சாதிவாரி கணக்கெடுப்பு நிச்சயமாக தேவை!


சாதிவாரி கணக்கெடுப்பு நிச்சயமாக தேவை!
x
தினத்தந்தி 25 July 2021 9:41 PM GMT (Updated: 25 July 2021 9:41 PM GMT)

“சாதி பாகுபாடு வேண்டாம், எல்லோரும் சமம்” என்று என்னதான் சொன்னாலும், நாட்டில் சாதிகளை அடிப்படையாக வைத்துத்தான், இதரபிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில், சாதிகள் சார்பில் எங்கள் மக்கள்தொகைக்கேற்ப இடஒதுக்கீட்டில் இத்தனை சதவீதம் வேண்டும்? என்று கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.

எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்தபோது, பல நாட்கள் தலைமைச் செயலகத்தில் ஒவ்வொரு சாதி தலைவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஒவ்வொரு சாதியினரும், தங்களுடைய மக்கள்தொகை இவ்வளவு? என்று சொன்ன கணக்கை கூட்டிப்பார்த்தால், தமிழ்நாட்டின் மக்கள் தொகையைவிட பலமடங்கு வந்தது. இந்த சூழ்நிலையில், கடந்த அ.தி.மு.க. அரசு தேர்தலை சந்திக்கும் நேரத்தில், பா.ம.க. சார்பில் பல ஆண்டுகளாக வன்னியர்களுக்கு 20 சதவீதம் ஒதுக்கீடு வேண்டும் என்று விடுத்து வந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 
பிரிவினருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் 10.5 சதவீதம் வன்னியர்களுக்கும், 7 சதவீதம் சீர்மரபினருக்கும் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்த ஒதுக்கீடு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் வழங்கப்படும் என்றும், தொடர்ந்து சாதிவாரி கணக்கெடுப்பு முடிந்தபிறகு பரிசீலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதையொட்டி, 21-12-2020 அன்று ஓய்வுபெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் தமிழ்நாட்டிலுள்ள சாதிகளின் எண்ணிக்கை, மலைவாழ் மக்களின் எண்ணிக்கையை கண்டறிய தகுந்த நடவடிக்கை எடுக்கும். ஒவ்வொரு சாதியினரும் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்? என்ற புள்ளிவிவரங்களை சேகரிக்கும் என்று கூறப்பட்டது. நீதிபதி குலசேகரனுக்கு துணையாக 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். வீடு, வீடாக சென்று தனி நபரிடமும், குடும்பங்கள் அடிப்படையிலும் சில கேள்விகளை கொடுத்து விவரங்கள் சேகரிக்க படிவம் தயாரிக்கப்பட்டிருந்தது.

கடந்த பிப்ரவரி மாதம் 27, 28-ந் தேதிகளில் சோதனை அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும்2 நாட்கள் 20 ஆயிரம் பேரிடம் இந்த விவரங்களை சேகரிக்க மென்பொருளும் தயார்நிலையில் இருந்தது. ஆனால், அதற்குள் தேர்தல் அறிவிப்பு பிப்ரவரி 26-ந் தேதி வெளியானதால், இந்த பணிகள் தொடங்கப்படவில்லை. இந்த ஆணையத்தின் 6 மாத பதவிகாலமும் 20-6-2021 அன்றைய தேதியோடு முடிவடைந்துவிட்டது. எனவே, நீட்டிப்பு வழங்கலாமா?, வேண்டாமா? என்பது குறித்து அரசு பரிசீலித்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், இந்தியா முழுவதும் இந்த ஆண்டு தொடக்கத்தில், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், கொரோனா பரவல் காரணமாக இந்த பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இந்த கணக்கெடுப்பில், சாதிவாரி கணக்கெடுப்பு இணைக்கப்பட வேண்டும் என்று எல்லோரும் கோரியிருந்த நிலையில், நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த்ராய், “தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் கணக்கெடுப்பைத் தவிர, இதரசாதி கணக்கெடுப்பை நடத்தவேண்டாம்” என்று அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாக அறிவித்துள்ளார்.

ஏற்கனவே, மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது, சாதிவாரி கணக்கெடுப்பையும் மேற்கொள்ளுமாறு மராட்டியம், ஒடிசா, பீகார் மாநில அரசாங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் கணக்கெடுப்பை நடத்தும்போது, இதரசாதி கணக்கெடுப்பையும் சேர்த்து விட்டால், நாட்டிலுள்ள பல சிக்கல்களுக்கு தீர்வுகிடைக்கும் என்றநிலையில், மத்திய அரசாங்கம் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்பது பொதுவான கோரிக்கையாக இருக்கிறது.

மத்திய அரசாங்கம் ஒப்புக்கொள்ளாவிட்டாலும், மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த அரசியல் சட்டம் உரிமை வழங்கியிருக்கிறது என்று சட்டநிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே, தமிழக அரசு உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பை தொடங்கியுள்ள நீதிபதி குலசேகரன் ஆணையத்துக்கு காலநீட்டிப்பு அல்லது புதிதாக வேறு எந்த முறையிலாவது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தலாமா? என்று ஒரு பக்கம் பரிசீலனையும், மற்றொரு பக்கம் மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரி கணக்கெடுப்பையும் கண்டிப்பாக நடத்தவேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் பணியையும் மேற்கொள்ள வேண்டும். சாதிவாரி இடஒதுக்கீடு அடிப்படையில், அரசு சலுகைகள் வழங்கப்படும் முறை அமலில் இருக்கும் வரையில், கண்டிப்பாக சாதிவாரி கணக்கெடுப்பு அவசிய தேவையாக இருக்கிறது.

Next Story