விவசாய பணிகளில் ‘டிரோன்கள்'!


விவசாய பணிகளில் ‘டிரோன்கள்!
x
தினத்தந்தி 27 Feb 2022 7:38 PM GMT (Updated: 2022-02-28T01:08:51+05:30)

மத்திய அரசாங்கம் என்றாலும் சரி, தமிழக அரசு என்றாலும் சரி, பட்ஜெட்டில் வெளியிட்ட அறிவிப்புகளை நிறைவேற்றுவதில் மிகவும் முனைப்புடன் இருக்கிறது.

மத்திய அரசாங்கம் என்றாலும் சரி, தமிழக அரசு என்றாலும் சரி, பட்ஜெட்டில் வெளியிட்ட அறிவிப்புகளை நிறைவேற்றுவதில் மிகவும் முனைப்புடன் இருக்கிறது. கடந்த 1-ந்தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், “பயிர்கள் மதிப்பீட்டுக்காகவும், நிலப்பதிவேடை டிஜிட்டல் மயமாக்கவும், வயல்வெளிகளில் பூச்சிமருந்து தெளித்தல், நுண்ணிய உயிர்ச்சத்து மருந்துகளை தெளிக்கவும், “விவசாயிகள் டிரோன்கள்” பயன்பாடு ஊக்குவிக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதேபோல, தமிழக அரசு 2021-2022-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், “மற்றொரு புதிய முன்மாதிரி முயற்சியாக ஆளில்லா விமானங்களுக்கு (டிரோன்) என தமிழ்நாடு ஆளில்லா விமானக்கழகம், அண்ணா பல்கலைக்கழக சென்னை தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து தொடங்கப்படும் என்றும், இந்த நிறுவனம் தமிழ்நாடு மட்டுமல்லாது, பிற மாநிலங்களிலும் உள்ள அரசு சார்ந்த முகமைகள், ஆளில்லா விமானங்களை பயன்படுத்துவதில் உறுதுணையாக இருக்கும்” என்று அறிவிக்கப்பட்டது.

இரு அரசுகளும் சொன்னதை நிறைவேற்றும் வகையில், டிரோன்கள் இயக்கப்படும் முயற்சியை தொடங்கிவிட்டது. சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திரமோடி, கருடா ஏர் ஸ்பேஸ் நிறுவனத்தால், 100 விவசாய டிரோன்கள் பறப்பதைப் பார்த்தார். அதற்கு சில நாட்களுக்கு முன்பு, குடியரசு தின அணிவகுப்பின்போது, கலந்துகொண்ட படை வீரர்கள் தங்கள் முகாமுக்கு திரும்பும் நிகழ்வில், 1,000 டிரோன்கள் பறக்கும் கண்கொள்ளா காட்சியை நாட்டு மக்கள் அனைவரும் பார்த்தார்கள்.

தற்போது, ‘ஸ்வமிதா’ திட்டத்தின்கீழ் டிரோன்கள் மூலம் கிராமங்களின் நிலம் மற்றும் வீடுகளின் வரைபடம் தயாரிக்கப்படுகிறது. தொலைதூர பகுதிகள், குறிப்பாக மலைவாழ் பகுதிகளுக்கு மருந்துகள், தடுப்பூசிகள் அனுப்பப்படுகின்றன. வயல்களில் பூச்சி மருந்து தெளிக்கவும், இப்போது டிரோன்களின் பயன்பாடு தொடங்கிவிட்டது. பிரதமர் தன் உரையின்போது, “வருங்காலங்களில் டிரோன்களின் உயர்ந்த திறன் உதவியால், விவசாயிகள் புத்தம் புதிய காய்கறிகளையும், பழங்களையும், மலர்களையும், தங்கள் வயல்களில் இருந்து சந்தைகளுக்கு அனுப்ப முடியும். மீன்பிடி தொழிலிலும், குளங்கள், ஆறுகள், கடலில் பிடித்த மீன்களை டிரோன்கள் மூலம் சந்தைக்கு அனுப்ப முடியும்” என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டிலும் கடந்த மாதம் 25-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அண்ணா பல்கலைக்கழகத்தின் சென்னை தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து, தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகன கழகத்தை தொடங்கி வைத்துள்ளார். இதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் பயன்பாடு இல்லாமல் இருக்கும் சோழவரம், உளுந்தூர்பேட்டை விமான தளங்களில் ‘டிரோன்’ என்று கூறப்படும் ஆளில்லா விமானங்களின் மையங்களை தொடங்குவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இங்கு, தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும், இந்த ஆளில்லா விமானங்களின் நிறுவனங்கள் தங்கள் பணிகளை தொடங்க முயற்சிகள் எடுத்துக்கொண்டிருக்கிறது.

இந்த டிரோன்களை பெருமளவில், பூச்சி மருந்து, உரம், ஊட்டச்சத்து மருந்துகளை தெளிப்பதற்கு பயன்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. நவீன காலத்தில் விவசாயிகளுக்கு செலவில்லாத வகையிலும், முழுமையாக நிலங்களில் இந்த மருந்துகளை தெளிக்கும் வகையிலும், டிரோன்களின் பயன்பாடு இருக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும். இப்போது, பூச்சி மருந்துகளை கையால் தெளிப்பது அல்லது ‘ஸ்பிரே’ செய்வது போன்ற பணிகளில் ஈடுபடும் விவசாயிகளின் உடல் நலத்தையும் இந்த டிரோன்கள் காப்பாற்றும். மேலும், ஏராளமானவர்களுக்கு ஆளில்லா வான்வழி வாகனக் கழகம் வேலைவாய்ப்பு அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாயிகள் மீனவர்களின் பயன்பாட்டுக்காக இந்த டிரோன்களின் பணி ஒரு புது யுக புரட்சியாகும் என்பதில் சந்தேகமே இல்லை. ஏற்கனவே, கடந்த 2018-ல் சென்னையில் டிரோன்கள் மூலம் நில அளவை உள்பட பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வெற்றியும் கண்டிருக்கிறது. நவீன காலத்தில் டிரோன்களின் பயன்பாடு பல பணிகளுக்கு பயன்படுத்தப்படும் நிலையில், விவசாயம், மீன்வளத்துறையில் பயன்படுத்தப்படப்போவது மிகவும் வரவேற்புக்குரியது, பாராட்டுக்குரியது.

Next Story