அரசு அலுவலகங்களில் தமிழ் மணம் கமழட்டும்!


அரசு அலுவலகங்களில் தமிழ் மணம் கமழட்டும்!
x
தினத்தந்தி 27 July 2021 10:02 PM GMT (Updated: 27 July 2021 10:02 PM GMT)

தமிழ்நாட்டில், பொதுமக்கள் அரசின் அனைத்து அலுவலகங்களோடும் தொடர்பில் இருக்கிறார்கள். எனவே, அரசு அலுவலகங்களில் முழுமையாக தமிழ் மணம் கமழ்ந்தால்தான், பொதுமக்கள் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும். அதனால்தான், தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் 1956-ம் ஆண்டு இயற்றப்பட்டு 23-1-1957-ல் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது.

அதனடிப்படையில், தமிழக அரசு அலுவலகங்களில் முழுமையாகத் தமிழ்மொழி பயன்படுத்தப்படவேண்டும். எனினும், சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு, மத்திய அரசு, பிற மாநில அரசு அலுவலகங்கள், பொதுத்துறை  நிறுவனங்கள், அயல்நாட்டு தூதரகங்கள், மிகத் தொழில்நுட்பம் வாய்ந்த இனங்கள் போன்றவற்றில் மட்டும் ஆங்கிலத்தில் பயன்பாடு இருக்கலாம் என விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மறைந்த அண்ணா ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபிறகு, 1968-ல் பிறப்பிக்கப்பட்ட ஒரு அரசாணையில், பொதுமக்களிடம் இருந்து தமிழில் வருகிற கடிதங்களுக்கு தமிழிலேயே பதில் எழுதுவதோடு மட்டுமல்லாமல், அவை பற்றிய குறிப்புகள் யாவும் தமிழிலேயே இருக்கவேண்டும் என்று திட்டவட்டமாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்பிறகு, கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஆகியோர் தலைமையில் அரசு அமைந்த நேரங்களில் எல்லாம், மேலும் 8 அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன. இதன்படி, எல்லா அரசு அலுவலகங்களிலும் விலக்கு அளிக்கப்பட்ட இனங்கள் நீங்கலாக, எல்லா கோப்புகளும் தமிழ் மொழியிலேயே இருக்கவேண்டும். அரசுப் பணியாளர்களும் அனைத்து இனங்களிலும் தமிழில் மட்டுமே கையெழுத்திடவேண்டும்.

தமிழக அரசு அலுவலகங்களில் வெளியிடப்படும் கடிதங்கள், அலுவலக ஆணைகள், செய்தி மற்றும் வெளியீடுகளிலும் கிறிஸ்தவ ஆண்டுகள், தமிழ் ஆண்டு திங்கள், நாள் மற்றும் திருவள்ளுவர் ஆண்டையும் பயன்படுத்த வேண்டும். அனைத்து நடவடிக்கைகள், பதிவேடுகள் தமிழில் அமைய வேண்டும். அரசின் துறைத் தலைமை மற்றும் மாவட்ட அலுவலகங்களில் பெயர்ப்பலகைகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முறையே 5:3 விகிதத்தில் அமையப்பெறவேண்டும்.

அரசு தலைமைச் செயலகத்துறைகள் வெளியிடும் அரசாணைகள் ஆங்கிலத்தில் வெளியிடப்படும் நேர்வுகளில், ஆங்கிலத்துடன் தமிழிலும் அவ்வாணைகள் வெளியிடப்படவேண்டும். பொதுவாக அரசாணைகள் தமிழில் மட்டும் வெளியிடப்படவேண்டும். சுற்றாணைக் குறிப்புகள் தமிழிலேயே இருக்கவேண்டும். துறைத் தலைமை அலுவலகங்களில் இருந்து அரசு மற்றும் பிற அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் கருத்துரைகள் தமிழிலேயே இருக்கவேண்டும். துறைத் தலைமை அலுவலகப் பயன்பாட்டில் உள்ள கணினிகள் அனைத்திலும் தமிழ் மென்பொருள் பொருத்தப்படவேண்டும். துறைத் தலைமை அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் படிவங்கள் முடிந்தவரை தமிழிலேயே இருக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

இப்படி, அரசு ஆணைகள் இவ்வளவு தெளிவாக இருந்தாலும் நடைமுறையில் பல அரசு குறிப்புகள், ஆணைகள், செய்திக் குறிப்புகள், கடிதங்கள் எல்லாம் ஆங்கிலத்திலேயே இருப்பது யதார்த்த உண்மையாகும். மேலதிகாரிகள் அரசு கோப்புகளில், பல நேரங்களில் ஆங்கிலத்திலேயே குறிப்புகள் எழுதுகிறார்கள். இந்தநிலையை மாற்ற தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு மிகத் தெளிவாக, அனைத்து துறை செயலாளர்கள், தலைமை அலுவலர்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், “ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளில் குறிப்பிட்டுள்ளபடி, தமிழ் ஆட்சி மொழி சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு அலுவலகங்களில் அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழ் பயன்படுத்தப்படவேண்டும். கம்ப்யூட்டர்களில் மருதம் தமிழ் ஒருங்குறி எழுத்துரு (பாண்ட்) பயன்படுத்தவேண்டும். ஏதாவது சமயங்களில், ஆங்கிலத்தில் அரசாணைகள் வெளியிட அவசியம் ஏற்பட்டால், அது தமிழிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசும், இதுகுறித்து உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்திருக்கிறார். இது நிச்சயமாக வரவேற்கத்தக்கது. அரசு அலுவலகங்களில் தமிழ் பயன்பாடு இருந்தால்தான் பொதுமக்களுக்கு மிக எளிதாக இருக்கும். இதுமட்டுமல்லாமல், அரசு உத்தரவுகள் எல்லாம் இணையதளத்தில் போய்த்தான் பார்க்கவேண்டும் என்றநிலை இல்லாமல், அனைத்து உத்தரவுகளும் பத்திரிகைகளுக்கு செய்திக் குறிப்புகளாக அனுப்பினால், பொதுமக்கள் அறிந்து கொள்ளவும் முடியும், புரிந்துகொள்ளவும் முடியும்.

Next Story