வடக்கும் வாழ்கிறது; தெற்கும் வாழ்கிறது!


வடக்கும் வாழ்கிறது; தெற்கும் வாழ்கிறது!
x
தினத்தந்தி 9 Feb 2022 7:48 PM GMT (Updated: 9 Feb 2022 7:48 PM GMT)

மறைந்த பேரறிஞர் அண்ணா, அந்த காலங்களில், “மத்திய அரசாங்கத்தால் வடமாநிலங்கள் பெருமளவில் வளர்ச்சி பெறுகிறது.

மறைந்த பேரறிஞர் அண்ணா, அந்த காலங்களில், “மத்திய அரசாங்கத்தால் வடமாநிலங்கள் பெருமளவில் வளர்ச்சி பெறுகிறது. தென்மாநிலங்கள் கவனிப்பாரற்று புறக்கணிக்கப்படுகிறதே” என்ற ஆதங்கத்தில், “வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது” என்று கூறுவார். ஆனால், இப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “சமச்சீர் வளர்ச்சி என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு, செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்” என்று உத்தரவிட்டதை தொடர்ந்து, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு எடுக்கும் நடவடிக்கைகளால், வடக்கும், அதாவது வடமாவட்டங்களும் வளர்கிறது. தெற்கும், அதாவது தென்மாவட்டங்களும் வளர்கிறது என்ற நிலையை எட்டிக்கொண்டிருக்கிறது.

பொதுவாக, தென்மாவட்ட மக்களுக்கு ஒரு குறை உண்டு. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களை போல, தென் மாவட்டங்களிலும் துறைமுக வசதி இருக்கிறது. விமான நிலையங்கள் இருக்கின்றன. ரெயில் போக்குவரத்து வசதி இருக்கிறது. தொழில் தொடங்க ஏராளமான நிலம் இருக்கிறது. மனிதவளம் இருக்கிறது. மொத்தத்தில் தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழ்நிலை இருக்கிறது என்றாலும், தென்மாவட்டங்களை தொழில் மயமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லையோ? என்ற ஒரு கவலை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இவ்வளவுக்கும் தென்மாவட்டங்களில், கல்வி வளர்ச்சி நன்றாக இருக்கிறது. ஏராளமானோர் வேலையில்லாமல் திண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். நிறைய தொழில்கள் தொடங்கினால், இந்தப் பகுதிகள் எல்லாம் வளம் பெறுமே என்ற எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருந்தது.

இத்தகைய சூழ்நிலையில், தமிழக அரசு விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, கன்னியாகுமரி, திண்டுக்கல், நெல்லை ஆகிய மாவட்டங்களில், புதிய தொழில் பூங்காக்கள் அமைப்பதற்காக மிக முனைப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தொழில் வளாகங்கள் அமைப்பதற்காகவும், மேம்பாட்டு மையங்கள் அமைப்பதற்காகவும் சிப்காட் 50 சதவீத மானியமும், 100 சதவீத முத்திரைத்தாள் கட்டண விலக்கும் அளித்து நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுவருகிறது.

522.60 ஏக்கர் நிலம், நிலக்கோட்டை, புதுக்கோட்டை, மானாமதுரை, தூத்துக்குடி, கங்கைகொண்டான் தொழிற்பேட்டைகளில் 50 சதவீத மானியத்துடன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களில் உள்ள சிப்காட் தொழில் பூங்காக்களில் 50 சதவீத மானியத்துடன் 169 தொழிற்சாலைகளுக்கு 624.68 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விருதுநகரில் 1,500 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு தொழில் பூங்கா அமைப்பதற்காக திட்ட அறிக்கை தயாராகிக் கொண்டிருக்கிறது. தொழில் வளர்ச்சிக்காக சென்னை - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் வழித்தடம் அமைக்கும் பணிகளுக்கான பூர்வாங்க ஏற்பாடுகளும் ஆசிய மேம்பாட்டு வங்கியின் நிதியுதவியோடு தொடங்கப்பட்டுள்ளது.

இதேபோல, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களிலும், மேலும் புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று பெருமைபடக் கூறுகிறார், அமைச்சர் தங்கம் தென்னரசு.

தமிழக அரசின் தொழில்துறை ஒரு பக்கம் முனைப்பான நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கும் அதே வேகத்தில், சிறு தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் சிறு தொழில்துறை செயலாளர் அருண் ராய் ஆகியோரும் சிட்கோ தொழிற்பேட்டைகளில் புதிய தொழிற்சாலைகளை தொடங்கவும், ஏற்கனவே நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, தொழில்களை தொடங்காத நிறுவனங்களை, தொழிற்சாலைகள் அமைக்க முடுக்கிவிடவும், இயங்கிக் கொண்டிருக்கும் தொழிற்சாலைகளில் உற்பத்தியை அதிகரிக்கவும் மிக தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். சிறு தொழில் முனைவோருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், அனைத்து ஏற்பாடுகளையும் சிட்கோ செய்து வருவது பாராட்டுக்குரியது. தொழில் துறையும், சிறு தொழில் துறையும் இதே வேகத்தில் தொடர்ந்து செயல்பட்டால், 2030-ம் ஆண்டுக்குள் ரூ.23 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகளை ஈர்க்கவும், 46 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிட்டுள்ள தமிழக அரசின் இலக்கு, அதற்கு ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பாகவே நிறைவேறும் என்பதில் சந்தேகமே இல்லை.

Next Story