கர்நாடகாவில் புதிய அத்தியாயம்!


கர்நாடகாவில் புதிய அத்தியாயம்!
x
தினத்தந்தி 28 July 2021 7:17 PM GMT (Updated: 2021-07-29T00:47:01+05:30)

கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைத்து 2-வது ஆண்டு நிறைவு விழாவை முடித்த நிலையில், முதல்-மந்திரி பி.எஸ்.எடியூரப்பா தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை சந்தித்தபோதே, அவர் ராஜினாமா செய்யப்போகிறார் என்பது பெரிய எதிர்பார்ப்பாக பரவிக்கொண்டிருந்தது.

இதுவரை எடியூரப்பா 4 முறை முதல்-மந்திரியாக இருந்திருந்தாலும், ஒருமுறை கூட தன் முழு பதவிக்காலத்தை நிறைவு செய்யவில்லை. குறிப்பாக, 2 முறை போதிய மெஜாரிட்டி இல்லாததால், சில நாட்களிலேயே பதவி விலகவேண்டியநிலை ஏற்பட்டது. அவருக்கு இப்போது வயது 78. பா.ஜ.க.வின் கொள்கைப்படி, 75 வயதுக்கு மேல் யாரும் தலைவர் பொறுப்பில் இருக்கக்கூடாது. ஆனால், இவர் மட்டும் விதிவிலக்காக இவ்வளவுநாள் பதவியில் இருந்தார். இப்போது அவரும் பதவி விலகியதன் மூலம் 2 சகாப்தங்கள் முடிவுக்கு வருகிறது. ஒன்று, பா.ஜ.க.வில் 75 வயதுக்கு மேல் பதவியில் இருந்த ஒரேயொருவரின் பதவிக்காலமும் முடிகிறது. அடுத்து, எடியூரப்பாவின் முதல்-மந்திரி சகாப்தமும் முடிவடைகிறது.

கர்நாடக மாநிலம்தான் தென் மாநிலங்களில் பா.ஜ.க.வின் நுழைவு வாயிலாக கருதப்படுகிறது. அங்கு 2008-ல் பா.ஜ.க. தன் சுய பலத்தோடு வெற்றிபெற்று முதல்-மந்திரியாக எடியூரப்பா பொறுப்பேற்றார். அவர் சார்ந்திருக்கும் லிங்காயத் சமுதாயம் கர்நாடக மக்கள் தொகையில் 17 சதவீதமாகும். இந்த சமுதாய மக்கள் எந்த பக்கம் ஓட்டுபோட்டாலும் ஒரே அணியாக நிற்பார்கள். ஒரு காலத்தில் காங்கிரஸ் ஆதரவாளர்களாக இருந்த லிங்காயத் சமுதாயத்தினர், அதே சமுதாயத்தை சேர்ந்த வீரேந்திர பட்டிலுக்கு அளித்த ஆதரவின் காரணமாக 1989-ல் காங்கிரஸ் பெரும்பான்மையான வெற்றியை பெற்று ஆட்சியமைத்தது. ஆனால், 1990-ல் அவரை ராஜீவ்காந்தி பதவி இறக்கம் செய்தார். இதனால், அதுவரை காங்கிரசுக்கு ஆதரவாக இருந்த லிங்காயத் சமுதாயத்தினர், பா.ஜ.க. பக்கம் திரும்பியதால் 1994-ம் ஆண்டு தேர்தலில், காங்கிரஸ் கட்சி மிக மோசமான தோல்வியை தழுவியது.

2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மதசார்பற்ற ஐக்கிய ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்திருந்தது. ஆனால், அங்கிருந்த 17 எம்.எல்.ஏ.க்கள் கட்சித்தாவி பா.ஜ.க.வில் இணைந்ததால் எடியூரப்பா மீண்டும் ஆட்சி அமைத்தார். பின்பு நடந்த இடைத்தேர்தலில் அவர்கள் வேட்பாளர்களாக களமிறங்கியதில் 14 பேர் வெற்றி பெற்றனர். பா.ஜ.க. ஆட்சி 2019-ம் ஆண்டு ஜூலை 26-ந் தேதி பதவியேற்றது. இப்போது, அதேநாளில் எடியூரப்பா பதவி விலகியிருக்கிறார்.

கர்நாடகாவில் பா.ஜ.க.வின் ஆட்சி காலம் இன்னும் 21 மாதங்கள் இருக்கின்றன. அதாவது, 2023 ஏப்ரல்-மே மாதங்களில்தான் அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தொடர்ந்து 10 மாதங்களில் நாடாளுமன்ற தேர்தலும் வர இருக்கிறது. ஏற்கனவே, எடியூரப்பா இதுபோல ஒருமுறை பதவியிழந்த நேரத்தில், தனியாக கட்சி தொடங்கி, தானும் வெற்றிபெறாமல், பா.ஜ.க.வையும் வெற்றிபெறவிடாமல் செய்த கசப்பான அனுபவம் இருக்கிறது. ஆனால், இந்தமுறை அவர், “பா.ஜ.க.வை வலுப்படுத்தவே பாடுபடுவேன். கவர்னர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளமாட்டேன்” என்று உறுதிப்பட தெரிவித்துவிட்டார். எனவே, இனி அவர் ஆற்றப்போகும் கட்சிப்பணியில்தான் லிங்காயத் சமுதாயத்தினரின் பங்கு இருக்கப்போகிறது.

இந்தநிலையில் எடியூரப்பாவின் நம்பிக்கைக்குரியவரும், லிங்காயத் தலைவர்களில் ஒருவரும், உள்துறை மந்திரியுமான வட கர்நாடகத்தை சேர்ந்த 61 வயது பசவராஜ் பொம்மை கர்நாடக மாநிலத்தின் முதல்-மந்திரி பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, பதவி ஏற்றார். இவரது தந்தையான மறைந்த எஸ்.ஆர்.பொம்மை மத்திய மந்திரியாகவும், கர்நாடக முதல்-மந்திரியாகவும் பதவி வகித்து இருக்கிறார். பசவராஜ் பொம்மைக்கு பெரும் பொறுப்பு காத்திருக்கிறது. அடுத்து வரப்போகும் சட்டசபை, நாடாளுமன்ற தேர்தல்களில் பா.ஜ.க. தொடர்வெற்றி பெறுவதற்காக அடித்தளம் அமைக்கவேண்டிய முக்கிய பொறுப்பு மட்டுமல்லாமல், கொரோனா அலை, வெள்ளச்சேதம், தமிழக அரசுடன் நல்லுறவு போன்ற பல பொறுப்புகளை தொடக்கத்தில் இருந்தே தோளில் சுமக்கவேண்டிய நிலை அவருக்கு இருக்கிறது.Next Story