சட்டமன்ற பணியில் துரைமுருகனின் 50 ஆண்டுகள்


சட்டமன்ற பணியில் துரைமுருகனின் 50 ஆண்டுகள்
x
தினத்தந்தி 24 Aug 2021 7:46 PM GMT (Updated: 2021-08-25T01:16:35+05:30)

தமிழக சட்டமன்றத்தில் முதல் மானியக்கோரிக்கையாக புதிதாக உருவாக்கப்பட்ட நீர்வளத்துறையின் மானியக்கோரிக்கை எடுத்துக்கொள்ளப்பட்டது.

தமிழக சட்டமன்றத்தில் முதல் மானியக்கோரிக்கையாக புதிதாக உருவாக்கப்பட்ட நீர்வளத்துறையின் மானியக்கோரிக்கை எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த கோரிக்கையை தாக்கல் செய்த அமைச்சர் துரைமுருகனுக்கு பல சிறப்புகள் உண்டு. அமைச்சரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார். தி.மு.க.வில் தலைவருக்கு அடுத்தபடியாக பொதுச்செயலாளராகவும், அவையின் முன்னவராகவும் உள்ளார். இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைக்கும் வகையில் 100 ஆண்டு வரலாறு கொண்டிருக்கும் சட்டசபையில் 50 ஆண்டுகளுக்கு முன்பு வந்தவர் துரைமுருகன். 1971-ம் ஆண்டு காட்பாடி தொகுதியில் முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட துரைமுருகன், அதே தொகுதியில் 8 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ராணிப்பேட்டை தொகுதியில் 2 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு இப்போது ஒரு மூத்த உறுப்பினராக மட்டுமல்லாமல், 50 ஆண்டுகள் சட்டசபையில் இருந்த வரலாற்றையும் படைத்துவிட்டார்.

இந்த துறை என்பது மிகவும் முக்கியமான துறை. அண்ணா அமைச்சரவையில் இந்த துறையின் பொறுப்பை மறைந்த தலைவர் கலைஞரிடம் ஒப்படைத்தார். அந்த நம்பிக்கையில், அந்த உணர்வுப்பூர்வமான எண்ணத்தில், 1989-90-ல் கலைஞர் அந்த துறையை துரைமுருகனிடம் வழங்கினார். அண்ணா எந்த உணர்வுப்பூர்வமாக என்னிடம் இந்த துறையை ஒப்படைத்தாரோ?, அதே உணர்வுப்பூர்வமாகத்தான் உன்னிடம் இந்த துறையை ஒப்படைக்கிறேன் என்று கலைஞர் கொடுத்தார். பொதுப்பணித்துறைதான் இப்போது நீர்வளத்துறை என்று தனியாக உருவாக்கப்பட்டிருக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னதுபோல, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து ஆறுகளின் பெயர்களையெல்லாம் அப்படியே மடை திறந்த வெள்ளம்போல சொல்லும் ஆற்றல் கொண்டவர் துரைமுருகன். கலைஞர் ஆட்சியின்போது பத்திரிகை நிருபர்கள் கூட்டத்தில் தமிழ்நாட்டிலுள்ள ஆறுகள், அணைகளின் பெயர்களையெல்லாம் மின்னல்வேகத்தில் ஒரு பிசிறு இல்லாமல் சொல்லி காட்டியவர்.

அவருடைய அறையில் பள்ளிக்கூடங்களில் இருப்பதுபோல ஒரு கரும்பலகை இருக்கும். நிருபர்கள் கூட்டத்தில் காவிரி ஓடிவரும் வழியென்றாலும் சரி, மற்ற எந்த ஆறுகள், அணைகள் என்றாலும் சரி அதை படம் போட்டு காட்டி விளக்குவார். அவர் அமைச்சராக இருந்த காலத்தில் 20-க்கும் மேற்பட்ட அணைகளை கட்டி சாதனை புரிந்திருக்கிறார். கலைஞரின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருந்த பெருமையை பெற்றதுபோல, மறைந்த முதல்-அமைச்சர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் அன்பையும் பெற்றவர். அவர் தன் படிப்புக்கு உதவினார் என்பதை இன்றும் பெருமையாக கூறுபவர் துரைமுருகன். எம்.ஜி.ஆரும் இறுதிவரை உடன்பிறந்த தம்பிபோல பாசம் பொழிந்தார். துரைமுருகன் திருமணத்தில் கலந்துகொள்வதற்கு படப்பிடிப்பில் மும்பையிலிருந்த எம்.ஜி.ஆர்., தனி விமானம் எடுத்துவந்து வாழ்த்தினார். துரைமுருகன் இருக்குமிடத்தில் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது. நல்ல நகைச்சுவையோடும், அதுபோல பொருள் நயத்தோடும் பேசுபவர் துரைமுருகன்.

இந்த ஆண்டின் முதல் மானியக்கோரிக்கையில் அவர் 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டின் பல பகுதி மக்கள் கனவு கண்டிருந்த பலத்திட்டங்களை, நிறைவேற்றும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். கொள்கை விளக்கக்குறிப்புகளிலே காவிரி, கொள்ளிடம், தாமிரபரணி ஆறுகள் குறுக்கே கதவணைகள் அமைக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்ட பல அறிவிப்புகளையும் உறுதிப்படுத்தினார். 10 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் ஆயிரம் தடுப்பணைகள், கதவணைகள் கட்டப்படும் என்று அறிவித்த அவர், இந்த ஆண்டு 190 தடுப்பணைகள், 4 தரைக்கீழ் தடுப்பணைகள், 6 கதவணைகள், 2 கடைமடை நீரொழுங்கிகள், 12 அணைக்கட்டுகள் போன்ற புதிய கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், பிரதமரின் வேளாண் நீர்ப்பாசனத்திட்டத்தின் கீழ் 23 மாவட்டங்களில் 200 குளங்கள் புனரமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

சட்டமன்ற உறுப்பினர்களிடம் யார், யாருக்கு எந்த இடத்தில் தடுப்பணைகள் வேண்டும்? என்று கோரிக்கை மனு தரச்சொல்லியிருக்கிறார். ஆக இனி சட்டமன்ற உறுப்பினர்கள் கையில்தான் இருக்கிறது. அவர்கள் தங்கள் தொகுதியில் எங்கெங்கு தடுப்பணைகள் வேண்டும்? என்ற பட்டியலை அமைச்சர் துரைமுருகனிடம் வழங்க வேண்டும். பொதுமக்களும் தங்கள் பகுதியில் தடுப்பணைகள் வேண்டுமென்றால், அமைச்சரிடம் மனு கொடுக்க தங்கள் சட்டமன்ற உறுப்பினரை வலியுறுத்த வேண்டும்.

Next Story