மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 50 லட்சம் பயனாளிகள்!


மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 50 லட்சம் பயனாளிகள்!
x
தினத்தந்தி 20 Feb 2022 7:41 PM GMT (Updated: 2022-02-21T01:11:42+05:30)

எந்தவொரு திட்டம் என்றாலும் சரி, மக்கள் அதை தேடிச்சென்று பயனடைவதைவிட, அவர்களையே நாடிச்சென்று, அந்த சேவைகளை வழங்குவதன் மூலம் பெரிதும் பயனடைவார்கள், மகிழ்ச்சியும் அடைவார்கள். அந்த வகையில், மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை செயல்படுத்தும் மகத்தான திட்டம், ‘மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்’. இந்த திட்டத்தின் மூலம் வயதுமுதிர்ந்த மக்களின் வீடுகளுக்கே சென்று மருந்துகளும் வழங்கப்படுகின்றன.

45 வயதுக்கு மேற்பட்டவர்களில், ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளவர்கள், அரசு மருத்துவமனைக்கு சென்று அவ்வப்போது மருந்து - மாத்திரைகள் வாங்கும் நிலையில், இந்த திட்டத்தின் மூலம் அவர்களின் வீடுகளுக்கே சென்று அவைகளை மருத்துவ பணியாளர்கள் வழங்குகிறார்கள். சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனைக்கு சென்று, வாரம் 2 முறை ‘டயாலிசிஸ்’ செய்ய வேண்டியவர்களுக்கு, அவர்கள் வீடுகளுக்கு ‘போர்டபிள் டயாலிசிஸ்’ என்று கையில் எடுத்துச் செல்லும் கருவியை கொண்டு, ‘டயாலிசிஸ்’ வழங்குகிறார்கள்.

முடக்குவாத நோயால் அவதிப்படுபவர்களுக்கு, அவர்களின் வீடுகளுக்கே சென்று ‘பிசியோதெரபி’ சிகிச்சை வழங்குகிறார்கள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமையோடு கூறுகிறார். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியம், சாமணப் பள்ளி கிராமத்தில் ஒரு ஆலமரத்தடி திண்ணையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கிவைத்தார். இதுமட்டுமல்லாமல், அங்குள்ள 2 பேர் வீடுகளுக்கு நேரடியாக சென்று, அவர்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சையை பார்வையிட்டார். அவர்களுக்கு தேவையான மருந்து - மாத்திரைகளை வழங்கினார்.

பட்ஜெட்டில் இதற்காக ரூ.258 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதற்காக, 7,200 செவிலியர்கள் மற்றும் களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த திட்டம் மூத்த குடிமக்களுக்கு பெரும் பயனை அளிக்கிறது. மருத்துவமனைக்கு நடந்து சென்று அங்கு காத்திருந்து, மருந்து - மாத்திரைகளை பெறும் நிலையையும், ‘டயாலிசிஸ்’ சிகிச்சை, ‘பிசியோதெரபி’ சிகிச்சை பெறும் நிலையையும் தவிர்த்து, அவர்கள் வீடுகளுக்கே அதெல்லாம் தேடிவரும் நிலை, அவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கிறது.

இந்த திட்டத்தின் சிறப்பான செயல்பாட்டின் மூலம், தினந்தோறும் 20 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் புதிதாக பயன்பெற்று வந்தார்கள். நாளை மறுநாள் புதன்கிழமை 50 லட்சமாவது பயனாளி என்ற வகையில், சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கம் ஊராட்சியில் வயது முதிர்ந்த 3 முதல் 4 பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று ‘பிசியோதெரபி’ சிகிச்சையை மேற்பார்வையிடும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களுக்கு தேவையான மருந்து-மாத்திரைகளையும் வழங்குகிறார்.

இந்த திட்டத்தில் 1 கோடி பேருக்கு வீடுதேடி மருந்துகளையும், மருத்துவ சிகிச்சையையும் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதே நாளில், 2008-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த மறைந்த கலைஞர் கருணாநிதி, தொடங்கிவைத்த 108 ஆம்புலன்ஸ் திட்டத்துக்காக அதிநவீன உயிர்காக்கும் உபகரணங்கள் பொருத்தப்பட்ட அவசர கால சிகிச்சை ஊர்திகளின் பணிகளும் தொடங்கிவைக்கப்படுகிறது.

தற்போது, 1,303 ஆம்புலன்சுகள் மிக சீரிய பணியை ஆற்றிக்கொண்டிருக்கும் நிலையில், புதிதாக இந்த 188 ஆம்புலன்சுகளையும் சேர்த்தால், தமிழ்நாட்டில் இனி 1,491 ஆம்புலன்சுகள் பயன்பாட்டில் இருக்கும். விபத்தில் சிக்கியவர்களின் உயிரைக்காக்க தமிழக அரசு கொண்டுவந்துள்ள, ‘நம்மை காக்கும் 48’ திட்டத்தில் இந்த ஆம்புலன்சுகளின் செயல்பாடு உதவியாக இருக்கும். ஏதாவது விபத்துகள் ஏற்பட்டால், அதற்காக இலவச சிகிச்சை அளிக்க, தமிழக அரசு பதிவிட்டுள்ள 640 மருத்துவமனைகளில், ஏதாவது ஒரு மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்ல இந்த ஆம்புலன்சுகள் பெரும் சேவை புரியும். மொத்தத்தில், மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை செயல்படுத்தும் திட்டங்கள் மகத்தானவை. இவ்வளவு குறுகிய காலத்தில் 50 லட்சம் பயனாளிகளை அடையாளம் கண்டு ‘மக்களை தேடி மருத்துவம் திட்டம்’ மூலம் மருந்து - மாத்திரைகள் வழங்கி, மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவது பாராட்டுக்குரியது.


Next Story