ஒமைக்ரான் பரவலை தடுக்க 3 மடங்கு எச்சரிக்கை தேவை!


ஒமைக்ரான் பரவலை தடுக்க 3 மடங்கு எச்சரிக்கை தேவை!
x
தினத்தந்தி 23 Dec 2021 7:53 PM GMT (Updated: 2021-12-24T01:23:20+05:30)

உலகின் ஒட்டுமொத்த வளர்ச்சியையே தடுத்த கொரோனா பாதிப்பு குறைந்துவந்த நேரத்தில், கடந்த நவம்பர் 18-ந்தேதி தென் ஆப்பிரிக்காவிலுள்ள பிரிட்டோரியாவில் ஒமைக்ரான் என்ற உருமாறிய கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.

உலகின் ஒட்டுமொத்த வளர்ச்சியையே தடுத்த கொரோனா பாதிப்பு குறைந்துவந்த நேரத்தில், கடந்த நவம்பர் 18-ந்தேதி தென் ஆப்பிரிக்காவிலுள்ள பிரிட்டோரியாவில் ஒமைக்ரான் என்ற உருமாறிய கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது, 100 நாடுகளுக்கு மேல் பரவிவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் சில நாட்களுக்கு முன்பு நைஜீரியாவில் இருந்துவந்த ஒருவர் மூலம் ஒமைக்ரான் காலடி எடுத்துவைத்தது.

உடனடியாக தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு, 114 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நேரத்தில், அவர்களின் சளி, ரத்த மாதிரிகளை மரபணு பரிசோதனை செய்தபோது, 57 பேருக்கு ‘எஸ்’ வகை ஜீன் குறைபாடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருந்தாலும், 114 பேரின் சளி, ரத்த மாதிரிகளையும் மத்திய அரசின் மரபணு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பிய நிலையில், இப்போது 60 பேரின் மாதிரி முடிவுகளை மத்திய அரசு அனுப்பியுள்ளது. அதில் 33 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில், 30 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள். 3 பேர் தமிழகத்தில் ஒரே இடத்தில் கொத்து கொத்தாய் கொரோனா பாதிப்பு இருந்த பகுதியில் உள்ளவர்கள். இன்னும் 23 பேரின் பரிசோதனை முடிவுகள் விரைவில் வர இருக்கிறது.

பெரிய அதிர்ச்சி தரத்தக்க முடிவு என்னவென்றால், தொற்று உறுதிசெய்யப்பட்ட 34 பேரில் 17 வயதுக்கு உள்பட்ட 2 குழந்தைகளை தவிர மற்ற அனைவருமே 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். ஆக, ஒமைக்ரான் தொற்று பரவலில் மராட்டியம், டெல்லி, தெலுங்கானாவுக்கு அடுத்து தமிழ்நாடும் அதிக பாதிப்புக்கு உள்ளான மாநிலங்களில் ஒன்றாகிவிட்டது. இந்த நிலையில் நேற்று மாலை 3 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ஏற்கனவே, உலக சுகாதார நிறுவனம், “ஒமைக்ரான் பரவல் என்பது மிக வேகமானதாகும். 1½ நாள் முதல் 3 நாட்களுக்குள் பாதிப்பு இரட்டிப்பாகிவிடும்” என்று எச்சரித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் கேட்டலின் ஜெட்லினா, “ஒமைக்ரான் மின்னல் வேகத்தில் பரவக்கூடியது. மிகவும் குறுகிய மற்றும் வேகமான அலைகளை உருவாக்கக்கூடியது. இதற்கு முன்பிருந்த கொரோனா தொற்றுகளின் அலைகள் தலா ஒவ்வொன்றும் 2 மாதங்கள் நீடித்தது. ஆனால், ஒமைக்ரான் அலையினால் நிறைய பேர் பாதிக்கப்படுவார்கள். என்றாலும், குறைவான நாட்களே நீடிக்கும்” என்று கூறியிருக்கிறார். மேலும், “ஒமைக்ரானால் முதியோர்களும், குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது” என்று எச்சரித்துள்ளார்.

“இந்த தொற்றை தடுப்பதற்கு மிகச்சிறந்த வழி, முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதுதான்” என்றும் அவர் தெளிவாக கூறியிருக்கிறார். இதை பொதுமக்கள் அனைவரும் முறையாக கடைப்பிடிக்க விழிப்புணர்வை ஏற்படுத்துவது மத்திய-மாநில அரசுகளின் கடமையாகும். ஒமைக்ரான் பாதிப்பால் கொரோனா அளவுக்கு உயிரிழப்போ, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவையோ இருக்காது என்றாலும், தொற்று ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் எல்லோரும் கவனமாக இருக்கவேண்டும்.

இந்தநிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், ஒமைக்ரான் பரவலை தடுக்க இரவுநேர ஊரடங்கு, கட்டுப்பாடு பகுதிகளை அறிவித்தல், அதிகம் கூட்டம் கூடுவதை தடுத்தல் போன்ற பல்முனை திட்டங்களை வகுக்கவேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. மேலும், பரவல் அதிகமாக இருந்தால் அலுவலகங்கள், தொழிற்சாலைகள், பொது போக்குவரத்துகளில் மக்களின் எண்ணிக்கையை குறைக்கவேண்டும். மருத்துவமனைகளில் படுக்கையை தயாராக வைத்திருக்கவேண்டும். தேசிய சராசரியைவிட குறைவாக முதல் டோஸ், 2-வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை இருந்தால், தீவிரமாக அதில் கவனம் செலுத்தவேண்டும். வீடு வீடாகப்போய் தடுப்பூசி போடுவதை வேகப்படுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறது.

ஒமைக்ரான் பரவல் என்பது 3 மடங்கு வேகமாக இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் இந்த பரவல் வேகத்தை தடுக்க 3 மடங்கு எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசும், மக்களும் தீவிரமாக எடுக்கவேண்டும். இனியொரு ஊரடங்கு என்றால், மாநிலத்தின் பொருளாதாரமும் தாங்காது, மக்களின் வாழ்வாதாரமும் தாங்காது.

Next Story