முத்திரை பதித்த முதல்-அமைச்சரின் டெல்லி பயணம் !


முத்திரை பதித்த முதல்-அமைச்சரின் டெல்லி பயணம் !
x
தினத்தந்தி 1 April 2022 10:23 PM GMT (Updated: 2022-04-02T03:53:17+05:30)

ஓய்வறியாமல் உழைக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சமீபத்தில் துபாய், அபுதாபியில் சுற்றுப்பயணம் செய்து ரூ.6,100 கோடி முதலீடுகளையும், 14,700 பேருக்கு வேலைவாய்ப்புகளையும் அளிக்கும் வகையில், ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டு ஒரு சாதனை படைத்துவந்தார்

ஓய்வறியாமல் உழைக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சமீபத்தில் துபாய், அபுதாபியில் சுற்றுப்பயணம் செய்து ரூ.6,100 கோடி முதலீடுகளையும், 14,700 பேருக்கு வேலைவாய்ப்புகளையும் அளிக்கும் வகையில், ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டு ஒரு சாதனை படைத்துவந்தார் என்றால், இப்போது தலைநகராம் டெல்லிக்கு 4 நாள் பயணமாக சென்று, ஒவ்வொரு நாளும் இந்தியாவே உற்றுநோக்கும் வகையில் முத்திரை பதித்துக்கொண்டிருக்கிறார்.

நேற்று முன்தினம் பகல் ஒரு மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் பிரதமர் நரேந்திரமோடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்த நேரத்தில், இருவரும் பரஸ்பர புன்னகையோடு வணக்கம் தெரிவித்து கைகுலுக்கிக்கொண்ட படத்தை பார்க்கும்போது, இதுவல்லவோ அரசியல் நாகரிகம் என்று சொல்லத் தோன்றுகிறது. பிரதமரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 14 தலைப்புகளில் ஒரு கோரிக்கை மனுவை கொடுத்தார். தமிழகத்துக்கு தேவையான அனைத்து கோரிக்கைகளையும் உள்ளடக்கிய அந்த மனுவில், தமிழன் எங்கிருந்தாலும் தாய் தமிழகம் மறக்காது என்பதை சுட்டிக்காட்டும் வகையில், இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அல்லலுறும் இலங்கை தமிழர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை தமிழக அரசின் சார்பில் வழங்குவதற்குரிய அனுமதியை தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்குவேண்டும். பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையை நடத்த அனுமதிக்கவேண்டும். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணைகட்ட மத்திய அரசாங்கம் அனுமதி வழங்கக்கூடாது என்பதோடு, தமிழகத்துக்கு தேவையான பல திட்டங்களை வலியுறுத்தி கூறினார். இந்த சந்திப்பு குறித்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறும்போது, “14 கோரிக்கைகளில் இருக்கக்கூடிய முக்கியத்துவத்தை பிரதமருக்கு தெளிவாக எடுத்துரைத்தேன். அப்போது பொறுமையாக அனைத்தையும் கேட்ட பிரதமர் நரேந்திரமோடி, அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருக்கிறார். பிரதமருடனான இந்த சந்திப்பு மகிழ்ச்சிக்குரியதாகவும், மனநிறைவையளிப்பதாகவும் அமைந்திருந்தது” என்று தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, உள்துறை மந்திரி அமித்ஷா, ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி ஆகியோரையும் சந்தித்து தமிழகத்துக்கு தேவையான பல கோரிக்கைகள், திட்டங்களை வலியுறுத்தினார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமனையும், வர்த்தகத்துறை மந்திரி பியூஸ் கோயலையும் சந்தித்து பேசினார். நிர்மலா சீதாராமனிடம், மத்திய அரசாங்கத்திடம் நிலுவையில் உள்ள ரூ.20,860 கோடியை உடனடியாக தமிழகத்துக்கு வழங்கவேண்டும் என்று கோரியதோடு மட்டுமல்லாமல், சரக்கு-சேவை வரியால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் இழப்பீட்டை கடந்த 5 ஆண்டுகளாக வழங்கிவரும் மத்திய அரசாங்கம், இந்த காலக்கெடுவை மேலும் 2 ஆண்டுகள் நீடிக்கவேண்டும் என்று வலியுறுத்தியது, எல்லா மாநிலங்களாலும் வரவேற்கத்தகுந்ததாக இருக்கிறது.

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்-மந்திரியாக பொறுப்பேற்ற பிறகு, அனைத்து வசதிகளுடன் உயர்தர கல்வித்தரத்துடன் மாதிரிப் பள்ளிக்கூடம் தொடங்கப்பட்டது. அந்த பள்ளிக்கூடத்தை நேரில் பார்க்க மு.க.ஸ்டாலின் விருப்பம் தெரிவித்தபோது, அரவிந்த் கெஜ்ரிவால் நானும் உடன் வருகிறேன் என்று கூறி, அவரை வரவேற்று அழைத்துச் சென்றார். அந்த பள்ளிக்கூடத்தின் வகுப்பறைகளுக்கு சென்று மாணவிகள் பேசியதை கேட்ட மு.க.ஸ்டாலின், அங்கு அமைந்திருக்கும் நீச்சல் குளத்தில் மாணவர்கள் நீச்சல் அடிக்கும் காட்சியையும் பார்த்தார்.

ஏதோ, சென்றோம்.. பார்த்தோம்.. திரும்பிவந்தோம் என்று இல்லாமல், “உடனடியாக இதேபோல ஒரு மாதிரிப் பள்ளிக்கூடத்தை முதலில் சென்னையில் தொடங்குவேன். அதன் திறப்பு விழாவுக்கு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலையும் அழைப்பேன்” என்று அந்த இடத்திலேயே முடிவெடுத்து அறிவித்தது முதல்-அமைச்சரின் நிர்வாக செயல்பாட்டின் வேகத்தை எடுத்துக்காட்டியது. மொத்தத்தில் முதல்-அமைச்சரின் டெல்லி பயணம் தமிழகத்துக்கு பல நன்மைகளை அள்ளிக்கொண்டு வரும் என்பதில் சந்தேகமே இல்லை. இது நிச்சயமாக ஒரு வெற்றிக்கொடி நாட்டிய பயணம் என்றால் அது மிகையாகாது.

Next Story