பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை


பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை
x
தினத்தந்தி 25 March 2022 7:46 PM GMT (Updated: 25 March 2022 7:46 PM GMT)

இந்தியாவில் இருந்து கூப்பிடும் தூரத்தில் இலங்கை இருக்கிறது. மேலும் அங்கு தமிழர்களும் இருப்பதால், தொப்புள் கொடி உறவாகவே திகழ்கிறது.

இந்தியாவில் இருந்து கூப்பிடும் தூரத்தில் இலங்கை இருக்கிறது. மேலும் அங்கு தமிழர்களும் இருப்பதால், தொப்புள் கொடி உறவாகவே திகழ்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு வரை இலங்கையும், இந்தியாவும் பக்கத்து ஊர் போலவே இருந்தது. வேதாரண்யம், முத்துப்பேட்டை போன்ற பகுதிகளில் எம்.ஜி.ஆர். படம் திரையிடப்பட்டால், இலங்கையில் இருந்து இரவே படகில் வந்து படம்பார்த்துவிட்டு, புரோட்டா சாப்பிட்டுவிட்டு, விடியும்முன் இலங்கை திரும்பிவிடுவார்கள். அப்படிப்பட்ட சகோதர பாசத்துடன் இருந்த இலங்கையோடு, பிற்காலங்களில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இதுதான் சாக்கு என்று சீனாவும், இலங்கையில் கால்பதிக்க தொடங்கிவிட்டது. ஹம்பன்தோட்டா துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துவிட்டது. கொழும்பு துறைமுகத்தையொட்டி தொழில் நகரமும் அமைத்துவிட்டார்கள். தற்போது இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. எல்லா பொருட்களுக்குமே தட்டுப்பாடு உள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விற்பனை நிலையங்களில் நீண்டவரிசை இருக்கிறது. தேர்வு எழுத காகிதம், மை தட்டுப்பாட்டால் பள்ளிக்கூட தேர்வுகள் தள்ளிப்போடப்பட்டு இருக்கின்றன. விலைவாசி கடுமையாக உயர்ந்துவிட்டது. இதை சமாளிக்க முடியாமல் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வர தொடங்கிவிட்டார்கள். ஏற்கனவே வெளிநாடுகளில் இருந்து நிறைய கடன் வாங்கிவிட்ட நிலையில், இப்போது பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள சர்வதேச நிதியம், சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் கதவைத்தட்டி, ஏற்கனவே வாங்கிய கடனை திரும்ப கட்டுவதற்கான கால அட்டவணையை மாற்றி அமைக்க கோரி வருகிறது.

தற்போது, இலங்கையின் வெளிகடன் 4,920 கோடி அமெரிக்க டாலராக இருக்கிறது. இதில் சீனா கொடுத்த கடன்மட்டும் 10 சதவீதமாகும். இலங்கையின் அன்னிய செலாவணி தற்போது 236 கோடி அமெரிக்க டாலராக மட்டுமே இருக்கிறது. இதில் 100 கோடி டாலர் ஜூலை மாதம் கடனுக்காக திருப்பிக் கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அன்னிய செலாவணி கையிருப்பில் இல்லாததால் அத்தியாவசிய தேவையான பெட்ரோல்-டீசல், கியாஸ் சிலிண்டர் போன்ற எரிபொருள், பால்பவுடர், உணவுப்பொருட்கள், மருந்துகள் போன்ற பல பொருட்களை இறக்குமதி செய்யமுடியாமல் இலங்கை தவித்துக்கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில்தான் கடந்த 16-ந்தேதி இந்தியா வந்த இலங்கை நிதி மந்திரி பசில் ராஜபக்சே டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். தொடர்ந்து, பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா ரூ.7 ஆயிரத்து 500 கோடி உதவிதர ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த உதவி மூலமாக அத்தியாவசிய பொருட்கள் இந்தியாவில் இருந்து இலங்கை பெற முடியும்.

இப்போது சீனா பக்கமும் கடனுக்காக இலங்கை திரும்பி இருக்கிறது. இந்தியாவிடம் வாங்கியது போல, சீனாவிடம் இருந்து 250 கோடி அமெரிக்க டாலர் உதவியை கோரியிருக்கிறது. இது கொரோனா தொடங்கியவுடன் சீனா வழங்கிய 280 கோடி டாலர் உதவிக்குபிறகு கேட்கப்படும் தொகையாகும். சீனா நிறைய முதலீடுகளை இலங்கையில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய 4 நாடுகளை கொண்ட ‘குவாட்’ அமைப்பு இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க இலங்கைக்கு பல பொருளாதார உதவிகளை செய்துவருகிறது. இப்போதிருக்கும் சூழ்நிலையில் சீனா, இலங்கையின் பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி, அங்கு தன் ஆதிக்கத்தை மேற்கொள்வதை தடுத்தாக வேண்டும். எனவே இலங்கை கேட்கும் உதவிகளை இந்தியாவும், ‘குவாட்’ நாடுகளும் செய்து, மூழ்கிக்கொண்டிருக்கும் இலங்கையை கைதூக்கி மேலே கொண்டுவரவேண்டும். இலங்கைக்கு செய்யும் உதவி அங்குள்ள தமிழர்களுக்கும் பயன்படும் என்பதால், இலங்கை, இந்தியா நல்லுறவில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுத, இலங்கையில் தன் முற்றுகையை போட முயற்சிக்கும் சீனாவை தடுக்க தேவையான உதவிகளை செய்ய வேண்டும். சர்வதேச நிதியத்துக்கும் அழுத்தம் கொடுத்து அவர்களையும் உதவிசெய்ய வலியுறுத்தவேண்டும்.

Next Story