சமையல் எண்ணெய்க்கு தட்டுப்பாடு வருமா?


சமையல் எண்ணெய்க்கு தட்டுப்பாடு வருமா?
x
தினத்தந்தி 9 March 2022 7:52 PM GMT (Updated: 9 March 2022 7:52 PM GMT)

தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் பழமொழிகளுக்கு பஞ்சமே இருக்காது.

தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் பழமொழிகளுக்கு பஞ்சமே இருக்காது. ஆனால் ஒவ்வொரு பழமொழிக்கும் பின்னால் ஒரு பெரிய பொருள் உண்டு. ‘தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும்’ என்பார்கள். அது இப்போது, ரஷியா-உக்ரைன் போரில் இந்தியாவுக்கு ஏற்படும் பாதிப்பில் இருந்தே தெள்ளத்தெளிவாக தெரிகிறது. உக்ரைனில் படிக்கும் ஏறத்தாழ 5 ஆயிரம் தமிழக மாணவர்கள் உள்பட 20 ஆயிரம் மாணவர்கள் அங்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கு கடும் இன்னலை அனுபவிக்கவேண்டியது இருக்கிறது.

இது ஒரு பக்கம் இருக்க, இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் அங்கிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு, அதனால் பல விளைவுகள் ஏற்படுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. இந்தியாவுக்கும், ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கும் இடையே பரஸ்பர வர்த்தகம் இருக்கிறது. ரஷியாவை எடுத்துக்கொண்டால், ரூ.89 ஆயிரத்து 250 கோடி அளவுக்கும், உக்ரைனை எடுத்துக்கொண்டால் ரூ.23 ஆயிரத்து 250 கோடி அளவுக்கும் பரஸ்பர வர்த்தகம் இருப்பதை கடந்த ஆண்டு அதிகாரப்பூர்வமான புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை மட்டும் ரஷியாவுக்கு ரூ.18 ஆயிரத்து 750 கோடி மதிப்புள்ள பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ரூ.51 ஆயிரத்து 750 கோடி மதிப்பிலான பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. ரஷியாவுக்கு மருந்து பொருட்கள், விவசாய ரசாயன பொருட்கள், மோட்டார் வாகன உதிரி பாகங்கள், மின்னணு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இறக்குமதியை பொறுத்தமட்டில் இந்தியாவுக்கு ராணுவ தளவாடங்கள் மட்டுமல்லாமல் கச்சா எண்ணெய், உரம், விலை மதிப்பு வாய்ந்த கற்கள், உலோகங்கள் போன்றவை இறக்குமதி செய்யப்படுகிறது.

உக்ரைனை பொறுத்தமட்டில் ரூ.3 ஆயிரத்து 825 கோடி அளவுக்கு மருந்துபொருட்கள், விவசாய ரசாயனங்கள், உணவுபொருட்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக தென்னிந்தியாவில் இருந்து தேயிலை அனுப்பப்படுகிறது. உக்ரைனில் இருந்து சூரியகாந்தி எண்ணெய் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் 25 லட்சம் டன் அளவுக்கு சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. இதில் 70 சதவீதம் உக்ரைனில் இருந்தும், 20 சதவீதம் ரஷியாவில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது விலையும் உயர்ந்த நிலையில் சமையல் எண்ணெய் தட்டுப்பாடு வந்துவிடுமோ என்ற கவலையும் இருக்கிறது.

இந்தியா தன்னுடைய தேவையில் 55 சதவீதம் சமையல் எண்ணெயை இறக்குமதி மூலமாகவே பூர்த்தி செய்யும் நிலையில், உக்ரைனில் இருந்து வரும் சூரியகாந்தி எண்ணெய் அதில் ஒரு கணிசமான அளவு இருக்கிறது. ஏற்றுமதியை பொறுத்தமட்டில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களே அதிக பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிலையில், இப்போது நடக்கும் போர் இத்தகைய நிறுவனங்களையும் பெரிதும் பாதித்து, அதனால் வேலைவாய்ப்புக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ? என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆக, ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா நடுநிலை முடிவு எடுத்துள்ளது. இதன்மூலம் இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா முக்கிய பங்கை ஆற்றமுடியும். இந்தநிலையில் இந்திய வர்த்தக துறையும், தொழில் துறையும் எப்போது இந்த போர் முடியும்? என்று அதிக ஆர்வத்தோடு எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறது. இதிலிருந்து கற்றுக்கொண்ட பாடம் என்னவென்றால் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இனி அதிகரிக்கும் வகையில் வேளாண்மை துறை சிறப்பு முயற்சிகளை எடுத்துக்கொள்ளவேண்டும். அதற்குரிய தட்பவெப்பநிலை தமிழ்நாட்டில் இருப்பதால் இனி தமிழக மக்களுக்கு தன்னிறைவு கிடைக்க இதில் கவனமாக இருக்கவேண்டும் என்பதையே இந்த போர் உணர்த்துகிறது.

Next Story