அண்டை நாடுகளில் அரசியல் புயல்!


அண்டை நாடுகளில் அரசியல் புயல்!
x
தினத்தந்தி 4 April 2022 7:44 PM GMT (Updated: 2022-04-05T01:14:07+05:30)

இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தானிலும், இலங்கையிலும் இப்போது பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தானிலும், இலங்கையிலும் இப்போது பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவு கடுமையான பொருளாதார நெருக்கடியில் இலங்கை உழன்று கொண்டிருக்கிறது. அரசாங்கத்தின் நிதிப்பற்றாக்குறை தாங்கமுடியாத அளவில் இருக்கிறது. கடன் சுமையும் அழுத்திக் கொண்டிருக்கிறது. அத்தியாவசிய பண்டங்கள் கிடைக்காமல், மக்கள் அவதியின் உச்சத்திற்கு சென்றிருக்கிறார்கள். பெரும்பாலான நேரம் மின்சார வெட்டு. வேறு வழியில்லாமல் மக்கள் வீதிக்குவந்து போராடத் தொடங்கிவிட்டார்கள்.

கடந்த மார்ச் 31-ந்தேதி இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டின் முன்பே ஆத்திரத்தோடு மக்கள் போராட்டம் நடத்தினர். நேற்று பிரதமர் மகிந்த ராஜபக்சே வீட்டின் முன்பும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த அசாதாரண சூழ்நிலையில், பிரதமர் மகிந்த ராஜபக்சேவை தவிர மற்ற மந்திரிகள் எல்லாம் ராஜினாமா செய்துவிட்டார்கள். எந்த நேரம் என்ன நடக்குமோ? என்ற நிச்சயமற்ற நிலையில், இப்போது இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே 4 மந்திரிகளை நியமித்துள்ளார்.

இலங்கையில் பொருளாதார சீர்கேடு என்பது இப்போது திடீரென தோன்றிவிடவில்லை. அதிக வருவாய்க்கு சுற்றுலாவையே நம்பியிருக்கிறது. 2019-ம் ஆண்டு ஈஸ்டர் பண்டிகை அன்று நடந்த குண்டு வெடிப்புகளால் ஏராளமான சுற்றுலா பயணிகளும் உயிரிழந்த நிலையில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தடைபட்டது. போதாக்குறைக்கு கொரோனாவும் சேர்ந்துகொண்டது. 2020-ம் ஆண்டு நாட்டின் வளர்ச்சி மிகவும் சுருங்கியது. வெளிநாட்டு முதலீடுகள் வரவில்லை. இப்படி எல்லா பக்கத்திலிருந்தும் அடிமேல் அடி, கடனுக்கு மேல் கடன் என்ற நிலையில், மக்கள் வாழவே வழியில்லாதநிலை ஏற்பட்டுள்ளது.

ஆயிரம்தான் இருந்தாலும், இந்தியாதான் இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டியது. கடனுதவி மட்டுமல்லாமல், கடந்த வாரம் சனிக்கிழமை 40 ஆயிரம் டன் டீசல் அனுப்பப்பட்டது. கடந்த 50 நாட்களில் மட்டும் 2 லட்சம் டன் எரிபொருள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், 3 லட்சம் டன் அரிசி தருவதாக அறிவித்ததுடன், முதற்கட்டமாக 40 ஆயிரம் டன் அரிசி தமிழக துறைமுகங்கள் மூலமாக இலங்கைக்கு அனுப்பப்பட இருக்கிறது.

சமீபத்தில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கை தமிழர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை அனுப்ப தமிழக அரசை அனுமதிக்கவேண்டும்” என்று கோரிக்கைவிடுத்துள்ளார். இப்போது இலங்கைக்கு, எந்தநிலையிலும் நமக்கு கைகொடுக்கும் சகோதரர் இந்தியாதான் என்று புரிந்திருக்கும்.

இதுபோல, இந்தியாவை எதிரியாக கருதிக்கொண்டிருக்கும் பாகிஸ்தானில், இதுவரை எந்த பிரதமரும் தன் பதவிக்காலமான 5 ஆண்டுகளை முழுமையாக பூர்த்தி செய்ததில்லை. அதேபோல, இப்போது பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்த நிலையில், துணை சபாநாயகர் அதை நிராகரித்தார். தற்போது இம்ரான்கானுக்கு பெரும்பாலான கட்சிகள் ஆதரவில்லை. சில கூட்டணி கட்சிகள் எதிர் வரிசைக்கு போய்விட்டன. மொத்தமுள்ள 342 எம்.பி.க்களில், தங்களுக்கு ஏறத்தாழ 200 எம்.பி.க்களின் ஆதரவு இருப்பதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. பாகிஸ்தான் ராணுவமும் இம்ரான்கானுக்கு ஆதரவாக இல்லை. இந்தநிலையில், இம்ரான்கான் பரிந்துரையை ஏற்று, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைப்பதாக அந்த நாட்டு அதிபர் ஆரிப் ஆல்வி அறிவித்துள்ளார்.

ஆனால், எதிர்க்கட்சி எம்.பி.க்கள், புதிய பிரதமராக பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் ஷெர்ரி ரகுமானை தேர்ந்தெடுத்துள்ளனர். இவ்வளவு நாளும் இந்தியாவை புரிந்துகொள்ளாத இம்ரான்கான், இப்போது இந்தியாவின் வெளிநாட்டு கொள்கையை புகழ்ந்து பேசியிருக்கிறார். இந்தியா மீதான அவரது பார்வையே தற்போது வேறாக இருக்கிறது.

அண்டை நாடுகளில் புயல் வீசிக்கொண்டிருக்கும் நேரத்தில், அரசியல் விவகாரங்களில் தலையிடாத இந்தியா, இலங்கையின் துயரத்தில் பங்குகொள்ள ஓடோடி வந்திருப்பது, அதன் அரசியல் பெருந்தன்மையையும், கருணை உள்ளத்தையும் காட்டுகிறது.


Next Story