காற்றில் கலந்த கானக்குயில் !


காற்றில் கலந்த கானக்குயில் !
x
தினத்தந்தி 7 Feb 2022 7:35 PM GMT (Updated: 7 Feb 2022 7:35 PM GMT)

இசைக்கு சாதி, மதம், இனம், நாடு, மாநிலம், மொழி என்று எந்த பேதமும் கிடையாது. அது மனிதனின் உயிரோடு கலந்தது.

இசைக்கு சாதி, மதம், இனம், நாடு, மாநிலம், மொழி என்று எந்த பேதமும் கிடையாது. அது மனிதனின் உயிரோடு கலந்தது. குழந்தை பிறந்தவுடன் அழும் குரலே ஒரு இசைதான். குழந்தை பருவத்தில் தாலாட்டு பாடல் எனத்தொடங்கி, வீடுகளில் நடக்கும் எந்த சுபநிகழ்ச்சிகளும், துக்க நிகழ்ச்சிகளும் இசைப்பாடல் இல்லாமல் இருக்க முடியாது. எந்த மதம் என்றாலும் சரி, இறைவனை வழிபடுவதும் பாடல்கள் மூலமாகத்தான். பாடல் என்பது மனிதர்கள் மகிழ்வோடு இருக்கும்போது, அந்த மகிழ்ச்சியை பல மடங்கு பெருக்குவதும், துயரத்தில் ஆழ்ந்திருக்கும்போது ஆறுதலாக இருப்பதும், சோர்வாக இருக்கும்போது உற்சாகப்படுத்துவதும், தன்னம்பிக்கையை இழக்கும்போது ஊக்கமூட்டுவதாகவும் இருக்கிறது.

அந்தவகையில், ‘இசைக்குயில்’ என்றும், ‘இந்தியாவின் நைட்டிங்கேல்’ என்றும், ‘கானக்குயில்’ என்றும், ‘இசை ராணி’ என்றும் பலபல பெயர்களால் புகழ்மாலை சூட்டப்பட்ட, இசை உலகில் 1942-ம் ஆண்டு முதல் தனக்கென தனி இடத்தை பெற்றிருந்த லதா மங்கேஷ்கரை அவரது 92-வது வயதில் கொரோனா என்னும் கொடிய அரக்கன் மரணிக்க செய்துவிட்டான்.

ஒரு ஏழை, எளிய மராட்டிய குடும்பத்தில் பிறந்த அவருடைய தந்தை ஒரு நாடக நடிகரும், பாடகரும் ஆவார். அவர் காலமானவுடன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருந்தவர் லதா மங்கேஷ்கர். இவரது இயற்பெயர் ஹேமா. தந்தையின் நாடகத்தில் லதா என்ற பெயரில் நடித்ததால், லதா மங்கேஷ்கர் ஆனார். 13-வது வயதில் ஒரு மராட்டிய மொழி படத்தில் நடித்தார். அதே ஆண்டு “கிதி ஹாசல்” என்ற மராட்டிய திரைப்படத்தில் “நாச்சு யா கடே கேலு...” என்ற பாடலை பாடினார். ஆனால் அந்தப்படம் வெளியாகாமல் நின்றுவிட்டது. அதன்பிறகு, சில திரைப்படங்களில் அவர் பாடல்களை பாடினாலும், 1949-ம் ஆண்டு வெளிவந்த “மகால்” என்ற திரைப்படத்தில் பாடிய, “ஆயேகா.. ஆனேவாலா..” என்ற சோகப்பாடல் அவரை எல்லோராலும் திரும்பி பார்க்கவைத்தது. அதிலிருந்து வெற்றி மீது வெற்றி வந்து அவரை சேர்ந்தது.

சீனப் போரின்போது நாட்டுக்காக உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அவர் பாடிய பாடல் நேருவையே கண்ணீர்விட வைத்தது. தேனை கையால் தொட்டு நாக்கில் தடவினாலும் இனிப்புதான். கரண்டியால் எடுத்து நாக்கில் விட்டாலும் இனிப்புதான். அதுபோல, லதா மங்கேஷ்கரின் எல்லா பாடல்களுமே மனதில் நிற்பவைதான். திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு அவர் பல பாடல்களை பாடியுள்ளார். அதிலும் முக்கியமாக, “கோவிந்தா.. கோவிந்தா.. ஸ்ரீனிவாச கோவிந்தா... திருப்பதி வெங்கடேஸ்வரா கோவிந்தா...” என்ற பாடல், பக்திமணம் கமழச் செய்கிறது.

36 மொழிகளில் 30 ஆயிரத்துக்கும் மேலான பாடல்களை பாடிய லதா மங்கேஷ்கர், தமிழிலும் சில திரைப்படங்களில் பாடியுள்ளார். இளையராஜாவின் இசையில் “சத்யா” படத்துக்காக அவரும், எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் இணைந்து பாடிய, “வளையோசை கலகலவென..” என்ற பாடல், பிரபு நடித்த “ஆனந்த்” திரைப்படத்தில் இடம்பெற்ற, “ஆராரோ.. ஆராரோ..” பாடல் தமிழ் மக்கள் நெஞ்சில் என்றும் நீங்காத இடம்பெறும்.

1974-ம் ஆண்டு லண்டன் நகரில் உள்ள ராயல் ஆல்பர்ட் ஹாலில் அவருடைய இசைக் கச்சேரி முதலாவதாக நடந்தது. அப்போது, நிகழ்ச்சிகளை தொகுத்தளித்த நடிகர் திலீப்குமார், “லதா மங்கேஷ்கரின் பாடல் ஒரு மலரின் மணம்போன்றது. நீரூற்றிலிருந்து வெளிவரும் தண்ணீர் போன்றது. மலையில் இருந்துவரும் தென்றல் போன்றது. சூரியனிலிருந்து வரும் ஒளிக்கதிர் போன்றது. பச்சிளம் குழந்தையின் களங்கமில்லா புன்சிரிப்பு போன்றது” என்று பாராட்டி கூறிய புகழ் உரைகள்தான் அவருக்கு அஞ்சலி செலுத்தும் ஒவ்வொருவரின் இதயக்குரலாக இருக்கிறது. லதா மங்கேஷ்கர் மறைந்திருக்கலாம். ஆனால், அவருடைய 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் மூலம் காலம்காலமாக வாழ்வார். எந்த நிலையிலும் அவருக்கு மரணம் இல்லை.

Next Story