சிறுவர்களின் ஆர்வம், சீர்மிகு ஆர்வம்!


சிறுவர்களின் ஆர்வம், சீர்மிகு ஆர்வம்!
x
தினத்தந்தி 4 Jan 2022 7:51 PM GMT (Updated: 2022-01-05T01:21:04+05:30)

கொரோனாவின் 2-வது அலை குறைந்துகொண்டு வந்த நேரத்தில், திடீரென்று 3-வது அலை விஸ்வரூபம் எடுத்து பரவத் தொடங்கிவிட்டது.

கொரோனாவின் 2-வது அலை குறைந்துகொண்டு வந்த நேரத்தில், திடீரென்று 3-வது அலை விஸ்வரூபம் எடுத்து பரவத் தொடங்கிவிட்டது. ஆரம்பத்தில் “கொரோனா” என்று காலெடுத்துவைத்த இந்த தொற்று, சில உருமாற்றங்களுக்கு பிறகு “டெல்டா” என்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இப்போது “ஒமைக்ரான்” என்று உருமாற்றம் அடைந்து, உலகம் முழுவதும் தன் கோரத்தாண்டவத்தை ஆடத் தொடங்கிவிட்டது. 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களையும் ஒமைக்ரான் பாதிக்கும் என்றாலும், பாதிப்பு பெரிய அளவில் இருக்காது.

இதுவரை, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுவந்த நிலையில், கடந்த டிசம்பர் 25-ந்தேதி பிரதமர் நரேந்திரமோடி, “15 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு ஜனவரி 3-ந்தேதி முதல் தடுப்பூசி போடப்படும். முன்களப்பணியாளர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 2 டோஸ் தடுப்பூசி போட்டு 9 மாதங்கள் ஆகியிருந்தால், வருகிற 10-ந்தேதி முதல் “பூஸ்டர் டோஸ்” என்று கூறப்படும் முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசி போடப்படும்” என்று அறிவித்தார். முதலில் 15 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும் என்று சொல்லியிருந்தாலும், பிறகு அது தேவையில்லை நேரடியாக வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “பள்ளிக்கூடங்களை தேடி தடுப்பூசி” என்ற வகையில், இந்த மாணவர்களுக்கு பள்ளிக்கூடங்களிலேயே தடுப்பூசி போடப்படும் என்று அறிவித்தார். இதுதவிர, பள்ளிக்கூடம் போகாத சிறுவர்களுக்கு தடுப்பூசிபோடும் மையங்களும் அமைக்கப்பட்டன. 15 வயதுக்கு மேற்பட்டவர்களின் தடுப்பூசி போடும் ஆர்வம், இந்தியா முழுவதும் சீர்மிகு ஆர்வமாக இருந்தாலும், தமிழ்நாட்டில் அந்த ஆர்வம் தனிச்சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது.

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் “கோவிஷீல்டு” அல்லது “கோவேக்சின்” என்று விருப்பப்பட்ட தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம் என்றாலும், சிறுவர்களுக்கு “கோவேக்சின்” தடுப்பூசிதான் போடப்படுகிறது. இந்த நிலையில், இந்தியா முழுவதும் நேற்று முன்தினம் மொத்தம் போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 98.6 லட்சமாகும். இதில், 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் 41 லட்சத்து 30 ஆயிரம் பேர்.

தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், 15 வயது முதல் 18 வயது வரையிலான தடுப்பூசிபோட தகுதிபடைத்தவர்கள் 33 லட்சத்து 46 ஆயிரம் பேர் ஆகும். இந்தியாவில் எந்த முதல்-அமைச்சரும் சிறார்களுக்கான தடுப்பூசி போடுவதை தொடங்கிவைக்காத நிலையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை சைதாப்பேட்டையில் மாந்தோப்பு பகுதியிலுள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 15 வயது முதல் 18 வயது வரையிலான மாணவ-மாணவிகளுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கிவைத்தார்.

எல்லா பள்ளிக்கூடங்களிலும் மாணவ, மாணவிகள் மிக ஆர்வமாகவந்து தடுப்பூசி போட்டுக்கொண்டார்கள். மத்தியபிரதேசம், குஜராத், ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான் மாநிலங்களில் அதிக மாணவர்கள் தடுப்பூசி போட்டு இருந்தாலும் நேற்று முன்தினம் தமிழ்நாட்டில் மொத்தம் போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 4 லட்சத்து 32 ஆயிரத்து 720 ஆகும். அதில், 15 வயது முதல் 18 வயது வரையிலான மாணவ-மாணவிகள் மட்டும் 3 லட்சத்து 32 ஆயிரத்து 493 பேர் ஆவார்கள். இவர்களையும், இவர்களுக்கு தடுப்பூசிபோட ஊக்கமளித்த இவர்களின் பெற்றோரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். அனைத்து சிறுவர், சிறுமிகளுக்கும் ஒரு மாத காலத்தில் தடுப்பூசிபோட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் வேகத்தை பார்க்கும்போது, 10 அல்லது 15 நாட்களுக்குள் அனைவருக்கும் போட்டு முடித்துவிடுவோம் என்று மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி கூறியிருக்கிறார்.

சிறுவர், சிறுமிகளின் ஆர்வம்போல, பெரியவர்களும் ஆர்வம்கொண்டு தடுப்பூசி போடவேண்டும். ஒரு டோஸ் போட்டவர்கள் 2-வது டோசையும், “பூஸ்டர் டோஸ்” போடவேண்டியவர்கள் அதையும் போட்டுக்கொள்ளவேண்டும். மத்திய அரசும், “பூஸ்டர் டோஸ்” போடுவதற்கான வயதுவரம்பை எடுத்துவிட்டு, 2 டோஸ் போட்டு 9 மாதங்களான அனைத்து வயதினருக்கும் “பூஸ்டர் டோஸ்” போடுவதற்கான அறிவிப்பை வெளியிடவேண்டும் என்பதே எல்லோருடைய கோரிக்கையாகவும் இருக்கிறது.

Next Story