ரேஷன் கடைகளில் கருப்பட்டி!


ரேஷன் கடைகளில் கருப்பட்டி!
x
தினத்தந்தி 29 Nov 2021 8:15 PM GMT (Updated: 29 Nov 2021 8:15 PM GMT)

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வெளியான 505 வாக்குறுதிகளில், “ரேஷன் கடைகளில் மற்ற பொருட்களுடன் பனை வெல்லமும் விற்பனை செய்யப்படும்” என்ற அறிவிப்பும் இடம் பெற்றிருந்தது.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வெளியான 505 வாக்குறுதிகளில், “ரேஷன் கடைகளில் மற்ற பொருட்களுடன் பனை வெல்லமும் விற்பனை செய்யப்படும்” என்ற அறிவிப்பும் இடம் பெற்றிருந்தது. அதை நிறைவேற்றும் வகையில், நவம்பர் 1-ந்தேதி முதல் பனை வெல்லம் என்று பொதுவாக அழைக்கப்படும் கருப்பட்டி ரேஷன் கடைகளில் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சியான செய்தி.

ஏற்கனவே, வேளாண் துறை பட்ஜெட்டில், “தமிழகத்தில் 76 லட்சம் பனை விதைகளையும், ஒரு லட்சம் பனங்கன்றுகளையும் மானியத்தில் வழங்கி, ஏரிக்கரைகளிலும், சாலையோரங்களிலும் வளர்க்க ஏற்பாடு செய்யப்படும். ஆரோக்கியத்தை தரும் பனங்கற்கண்டு, பதநீர், கருப்பட்டி போன்றவை பிரபலப்படுத்தப்படும். ரேஷன் கடைகளில் கருப்பட்டி வினியோகிக்கப்படும். பனை மரங்களை வெட்ட தடை விதிக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டது.

சொன்னதை உடனடியாக நிறைவேற்றும் வகையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நடத்தும் அமுதம் நியாயவிலை கடைகளிலும், கூட்டுறவுத்துறை நடத்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட ரேஷன் கடைகளிலும் கருப்பட்டி விற்க அனுமதிக்கப்படும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவில், “கருப்பட்டி விற்பனை விருப்பத்தின் அடிப்படையிலேயே அமைந்திடவேண்டும். 100 கிராம், 250 கிராம், அரை கிலோ என்ற எடையில் விற்கப்படவேண்டும்” என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பை விரைந்து செயல்படுத்தும் வகையில், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, கதர் கிராம தொழில் வாரிய தலைமைச் செயல் அலுவலர் பொ.சங்கர் ஆகியோர் மின்னல் வேகத்தில் நடவடிக்கை எடுத்தனர். சில வாரங்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘கற்பகம்’ என்ற பெயரில் ரேஷன் கடைகளில் கருப்பட்டி விற்பனை செய்வதையும், பல்பொருள் அங்காடிகளில் ‘கரும்பனை’ என்ற பெயரில் கருப்பட்டி விற்பனை செய்வதையும் தொடங்கிவைத்தார்.

இதுவரை 10 டன் கருப்பட்டி ரேஷன் கடைகளுக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் இது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மழைகாலம் முடிந்தவுடன் விற்பனை அதிகரிக்கும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள். கற்பகத்தரு, கற்பகவிருட்சம் என்று தமிழக மக்களின் வாழ்க்கை, கலாசாரத்தோடு பின்னிப்பிணைந்த பனை மரம் பல சிறப்புகளை கொண்டது. செம்மொழியான தமிழ்மொழியின் எழுத்துக்கள், முதலில் எழுதப்பட்டது பனை ஓலையில்தான்.

அடி முதல் நுனிவரை அத்தனை பாகங்களும் பயன்தருபவை. கருப்பட்டி மட்டுமல்ல, பனங்கற்கண்டு, பனை நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு போன்ற உண்ணும் பொருட்களையும், பனந்தும்பு, பனை நார், பனை ஓலை பெட்டி போன்ற பயன்படுத்தும் பொருட்களையும் தருகின்றன. பனை மரம் வளர்க்க பெரிய செலவு எதுவும் செய்ய வேண்டியதில்லை. நிலத்தடி நீரை கொண்டு தானாகவே வளரும். சேர மன்னர்கள் போரில் வென்ற பிறகு, பனம் பூவை சூடிக்கொண்டதாக வரலாறு இருக்கிறது. சில கோவில்களில் பனை மரமே தலமரமாகவும் உள்ளது. காஞ்சீபுரம் அருகேயுள்ள திருப்பனங்காடு கிருபாநிதீஸ்வரர் கோவிலில் உள்ள 15-ம் நூற்றாண்டு கல்வெட்டில், “உயிருள்ள பனை மரங்களை வெட்டக்கூடாது” என்ற உத்தரவு உள்ளது. அந்த உத்தரவை இப்போது தமிழக அரசு செயல்படுத்துவது வரவேற்புக்குரியது.

தமிழக மக்களுக்கு பனை பொருட்களின் நன்மைகள் சரிவர தெரியாது. குமரிஅனந்தன் சொன்னது போல, கற்பகம் எனப்படும் கருப்புக்கட்டியில் மனித ரத்தத்தை அபிவிருத்தி செய்யும் தயமின், ரிபோபிளேவின் என்ற ‘பி’ வைட்டமின்களும், நிகோடினிக் ஆசிட் என்ற ‘பி 3’-யும், அஸ்கார்பிக் என்ற ‘சி’ வைட்டமினும் இருக்கின்றன. இவை மனித உடல் வளர்ச்சிக்கு மிக தேவையானவை. பனை பொருட்களின் பயன்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தாமல், விற்பனையை பெருமளவில் எதிர்பார்க்க முடியாது. எனவே, அதை நடைமுறைப்படுத்துவதுடன், பனை மர சாகுபடியை பெருக்கவும் உழவர் நலத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Next Story