நம்பிக்கை அளிக்கும் ஜனாதிபதி உரை!


நம்பிக்கை அளிக்கும் ஜனாதிபதி உரை!
x
தினத்தந்தி 3 Feb 2022 7:52 PM GMT (Updated: 2022-02-04T01:22:55+05:30)

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முந்தைய நாள் ஜனாதிபதி உரையாற்றுவதும், பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுவதும் மரபாக இருக்கிறது.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முந்தைய நாள் ஜனாதிபதி உரையாற்றுவதும், பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுவதும் மரபாக இருக்கிறது. அந்த வகையில், கடந்த ஜனவரி 31-ந்தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். பொதுவாக ஜனாதிபதி உரையில் எந்த புதிய அறிவிப்புகளையும் எதிர்பார்க்க முடியாது. அரசாங்கத்தின் செயல்பாடுகளையும், வருகிற ஆண்டு செல்லப்போகும் பாதையையும்தான் கோடிட்டு காட்டுவது வழக்கம். அதுபோல, இந்த ஜனாதிபதி உரையும், அரசாங்கம் கடந்த நிதியாண்டில் கடந்து வந்த பாதையையும், இந்த ஆண்டில் அடியெடுத்து வைக்கப்போகும் பாதையையும் காட்டியிருக்கிறது.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையில் மற்றொரு சிறப்பம்சம் இருக்கிறது. 25-7-2017-ல் பதவியேற்ற அவருடைய பதவிக்காலம் 24-7-2022-ல் முடியப்போகிறது. அந்தவகையில், இது நாடாளுமன்றத்தில் அவரது கடைசி உரையாகும். இந்த உரையில் அவர் பொருளாதார துறையில் நரேந்திரமோடி அரசு எடுத்த முயற்சிகளை வெகுவாக பாராட்டியிருக்கிறார். கொரோனா பரவல் அதிகமாக இருந்த சூழ்நிலையிலும், உலகில் பொருளாதார வளர்ச்சியை வேகமாக முன்னெடுத்து செல்லும் நாடுகளில் ஒன்று இந்தியா என்று பெயர் வாங்கியிருப்பதையும், இதற்கு மத்திய அரசாங்கத்தின் உறுதிப்பாடான முயற்சியும் காரணம் என்பதையும் கூறியிருக்கிறார்.

இந்த கொரோனா சூழ்நிலையிலும், பொருளாதாரம் மீண்டெழுவதற்கு கிராமப்புற வேளாண் துறை ஆற்றிய முக்கிய பங்கையும் பாராட்டியுள்ளார். கடந்த சில மாதங்களாக சரக்கு சேவை வரி வசூல் தொடர்ந்து ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் இருப்பதை விளக்கி கூறியுள்ளார். அதற்கு ஏற்றாற்போல், கடந்த ஜனவரி மாதம் சரக்கு சேவை வரி வசூல் ரூ.1 லட்சத்து 41 ஆயிரம் கோடியாக இருந்தது என்பதை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், தனது பட்ஜெட் உரையில் கூறியிருப்பது இதை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரி 26 சதவீதம் அதிகம் கிடைத்திருக்கிறது. மேலும், சேவைகள் இறக்குமதி உள்பட உள்நாட்டு பரிமாற்றங்கள் மூலம் கிடைக்கும் வரியும், கடந்த ஆண்டு இதே மாதத்தைவிட 12 சதவீதம் அதிகமாக இருக்கிறது. சரக்கு சேவை வரி வசூல் உயர்வால் மாநிலங்களின் பங்கும் அதிகமாக இருக்கிறது. மேலும் தன் உரையில், உற்பத்தியோடு இணைந்த மானியத் திட்டங்கள் மூலமாக இந்தியா உலகளாவிய உற்பத்தி கேந்திரமாக மாறும் என்பதோடு மட்டுமல்லாமல், 60 லட்சம் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என்ற இளைஞர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் ஒரு செய்தியை கூறியிருக்கிறார்.

உள்நாட்டில் செல்போன் உற்பத்தி அதிகமாக இருப்பதே, இந்த திட்டத்தின் ஒரு ஒளிமயமான உதாரணம். இன்று உலகிலேயே செல்போன் உற்பத்தியில் 2-வது பெரிய நாடாக இந்தியா திகழ்ந்து, லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை நமது இளைஞர்களுக்கு வழங்கி வருகிறது என்பதையும் பெருமைபடக் கூறினார். மத்திய அரசாங்கம் விவசாயிகளுக்கும், கிராமப்புற பொருளாதாரத்துக்கும் அதிக அதிகாரம் அளிப்பதற்கான திட்டங்களை உருவாக்கி வருகிறது என்று கூறியது, விவசாயிகளுக்கும் ஒரு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.

ஜனாதிபதி தன் உரையில் கூறியதை உறுதிப்படுத்தும் வகையில், பொருளாதார ஆய்வறிக்கையில் இந்த ஆண்டின் பொருளாதார வளர்ச்சி 8 முதல் 8.5 சதவீதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றில் இருந்து நாடு மீண்டு வரும் நிலையில், இது நம்பிக்கை அளிக்கிறது. ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவலால், பல நாடுகளில் விலைவாசி அதிகரித்தது. பணப்புழக்கமும் குறைந்தது. ஆனால், இந்தியாவில் அத்தகைய சூழ்நிலை உருவாகவில்லை என்பதே, இந்தியாவின் பொருளாதாரம் ஸ்திரமாக இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

மொத்தத்தில், ஜனாதிபதி உரை இந்த ஆண்டு நாட்டின் பொருளாதார நிலை கவலையளிக்கத்தக்கதாக இருக்காது, நம்பிக்கையளிக்கத்தக்கதாகவே இருக்கும் என்பதை பிரகடனப்படுத்தியிருக்கிறது. நாடாளுமன்றத்தில் அவரது கடைசி உரையாக இது இருந்தாலும், கவனிக்கத்தக்க உரையாக அமைந்துவிட்டது.

Next Story