குறைந்தபட்ச வரியில் கை வைக்க வேண்டாம்!


குறைந்தபட்ச வரியில் கை வைக்க வேண்டாம்!
x
தினத்தந்தி 21 March 2022 7:46 PM GMT (Updated: 2022-03-22T01:16:54+05:30)

2017-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி இந்தியாவில் வரிவிதிப்பு முறை ஒரு பெரிய மாற்றத்தை கண்டது.

2017-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி இந்தியாவில் வரிவிதிப்பு முறை ஒரு பெரிய மாற்றத்தை கண்டது. இந்தியா உறங்கிக்கொண்டிருந்த அந்த வேளையில், நாடாளுமன்றத்தில் நடந்த கூட்டத்தில் பல மத்திய-மாநில அரசுகளின் வரிகளுக்கு பதிலாக ‘ஒரே நாடு ஒரே வரி’ என்ற வகையில், சரக்கு மற்றும் சேவைவரி எனும் ஜி.எஸ்.டி. நடைமுறைக்கு வந்தது. அப்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும், பிரதமர் நரேந்திரமோடியும், மறைந்த நிதிமந்திரி அருண்ஜெட்லியும் உரைநிகழ்த்திய பின்பு, ஜனாதிபதியும், பிரதமரும் பொத்தானை அழுத்தியபின், சரக்கு மற்றும் சேவைவரி நாட்டில் அமலுக்கு வந்தது. இந்த விழாவில் பிரதமர் பேசும்போது, மக்களுக்கு நன்மைபயக்கக்கூடிய ஒரே நல்ல, எளிய வரி ஜி.எஸ்.டி. என்றார். இந்த வரிவிதிப்பு அமலுக்கு வந்தநேரத்தில் சில பொருட்களுக்கு வரிவிதிப்பிலிருந்து முழுமையான விலக்கு, சில பொருட்களுக்கு 5 சதவீத வரிவிதிப்பு, சில பொருட்களுக்கு 12 சதவீத வரிவிதிப்பு, சில பொருட்களுக்கு 18 சதவீத வரிவிதிப்பு, சில பொருட்களுக்கு 28 சதவீத வரிவிதிப்பு என்று நடைமுறைப்படுத்தப்பட்டது. 28 சதவீத வரி விதிப்புக்குள்ளாகும் ஆடம்பர மற்றும் மதுபானம், சிகரெட் போன்ற பாவ பொருட்களுக்கு கூடுதல் மேல்வரி விதிக்கப்பட்டது.

ஜி.எஸ்.டி. விஷயத்தில் பிரதமரோ, மத்திய நிதிமந்திரியோ தனிப்பட்ட முறையில் எந்த முடிவும் எடுக்கமுடியாது. மத்திய நிதிமந்திரி தலைமையில் மாநில நிதி மந்திரிகள் கொண்ட சரக்கு சேவைவரி கவுன்சில் கூட்டம்தான் வரிமாற்றங்கள், வரி சீர்திருத்தங்கள் போன்ற சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பாக எந்த முடிவையும் எடுக்கமுடியும். ஆரம்பத்தில் இந்த வரி அமல்படுத்தப்படுவதால் மாநிலங்களுக்கு வருவாயிழப்பு ஏற்படும் என்ற முறையீடுகள் வந்தபோது, 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசாங்கத்தின் சார்பில் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த 5 ஆண்டுகள் வருகிற ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. இந்த இழப்பீடு காலத்தை இன்னும் சில ஆண்டுகள் நீட்டிக்கவேண்டும் என்று பல மாநிலஅரசுகள் கோரிக்கை விடுக்கின்றன. கடந்தாண்டு மாநிலங்களில் சரக்கு மற்றும் சேவை வரிவருவாயை ஆய்வுசெய்து, அதை மேலும் பெருக்குவதற்கான வழிகளை கண்டறியவும், இப்போதுள்ள வரிவிதிப்பிலுள்ள குறைபாடுகளை சீர்செய்து வரிவிதிப்பு முறையை சீர்திருத்தம் செய்யவும், கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த மாதம் இறுதியிலோ அல்லது அடுத்தமாத தொடக்கத்திலோ கூடும் சரக்கு சேவைவரி கவுன்சில் கூட்டத்தில் இந்தக்குழு தன் அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கிறது.

வரிகள் சீர்திருத்தத்தை பொறுத்தமட்டில், 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதமாக இருக்கும் 4 வகையான வரிவிதிப்புகளை 3 வகையாக ஒருங்கிணைக்க முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, 5 சதவீதத்தை 8 சதவீதமாக்க போகிறார்கள் என்றும், 5 சதவீதத்தையும், 12 சதவீத வரிவிதிப்பையும் இணைத்து 8 சதவீதமாக்க போகிறார்கள் என்றும், 18 சதவீத வரிவிதிப்பு மூலமாகத்தான் 70 சதவீத சரக்கு மற்றும் சேவைவரி வருவாய் ஈட்டப்படுகிறது. ஆகவே, இன்னும் நிறையபொருட்கள் 18 சதவீத விகிதத்துக்குள் கொண்டுவரப்படும் என்றும் பலவித கருத்துகள் கூறப்படுகிறது. 5 சதவீத வரிவிதிப்புக்குள் பொதுமக்கள் பயன்படுத்தும் மிக சாதாரணபொருட்கள், சேவைகள் வருகிறது. இதில் கை வைத்தால் பொதுமக்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள். 5 சதவீத வரிவிதிப்பிலிருக்கும் பொருட்களுக்கு வரிஉயர்வு என்பது ஏழை-எளிய, நடுத்தர மக்களை பாதிக்கும். இப்போதெல்லாம் சரக்கு மற்றும் சேவை வரிவசூல் மிக நன்றாக இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்து 26 கோடி வசூலாகியிருக்கிறது. எனவே இதே வரிவிதிப்புமுறை தொடரவேண்டும் என்பதும், வருவாய் ஈட்டுவதற்கு வேறுவழிகளை காணவேண்டும் என்பதும் மக்களின் இப்போதைய கோரிக்கையாக இருக்கிறது.

Next Story