பெட்ரோல்-டீசல் விலை உயரக்கூடாது!


பெட்ரோல்-டீசல் விலை உயரக்கூடாது!
x
தினத்தந்தி 23 March 2022 7:43 PM GMT (Updated: 2022-03-24T01:13:24+05:30)

மக்களுக்கு இன்றியமையாத ஒரு பொருள் என்னவென்றால், பெட்ரோல்-டீசல் தான்.

மக்களுக்கு இன்றியமையாத ஒரு பொருள் என்னவென்றால், பெட்ரோல்-டீசல் தான். இப்போது இருசக்கர வாகனம் இல்லாத வீடே இல்லை என்று சொல்லலாம். ஒவ்வொரு நாளும் 100 மோட்டார் வாகனங்கள் விற்பனையானால், அதில் 80 வாகனங்கள் பெட்ரோல் மூலம் ஓடும் இருசக்கர வாகனமாகத்தான் இருக்கிறது. சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயன்படுத்தும் வாகனம் இது. எனவே, அவர்களுக்கு பெட்ரோல் விலை உயர்வு என்பது தாங்க முடியாதது என்பது மட்டுமல்லாமல், விலைவாசி உயர்வுக்கும் பெட்ரோல், டீசல் விலைதான் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.

இந்தியா தனது பெட்ரோல், டீசல் தேவையை பூர்த்திசெய்ய 85 சதவீத கச்சா எண்ணெயை வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்கிறது. சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொறுத்துத்தான் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. ஆனால், தேர்தல் நடக்கும் காலங்களில் விலையை உயர்த்துவதில்லை என்பது மரபாக இருக்கிறது.

2018-ல் கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் நடக்கும்போது, கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 5 அமெரிக்க டாலர் உயர்ந்த நிலையிலும், 19 நாட்கள் விலையை உயர்த்தவில்லை. தேர்தல் முடிந்தவுடன் தொடர்ந்து 14 நாட்கள் விலை உயர்த்தப்பட்டது. அந்த காலக்கட்டங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.80-ம், டீசல் விலை ரூ.3.38-ம் உயர்த்தப்பட்டது. அதேபோலத்தான் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா மாநிலங்களில் நடந்து முடிந்த தேர்தலையொட்டி, கடந்த நவம்பர் மாதம் 4-ந்தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை.

ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 83 அமெரிக்க டாலராக இருந்த நேரத்தில், மத்திய அரசாங்கம் நவம்பர் 4-ந்தேதி கலால் வரியை பெட்ரோல் மீது ரூ.5-ம், டீசல் மீது ரூ.10-ம் குறைத்தது. இந்த விலை குறைப்புக்கு பிறகும் மத்திய அரசாங்கத்துக்கு பெட்ரோல் மூலம் லிட்டருக்கு ரூ.27.90-ம், டீசல் மூலம் ரூ.21.80-ம் வரியாக கிடைக்கிறது. 2014-ம் ஆண்டு பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.9.50 ஆகத்தான் இருந்தது. தமிழக அரசும் பெட்ரோல் மீதான மாநில வரியை ரூ.3 குறைத்தது. கச்சா எண்ணெய் விலை அதிகபட்சமாக இம்மாதம் 7-ந்தேதி பீப்பாய்க்கு 140 டாலரானது. கடந்த 14 ஆண்டுகளில் இவ்வளவு அதிகவிலை ஒருபோதும் இருந்ததில்லை. நல்ல வேளையாக அடுத்த சில நாட்களில் சர்வதேச விலை குறைந்து, இப்போது கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 117 டாலராக இருக்கிறது.

இந்தநிலையில், 137 நாட்களுக்குப்பிறகு நேற்றுமுன்தினம் திடீரென்று பெட்ரோல்-டீசல் விலையை லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டுவிட்டது. இதுபோதாது என்று நேற்றும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசும், டீசல் 76 காசும் உயர்த்தப்பட்டுவிட்டது. இதேநிலை நீடித்தால் லிட்டருக்கு ரூ.18 முதல் ரூ.20 வரை உயர்ந்துவிடும் என்று அஞ்சப்படுகிறது. இதை பொதுமக்களால் தாங்கவே முடியாது. இப்போது பணவீக்கம் ரிசர்வ் வங்கி நிர்ணயித்த அதிகபட்ச அளவான 6 சதவீதத்தை தாண்டி, 6.7 சதவீதமாக 8 மாதங்களில் இல்லாத அளவு உயர்ந்திருக்கிறது. ஆக, விலைவாசி உயர்வு அதிகமாக இருக்கிறது.

இத்தகைய சூழ்நிலையில், பெட்ரோல், டீசல் விலை மேலும் உயர்ந்தால் விலைவாசி உயர்வு இன்னும் அதிகமாகிவிடும். பெட்ரோல் விலையை சமன் செய்ய மத்திய-மாநில அரசுகள், பெட்ரோல் மீதான வரியை குறைக்கவேண்டும். சரக்கு சேவை வரி வசூல் மிக நன்றாக இருக்கும் சூழ்நிலையில், அரசின் வருவாய்க்கு அதுவே பெருந்துணையாக இருக்கும் என்றவகையில், சாதாரண ஏழை, எளிய மக்களை விலைவாசி உயர்விலிருந்து பாதுகாக்க மத்திய அரசாங்கம் கலால் வரியை குறைத்து, இப்போதுள்ள விலையிலேயே பெட்ரோல்-டீசல் தொடர்ந்து கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Next Story