நம்பிக்கை தரட்டும் 2022 !


நம்பிக்கை தரட்டும் 2022 !
x
தினத்தந்தி 31 Dec 2021 8:10 PM GMT (Updated: 31 Dec 2021 8:10 PM GMT)

எந்தவொரு புது வாழ்வையும் தொடங்கும்போது, “பழையன கழிதலும், புதியன புகுதலும்” என்று வாழ்த்தும் நடைமுறையை கொண்டவர்கள் தமிழர்கள்.

எந்தவொரு புது வாழ்வையும் தொடங்கும்போது, “பழையன கழிதலும், புதியன புகுதலும்” என்று வாழ்த்தும் நடைமுறையை கொண்டவர்கள் தமிழர்கள். அந்தவகையில், இன்று 2021-ம் ஆண்டுக்கு விடை கொடுத்துவிட்டு, 2022-ம் ஆண்டை வரவேற்கும் நன்னாளில், மக்கள் உள்ளங்களில் எல்லாம், “2021-ல் பட்ட துயரங்கள் எல்லாம் நம்மைவிட்டு போய், புதிய ஆண்டில் எல்லா நலன்களும் மழைபோல் பெய்யட்டும்” என்பதே எதிர்பார்ப்பாக இருக்கிறது.

2020-ம் ஆண்டு தமிழ்நாட்டில் காலெடுத்துவைத்த கொரோனா, நம்மைவிட்டு போகாமல் இன்னும் ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கிறது. 2021-ம் ஆண்டு மே மாதம் 7-ந்தேதி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அரசு பொறுப்பேற்றபோது, கொரோனாவை கட்டுப்படுத்துவதுதான் அவர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. மே 21-ந்தேதி ஒரே நாளில் 36 ஆயிரத்து 184 பேர் பாதிக்கப்பட்டனர். முதல்-அமைச்சரின் உத்தரவை வேத வாக்காக கொண்டு செயல்படும் மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையிலான துறை மேற்கொண்ட முயற்சியால் கொரோனா ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டது.

கடந்த மாதம் 24-ந்தேதி 597 பேர் பாதிப்படைந்த நிலையில், இப்போது ஒரு பக்கம் கொரோனாவும், மற்றொரு பக்கம் ஒமைக்ரானும் தங்கள் கோர விளையாட்டை தொடங்கிவிட்டன. நேற்று கொரோனா பாதிப்பு 1,155 ஆக எகிறிவிட்டது. இந்த இடர்பாடுகளுக்கு மத்தியிலும் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி, மாநிலத்தை முன்னேற்ற பாதையில் கொண்டுவருகிறது.

உலக சுகாதார நிறுவன தலைமை விஞ்ஞானியும், தமிழக அரசால் நியமிக்கப்பட்ட மருத்துவ நிபுணர்கள் குழு உறுப்பினருமான டாக்டர் சவுமியா சுவாமிநாதன் சொன்னதுபோல, நாம் கொரோனாவோடு வாழப் பழகிக்கொள்ளவேண்டும். கொரோனாவை காரணம் காட்டி மக்களை வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்க சொல்வதும், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், தொழிற்சாலைகளை மூடச்சொல்வதும் சரியான அணுகுமுறையாக இருக்காது. அது கொரோனா, ஒமைக்ரான் தொற்றைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த சூழ்நிலையில், மக்கள் அனைவரும் 2 டோஸ் தடுப்பூசியையும், “பூஸ்டர் டோஸ்” தேவைப்படுபவர்கள் அதையும்போட்டு முடித்துவிடவேண்டும். 15 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்திவிட்டு, 2022-ல் நம்பிக்கையோடு அடியெடுத்து வைக்கவேண்டும்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதுபோல, தமிழகத்தில் மாபெரும் வேளாண் புரட்சிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோல, கல்வி புரட்சி, தொழில் புரட்சி, மருத்துவ புரட்சி, வர்த்தக புரட்சி என்று எல்லா துறை முனைகளிலும் புரட்சிகரமான வெற்றிகளை இந்த ஆண்டு குவிக்கட்டும்.

இந்த புத்தாண்டில் பொருளாதாரம் மேம்படுவதற்கான நல்ல அறிகுறிகள் தென்படுகின்றன. இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்துவதில், பிரதமர் நரேந்திரமோடி அக்கறை எடுத்துக்கொள்வதைப்போல, தமிழ்நாடு விரைவில் ரூ.76 லட்சம் கோடி பொருளாதாரத்தை அடையவேண்டும் என்பதில் தீவிர முனைப்போடு செயல்படும் முதல்-அமைச்சரின் இலக்கை நோக்கி வேகமாக செல்லும் ஆண்டாக இந்த புதிய ஆண்டு மிளிரட்டும்.

மத்திய அரசாங்கத்தை பொறுத்தமட்டில், தட்டினால் திறக்கப்படும், கேட்டால் கொடுக்கப்படும் என்ற நிலை இருக்கிறது. தமிழக அரசு சார்பில் அனைத்து துறை அமைச்சர்களும், செயலாளர்களும் மத்திய அரசாங்கத்திடம் இருந்து பெறவேண்டிய உதவிகளை பட்டியலிட்டு, மத்திய மந்திரிகள், துறைகளின் செயலாளர்கள், ஏன் பிரதமரைகூட சந்தித்து கோரிக்கை விடுக்கவேண்டும். ஏற்கனவே, தமிழகத்தில் ஏற்பட்ட மழை-வெள்ள சேதங்களை சீரமைக்க தமிழக அரசு கோரிய ரூ.6,230 கோடி நிதியை மத்திய அரசாங்கத்திடம் இருந்து பெறுவதற்காக எம்.பி.க்கள் வாதாடி.. போராடி.. முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.

தமிழக மக்கள் உழைக்க தயாராக இருக்கிறார்கள். பொருளாதாரத்தை மீட்டெடுக்க அரசு முழு முயற்சி எடுக்கிறது. கொரோனா, ஒமைக்ரான் என்ற இடர் நம்மைவிட்டு போய்விட்டால், நாம் செழிப்பான, வளமிக்க தமிழ்நாடு என்ற நிலையை உருவாக்கிவிடலாம். அது மக்கள் கையில்தான் இருக்கிறது. மக்களுக்கு தேவையானதை மத்திய-மாநில அரசுகள் செய்யட்டும். அந்த முயற்சிகளுக்கு மக்கள் துணையாக இருக்கட்டும் என்பதே புத்தாண்டின் புதிய நம்பிக்கையாகும்.

Next Story