வேலைவாய்ப்புகளை பெருக்கும் மூலதன செலவுகள்!


வேலைவாய்ப்புகளை பெருக்கும் மூலதன செலவுகள்!
x
தினத்தந்தி 22 Nov 2021 9:15 PM GMT (Updated: 22 Nov 2021 9:15 PM GMT)

குத்துச்சண்டை போட்டியில் ஒரு வீரர், சில நேரங்களில் எதிராளியின் தாக்குதலை தாங்கமுடியாமல் கீழே விழுந்து கிடப்பார்.

குத்துச்சண்டை போட்டியில் ஒரு வீரர், சில நேரங்களில் எதிராளியின் தாக்குதலை தாங்கமுடியாமல் கீழே விழுந்து கிடப்பார். “அவ்வளவுதான். அவரால் இனி எழுந்து தன் ஆட்டத்தை தொடர முடியாது” என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில், திடீரென வீறுகொண்ட வேங்கையாக எழுந்து, புயல்போல தாக்குதலை தொடர்ந்து வெற்றிவாகை சூடுவார்.

அதுபோலத்தான், கொரோனா பாதிப்பினால் பெரும் வீழ்ச்சியை கண்ட நம் நாடு, கொரோனா பாதிப்பு குறைய.. குறைய.. பொருளாதாரத்தில் வேகமாக வளர்ச்சியடைய தொடங்கியுள்ளது. இந்த வளர்ச்சி இன்னும் வேகம் பெறவேண்டும். அதுமட்டுமல்லாமல், நீடித்த வளர்ச்சியாகவும், இரட்டை இலக்க வளர்ச்சியாகவும் கொண்டு செல்வதற்கான முயற்சிகளை மத்திய - மாநில அரசுகள் மிகத் தீவிரமாக எடுத்துவருகிறது.

பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படை உள்கட்டமைப்பு திட்டங்கள் மேம்படவேண்டும், உற்பத்தி வளரவேண்டும், அதன்மூலம் வேலைவாய்ப்பு பெருகவேண்டும். மத்திய அரசாங்கம், தற்போது உள்கட்டமைப்பு திட்டங்கள் உள்பட மாநில அரசுகளின் மூலதன செலவுகளை ஊக்குவிக்கும் வகையில், மத்திய வரி பகிர்வை 2 தவணைகளாக சேர்த்து ரூ.95,082 கோடியை விடுவிக்கப்போவதாக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளது மிகவும் வரவேற்புக்குரியது.

மத்திய அரசாங்கம் அனைத்து மாநிலங்களிலும் வசூலிக்கும் மத்திய வரியில், 41 சதவீதம் 14 தவணைகளாக மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. அந்தவகையில், இந்த மாதம் ஒரு தவணை தொகையாக ரூ.47,541 கோடி வழங்கப்படவேண்டும். ஆனால், தற்போது அதை இருமடங்காக உயர்த்தி ரூ.95,082 கோடி வழங்க மத்திய அரசாங்கம் எடுத்த முடிவு, நிச்சயமாக மாநிலங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இதுபோல, நாடாளுமன்ற தொகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகள், நிலையான சமுதாய சொத்துகளை உருவாக்குதல், அடிப்படை வசதிகள், சமுதாய உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற செலவுகளுக்காக, ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.5 கோடி ஒதுக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இதேபோல், 18 மாநிலங்களவை உறுப்பினர்களும் இருக்கிறார்கள். புதுச்சேரியில் தலா ஒரு மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 கோடி நிதியாக கையில் வழங்கப்படுவதில்லை. மக்களவை உறுப்பினர்கள் தங்களது தொகுதியிலும், மாநிலங்களவை உறுப்பினர்கள் தமிழ்நாட்டில் எந்த இடத்திலும் இந்த தொகைக்கான திட்டங்களை பரிந்துரை செய்யலாம். மாவட்ட கலெக்டர் அந்த திட்டங்களுக்கு ஏற்பு வழங்கி ஒப்புதல் அளித்தவுடன் நிதி ஒதுக்கப்படும்.

பேரிடர் நேரங்களில் இரு அவை உறுப்பினர்களும், பாதிக்கப்பட்ட இடங்களில் ரூ.25 லட்சம் மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கலாம். கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் 6-ந்தேதி, மத்திய அரசாங்கம் கொரோனாவை சமாளிக்க தனக்கு நிதி தேவைப்படுகிறது என்ற காரணத்தால், 2 நிதியாண்டுகளுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்குவதை நிறுத்திவைத்திருந்தது. இப்போது கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டெழும் சூழ்நிலையில், 1½ ஆண்டுகள் கழிந்த நிலையில், அடுத்த 6 மாதங்களுக்கு ரூ.2 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் நிலையான சொத்துக்களை உருவாக்க, கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்க இந்த நிதி உதவும் என்றாலும், இப்போதுள்ள சூழ்நிலையில் மாணவர்களுக்கு, அதிலும் குறிப்பாக ஏழை எளிய மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன், லேப்டாப் போன்ற உபகரணங்கள் வழங்குவதற்கு, இந்த தொகையை செலவழிக்க மத்திய அரசாங்கம் ஒப்புதல் வழங்குமாறு கோரிக்கை விடுக்கிறார்கள். இது நியாயமான கோரிக்கை, ஏழை மாணவர்களுக்கு பயனளிக்கும் கோரிக்கை. இதை மத்திய அரசாங்கம் பரிசீலிக்கவேண்டும்.

இதுபோல, தமிழ்நாட்டிலும் நிறுத்திவைக்கப்பட்டிருந்த உறுப்பினர் மேம்பாட்டு நிதியும் தற்போது ஒரு உறுப்பினருக்கு ரூ.3 கோடி வீதம் வழங்கப்படுகிறது. இந்தத் தொகையையும் மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்க பயன்படுத்துவதற்கு தமிழக அரசு அனுமதிக்கவேண்டும் என்பது பொதுவான கோரிக்கையாக இருக்கிறது.

Next Story