாநில சட்டங்களுக்கோ மீறலாக இருந்தால், ஐகோர்ட்டு அதை ரத்து செய்வதை மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்போம், நடைமுறைப்படுத்துவோம்” என்ற உணர்வில் இருக்கிறார்கள்.

சுப்ரீம் கோர்ட்டு நீதிமன்றங்களுக்கு ஒரு வழியை காட்டிவிட்டது. இதுபோல, சட்டமன்றம், நிர்வாகம், பத்திரிகை ஆகியவையும் அடுத்தவர் எல்லைக்குள் நுழையாமல் இருப்பதற்கு இதுவே வழிகாட்டட்டும்.

Next Story