‘பூஸ்டர் டோஸ்' எப்போது போட வேண்டும்?


‘பூஸ்டர் டோஸ் எப்போது போட வேண்டும்?
x
தினத்தந்தி 26 Aug 2021 7:54 PM GMT (Updated: 2021-08-27T01:24:01+05:30)

உலகம் முழுவதையுமே உலுக்கிக்கொண்டிருக்கும் கொடிய கொரோனா தமிழ்நாட்டில் கால்பதித்து 17 மாதங்கள் ஆகிவிட்டன.

உலகம் முழுவதையுமே உலுக்கிக்கொண்டிருக்கும் கொடிய கொரோனா தமிழ்நாட்டில் கால்பதித்து 17 மாதங்கள் ஆகிவிட்டன. விரட்டி, விரட்டி பார்த்தாலும் போவதுபோல் இல்லை. பதுங்குவதும், பாய்வதுமாக இருக்கிறது. முதல் அலையில் இந்தியா முழுவதும் ஒரேவகையான கொரோனா இருந்தது. தொடர்ந்து, அந்த கொரோனா வைரஸ் உருமாற்றங்கள் தன் பாதிப்பை நடத்திக்கொண்டிருக்கிறது. கொரோனா வராமல் தடுக்க தடுப்பூசிகள் போடுவது மிகவும் அவசியம் என்று உலக சுகாதார நிறுவனமே கூறியது. கோவிஷீல்டு, கோவாக்சின் இரண்டுமே 2 டோஸ்கள் போடவேண்டும்.

கோவிஷீல்டு முதல் டோஸ் போட்டு 84 நாட்கள் கழித்து, 2-வது டோஸ் போடவேண்டும் என்றும், கோவாக்சின் முதல்டோஸ் போட்டு 28 நாட்கள் கழித்து 2-வது டோஸ் போடவேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. இந்தநிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும், ‘டெல்டா’ வகை கொரோனா தொற்றுத்தாக்குதல் இருக்கிறது என்று கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதேநேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் கொரோனாவால் உயிரிழப்பது மிக, மிக குறைவு என்றும் தெரிவித்துள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு கொரோனா வரும்போது வந்த சுவடு தெரியாமல் அதிக பாதிப்பில்லாமல் போய்விடுகிறது.

இதற்கு காரணம் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளை பொறுத்தமட்டில் முதலாவதாக பரவிய கொரோனா வகைக்கு எதிரான நோய் எதிர்ப்பு ஆற்றலையே அதிகம் கொண்டது. அதனால்தான் அதிலிருந்து உருமாற்றமடைந்த ‘டெல்டா’ வகை கொரோனாவுக்கு எதிரான தடுப்பாற்றல் இந்த தடுப்பூசிக்கு மிக, மிக குறைவாக இருக்கிறது. உலக புகழ்பெற்ற மருத்துவ இதழான, ‘லான்செட்’டில் ஆஸ்டிரா ஜெனகா தடுப்பூசி அதாவது கோவிஷீல்டு தடுப்பூசி போட்டு 2 அல்லது 3 மாதங்களில் அல்லது 10 வாரங்களில் அதன் நோய் எதிர்ப்பு ஆற்றல் 50 சதவீதம் குறைகிறது என்று கூறியுள்ளது.

பொதுவாகவே தடுப்பூசி மருந்தின் சக்தி 8 முதல் 12 மாதங்கள் வரைதான் இருக்கும் என்று தகவல்கள் கூறப்பட்டாலும், எவ்வளவு நாட்களுக்கு தடுப்பூசியின் வீரியம் இருக்கும் என்பது பற்றி இன்னும் உறுதியான ஆய்வு முடிவுகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்தநிலையில், அமெரிக்கா உள்பட பல நாடுகளில் ‘பூஸ்டர் டோஸ்’ என்று கூறப்படும் 3-வது டோஸ் தடுப்பூசி போடும் பணியை தொடங்கிவிட்டார்கள். இஸ்ரேல் நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கடந்த மாதமே ‘பூஸ்டர் டோஸ்’ போடும் பணிகள் தொடங்கிவிட்டன. இந்தியாவிலும் 2 டோஸ் போட்டவர்களுக்கு ‘பூஸ்டர் டோஸ்’ வேண்டுமா? அப்படி வேண்டுமென்றால் எத்தனை மாதம் கழித்து போட்டுக்கொள்ள வேண்டும்? என்பதற்கான ஆய்வுகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் போன்ற நிறுவனங்கள் மேற்கொண்டு, உடனடியாக தெரிவிக்க வேண்டும். அதற்குரிய அறிவிப்புகளை மத்திய அரசாங்கம் வெளியிட்டு, தமிழக அரசுக்கு தேவையான தடுப்பூசிகளை வழங்க வேண்டும்.

ஆரம்பகாலத்தில் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசி மருந்துகள் மட்டுமே கிடைத்துக்கொண்டிருந்த நேரத்தில் தற்போது ஸ்புட்னிக் தடுப்பூசி மருந்தும் கிடைக்கிறது. மேலும் மாடர்னா, ஜான்சன் அன்ட் ஜான்சன், ஜைடஸ் கேடிலா போன்ற தடுப்பூசி நிறுவனங்களுக்கும் அவசரகால பயன்பாட்டுக்கான ஒப்புதல் இந்தியாவில் வழங்கப்பட்டுள்ளது. எனவே இன்னும் எவ்வளவு மருந்து கம்பெனிகளுக்கு அவசரகால பயன்பாட்டுக்கான ஒப்புதல் வழங்கவேண்டுமோ, அதை வழங்குவதோடு மட்டுமல்லாமல், செங்கல்பட்டு, குன்னூர் போன்ற இடங்களில் தடுப்பூசி மருந்துகள் தயாரிக்க இருக்கும் வாய்ப்பு, வசதிகளை பயன்படுத்தி உடனடியாக உற்பத்திகளை தொடங்க வேண்டும்.

‘பூஸ்டர் டோஸ்’ பொறுத்தமட்டில் ஒரு தெளிவான அறிவிப்பு சில நாட்களில் வந்தால்தான் ஜனவரி மாதத்திலிருந்து முதல் தடுப்பூசி டோஸ் போட்டுக்கொண்டவர்கள் ‘பூஸ்டர் டோஸ்’ போடும் காலம் வந்துவிட்டதா? எவ்வளவு காலத்தில் போடவேண்டும் என்பதற்கு தயாராக இருப்பார்கள். தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் மக்களுக்கு தடுப்பூசி போட தயக்கம் இல்லை. தேவையான அளவு தடுப்பூசி மருந்துகள்தான் வேண்டும்.

Next Story