டீசலுக்கு இரட்டை விலை!


டீசலுக்கு இரட்டை விலை!
x
தினத்தந்தி 22 March 2022 8:02 PM GMT (Updated: 22 March 2022 8:02 PM GMT)

பெட்ரோல்-டீசல் இரண்டுமே சமுதாயத்தின் அத்தியாவசிய தேவையாக இருக்கிறது.

பெட்ரோல்-டீசல் இரண்டுமே சமுதாயத்தின் அத்தியாவசிய தேவையாக இருக்கிறது. இதில், எதில் கைவைத்தாலும் அடுத்தநொடியே விலைவாசி உயர்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக டீசல் விலை சற்று உயர்ந்தாலும், பொருட்களின் விலைவாசி உயர்ந்துவிடும். இந்தியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி இல்லாததால், நமது தேவைக்கு பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்துதான் சமாளிக்கிறோம். இந்தநிலையில், சர்வதேச கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தை பொறுத்து, அன்றாடம் பெட்ரோல்-டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. அதனடிப்படையில் நாள்தோறும் விலையில் ஏற்றம், இறக்கம் இருந்தது.

உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா மாநில சட்டசபை தேர்தலையொட்டி, எண்ணெய் நிறுவனங்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4-ந்தேதிக்குப்பிறகு நேற்றுதான் பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்தியிருக்கிறது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை 40 சதவீதம் உயர்ந்தபோதிலும், டீசல் விலை இவ்வளவு நாளும் உயர்த்தப்படாமல் இருந்தது. இந்தநிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல், போக்குவரத்துக்கழகங்கள் மற்றும் விமான நிலையம், வணிக வளாகங்கள் போன்ற ஜெனரேட்டர் பயன்படுத்தும் தேவைக்காக மொத்தமாக டீசல் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு லிட்டர் விலை சென்னையில் ரூ.22.77 உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு எடுத்துள்ளது.

பொதுமக்கள் பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையங்களுக்குச்சென்று தங்கள் வாகனத்துக்கு டீசல் போட்டால் இந்த விலை உயர்வு கிடையாது. ஆனால், மொத்த வாடிக்கையாளர்கள் தங்கள் இடங்களுக்கு டேங்கர்கள் மூலம் வாங்கும் நிலையில், அவர்களுக்கு மட்டுமே இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. பொதுமக்களை பாதிக்காமல் தங்கள் வாகனத்துக்கு பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையங்களுக்கு சென்று டீசல் போடுபவர்களுக்கு விலை உயர்வு இல்லை என்பது பாராட்டுக்குரியது. அந்தவகையில், இந்த இரட்டை விலை முடிவு வரவேற்கத்தக்கது.

அதேபோல, இந்த விலை உயர்வால் செலவுகள் அதிகரித்து பஸ் கட்டணம் உயர்வு தவிர்க்கமுடியாததாகிவிடும் என்றநிலையில், தமிழக அரசு போக்குவரத்துக்கழக பஸ்களுக்கு டீசல் வாங்குவதில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நல்ல முடிவை எடுத்துள்ளார். தமிழ்நாட்டில் 8 அரசு போக்குவரத்துக்கழகங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் இந்த கழகங்களை சேர்ந்த 19 ஆயிரத்து 270 பஸ்கள் பொது போக்குவரத்தாக இயக்கப்படுகின்றன. 16 லட்சம் லிட்டர் டீசல் தினமும் வாங்கப்படுகிறது.

இரட்டை விலையால் ஒரு நாளைக்கு ரூ.3.5 கோடி கூடுதலாக செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, ரூ.48 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்துக்கழகங்களால் இந்த இழப்பை தாங்கமுடியாது. எனவே, மொத்த ஆர்டராக டீசல் சப்ளை செய்துகொண்டு இருந்த இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி மொத்தமாக எங்களுக்கு சப்ளை செய்யவேண்டாம். சில்லரை விற்பனையாக பெட்ரோல் விற்பனை நிலையங்களிடமே வாங்கிக்கொள்கிறோம் என்று பேசி ராஜகண்ணப்பன் முடிவெடுத்தார். பெட்ரோல் விற்பனை நிலையங்கள், எங்களிடம் வந்து பஸ்கள் டீசல் நிரப்பவேண்டாம். நாங்களே டெப்போக்களுக்கு அனுப்பிவிடுகிறோம். மொத்தமாக வாங்குவதால் எங்கள் கமிஷனில் இருந்து லிட்டருக்கு 69 காசுகள் குறைத்துக்கொள்கிறோம் என்று கூறிவிட்டன. இதனால், தினமும் ஏறத்தாழ ரூ.11 லட்சம், போக்குவரத்துக்கழகங்களுக்கு மிச்சமாகும்.

பொதுமக்களை பாதிக்கும் பஸ் கட்டண உயர்வை தவிர்ப்பதற்காக அமைச்சர் எடுத்துள்ள இந்த முடிவும் வரவேற்கத்தக்கதே. மொத்த வாடிக்கையாளர்களுக்கு விலை உயர்வு என்றாலும் சமயோசிதமாக இந்த முடிவை உடனடியாக எடுத்துள்ளார். இதேபோல 2013-ம் ஆண்டும் இரட்டை விலை அறிவிக்கப்பட்டது. அப்போது ஒட்டுமொத்தமாக டீசல் வாங்குபவர்களுக்கு லிட்டருக்கு ரூ.11.81 உயர்த்தப்பட்டது. அப்போதும் போக்குவரத்துக்கழகங்கள் ஒரு முடிவை எடுத்தது. சில மாதங்களில் இந்த முடிவை திரும்பப்பெறும் வரையில் போக்குவரத்துக்கழக பஸ்கள் பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையங்களுக்கு சென்றே டீசல் போட்டுக்கொண்டிருந்தன. தற்போது எண்ணெய் நிறுவனங்கள், தமிழக அரசு என இரு தரப்பிலும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற நிலையே எடுக்கப்பட்டுள்ளது.

Next Story