சிறுசேமிப்பு திட்டங்களில் மாற்றம் இல்லாத வட்டி!


சிறுசேமிப்பு திட்டங்களில் மாற்றம் இல்லாத வட்டி!
x
தினத்தந்தி 9 Nov 2021 8:03 PM GMT (Updated: 2021-11-10T01:33:27+05:30)

சேமிப்பு என்பது மனித வாழ்க்கையில் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்கவேண்டிய முக்கியமான நடைமுறையாகும்.

சேமிப்பு என்பது மனித வாழ்க்கையில் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்கவேண்டிய முக்கியமான நடைமுறையாகும். சின்னஞ்சிறு எறும்புக்கூட மழைக்காலத்துக்காக தன் உணவை சேமித்து வைக்கிறது. அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய தொழிலதிபர் வாரன் பப்பெட். இவர், உலகிலேயே மிகவும் வெற்றிகரமான முதலீட்டாளர் என்று கருதப்படுபவர். அவர் சேமிப்பின் அவசியம் குறித்து வெளியிட்ட ஒரு கருத்தை, ஒவ்வொருவரும் நெஞ்சில் பதித்துவைத்து, கடைப்பிடிக்கவேண்டியதாகும். “நீ செலவழித்துவிட்டு மீதி இருக்கும் பணத்தை சேமிக்கவேண்டும் என்று நினைக்காதே. உனக்கு தேவையானவற்றை சேமித்து வைத்துவிட்டு மீதி பணத்தை செலவழி” என்பதுதான் அந்த நன்மொழி ஆகும்.

இது சேமிப்பில் ஒரு புதிய கோணத்தை எல்லோருக்கும் கற்றுக்கொடுக்கிறது. இன்றைய காலக்கட்டத்தில் முதிர்வயதுக்கு என்றாலும் சரி, பிள்ளைகளின் திருமணம், கல்வி, மருத்துவசிகிச்சை போன்ற எதிர்பாராத செலவுகளுக்கானாலும் சரி, சேமிப்புதான் முக்கியமாக கை கொடுக்கும். தற்போது, மக்கள் இதை நன்றாக புரிந்துகொண்டார்கள். அரசு பணியில் உள்ளவர்களுக்கு ஓய்வூதியம் உண்டு. ஆனால், மற்ற நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கென்றாலும் சரி, வியாபாரம் செய்பவர்களுக்கென்றாலும் சரி, விவசாயம் செய்பவர்களுக்கென்றாலும் சரி, ஓய்வூதியம் இல்லாதநிலையில், தங்கள் அவசர தேவைக்கும், முதிர்வயதுக்கும் சேமிப்புதான் கைகொடுக்கும் என்றவகையில், தாங்கள் பணியாற்றும் காலத்தில், உழைக்க உடலில் தெம்பு இருக்கும் காலத்தில் சேமித்து வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு கணக்குப்படி, இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் மக்கள்தொகை 13 கோடியே 80 லட்சம் ஆகும். 2031-ல் இந்த எண்ணிக்கை 19 கோடியே 40 லட்சம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 75 லட்சம் முதியோர் உள்ளனர். 2030-ல் இந்த எண்ணிக்கை, 1.5 கோடியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்தநிலையில், மக்கள் வங்கியில் சேமிப்பதைவிட தபால் அலுவலகங்களில் உள்ள 12 வகையான சேமிப்புகளில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள்.

3 மாதங்களுக்கு ஒருமுறை இதற்கான வட்டித்தொகையை அரசு மாற்றியமைக்கிறது. இப்போது, அக்டோபர் மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரையிலான 3 மாத காலங்களுக்கான வட்டித்தொகையில் எந்தவித மாற்றமும் இல்லை என்று அரசு அறிவித்திருப்பது நிச்சயம் பாராட்டுக்குரியது. மகிழ்ச்சிக்குரியது. வரவேற்புக்குரியது. சிறுசேமிப்புக்கு தற்போது வழங்கப்படும் வட்டி விகிதம் 4 சதவீதத்தில் இருந்து மூத்த குடிமக்களுக்கு வழங்கும் 7.4 சதவீதம் வரை இருக்கிறது. பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சிறுசேமிப்புக்கு மட்டும் 7.6 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

சேமிப்பாளர்களை பொறுத்தமட்டில் இப்போதுள்ள விலைவாசியில் சமாளிக்கவேண்டிய மருத்துவசெலவில் இந்த வட்டிவிகிதம் போதாது. இன்னும் சற்று உயர்த்தவேண்டும் என்பதே எல்லோருடைய நியாயமான எதிர்பார்ப்பும் ஆகும். சிறுசேமிப்பாளர்களுக்கு மற்றொரு குறை, நாங்கள் எங்கள் வருமானத்துக்கு முறையாக வரி செலுத்திவிட்டு, வாயை கட்டி, வயிற்றை கட்டி சேமிக்கும் பணத்தை தபால்அலுவலகங்களில் சிறு சேமிப்புக்காக முதலீடு செய்தால், அதில் கிடைக்கும் வட்டிக்கும் வருமான வரி கட்டவேண்டியது இருக்கிறதே என்பதுதான். நாங்கள் புதிதாக சம்பாதிக்கவில்லை. ஏற்கனவே சம்பாதித்த பணத்துக்கு வரி கட்டிய பிறகுதானே சேமித்தோம்.

ஒரே பணத்துக்கு இரு முறை வரியா? என்று கோரிக்கை விடுக்கிறார்கள். 60 வயது குறைந்தவர்களுக்கு சிறுசேமிப்பு மூலமாக கிடைக்கும் வட்டிக்கு ரூ.10 ஆயிரம் வரையும், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ரூ.50 ஆயிரம் மட்டுமே வருமான வரி விலக்கு என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆண்டு முழுவதும் சிறுசேமிப்பு வட்டி வருமானத்தை வைத்து வாழ்க்கையை ஓட்ட நினைக்கும் மூத்த குடிமக்களுக்கு இந்த வரம்பை நீக்குவதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு வருமான வரியில் இருந்து முழுமையான விலக்கும் அளித்து, சேமிப்பை ஊக்குவிக்க ஒரு ஊக்குவிப்பு தொகையும் மத்தியஅரசாங்கம் வழங்கவேண்டும் என்பதே மூத்த குடிமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Next Story