‘பூஸ்டர் டோஸ்’ போடும் முனைப்பில் உலக நாடுகள்!


‘பூஸ்டர் டோஸ்’ போடும் முனைப்பில் உலக நாடுகள்!
x
தினத்தந்தி 29 Oct 2021 9:46 PM GMT (Updated: 2021-10-30T03:16:13+05:30)

உலகில் 36 நாடுகள் இப்போது ‘பூஸ்டர் டோஸ்’ போட தொடங்கிவிட்டன.

நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அந்த மாவட்டத்தில் அனைவருக்கும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுவிடவேண்டும் என்ற முனைப்பில் மிகத்தீவிரமாக செயலாற்றி வருகிறார். முககவசம் அணிவதிலும் மக்களிடையே மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். 2 டோஸ் தடுப்பூசி போடாதவர்களுக்கு ‘டாஸ்மாக்’ கடைகளில் மதுபானங்கள் விற்பனை கிடையாது என்று முதலில் செயல்படுத்தியவர் என்றாலும், 2 டோஸ் தடுப்பூசி போட்ட அவருக்கும் இப்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது ‘பூஸ்டர் டோஸ்’ தேவையா?, கட்டாயமா? என்ற கேள்விகளை மக்களிடையே எழுப்பியுள்ளது.

பொதுவாக தடுப்பூசிபோட தொடங்கிய காலத்தில் சில தடுப்பூசிகள் 2 டோஸ் தேவை, ஒரு சில தடுப்பூசிகள் ஒரு டோஸ் மட்டும் போதும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த ஒரு டோசோ அல்லது 2 டோசோ போட்டபிறகு அதன் செயல்திறன், வீரியம் சற்று ஏறக்குறைய 8 மாதங்கள்தான் இருக்கும் என்று கூறப்பட்டது. 8 மாதங்கள்தான் அதன் வீரியம் இருக்கும் என்றால், அதன்பிறகு ‘பூஸ்டர் டோஸ்’ அல்லது 3-வது தவணை தடுப்பூசிபோட வேண்டுமா? என்ற கருத்து மக்களிடையே இப்போது ஆழமாக பதிந்துவிட்டது.

உலகில் 36 நாடுகள் இப்போது ‘பூஸ்டர் டோஸ்’ போட தொடங்கிவிட்டன. அதிலும் குறிப்பாக இங்கிலாந்து நாட்டில் 68 சதவீத மக்களுக்கு 2 டோஸ் தடுப்பூசிபோட்ட பிறகும் இப்போது அங்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதேபோல பிரான்ஸ் நாட்டில் 76 சதவீத மக்கள் முழுமையாக தடுப்பூசிபோட்ட பிறகும் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டிருக்கிறது. உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் எல்லா நாடுகளிலும் ‘பூஸ்டர் டோஸ்’ போடும் திட்டம் மிகத்தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

ஜெர்மனி நாட்டில் 29-12-2020 அன்று பூஸ்டர் டோஸ் போட தொடங்கினார்கள். பிரான்ஸ் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதமும், இஸ்ரேல் நாட்டில் கடந்த ஜூலை மாதமும் போட தொடங்கிவிட்டார்கள். அமெரிக்காவில் கடந்த மாதம் 26-ந்தேதி ‘பூஸ்டர் டோஸ்’ போட தொடங்கி, இப்போது அங்கு ஒரு கோடியே 25 லட்சம் பேர்களுக்கு மேல் ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இஸ்ரேல் நாட்டில் 100-ல் 44.34 சதவீத பேருக்கு ‘பூஸ்டர் டோஸ்’ போடப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் தடுப்பூசிபோட்டு முடித்த மக்களுக்கு அவர்களுடைய எதிர்ப்பு சக்தி, மருத்துவப்பாதுகாப்பு காலப்போக்கில் தேவையான அளவு குறையும்நேரத்தில் ‘பூஸ்டர் டோஸ்’ போடப்படுகிறது. ‘பூஸ்டர் டோஸ்’ போட வேண்டியதன் நோக்கம் தடுப்பூசி செயல்திறன் தேவையான அளவு குறைந்த நேரத்தில் அதை மீண்டும் புதுப்பிப்பதுதான்.

மேலும் எதிர்ப்பு சக்தி குறைதல் அல்லது பூஸ்டர் ஷாட்டுக்கான தேவை என்பது ஒவ்வொரு தடுப்பூசி மருந்துக்கும் வித்தியாசமான அளவு இருக்கும் என்றும் அது கூறியுள்ளது. இந்தியாவை பொறுத்தமட்டில் கடந்த ஜனவரி 16-ந்தேதி தடுப்பூசிபோட தொடங்கி நேற்று வரை 54.5 சதவீதம் பேருக்கு ஒரு டோஸ் தடுப்பூசியும், 24.1 சதவீதம் பேர்கள்தான் 2 டோஸ் தடுப்பூசியும் போட்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 70 சதவீத மக்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசியும், 29 சதவீத மக்களுக்கு 2 டோஸ் தடுப்பூசியும் போட்டாகிவிட்டது.

பொதுவாக இந்தியாவில் ஒரு கணிசமான அளவு மக்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்டு 8 மாதங்கள் ஆகிவிட்ட சூழ்நிலையில் அத்தகையவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து ‘பூஸ்டர் டோஸ்’ என்று கூறப்படும் 3-வது தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்ற கோரிக்கை இப்போது வலுக்கிறது. தடுப்பூசி உற்பத்தி இப்போது போதுமான அளவு இருப்பதால் 2 டோஸ் போட்டு முடித்தவர்களில் 8 மாதங்கள் ஆனவர்களுக்கு ‘பூஸ்டர் டோஸ்’ போடுவது சாலச்சிறந்தது.

Next Story