என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு பாடத்திட்டம் மாற்றம்


என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு பாடத்திட்டம் மாற்றம்
x
தினத்தந்தி 7 April 2022 8:02 PM GMT (Updated: 2022-04-08T01:32:09+05:30)

பல ஆண்டுகளுக்கு முன்பு என்ஜினீயரிங் படிப்புகளுக்கு பெரிய மவுசு இருந்தது. இடம் கிடைப்பதே குதிரை கொம்பாக இருந்தது.

பல ஆண்டுகளுக்கு முன்பு என்ஜினீயரிங் படிப்புகளுக்கு பெரிய மவுசு இருந்தது. இடம் கிடைப்பதே குதிரை கொம்பாக இருந்தது. இதற்கு காரணம், படிக்கும்போதே பெரும்பாலான மாணவர்களுக்கு “கேம்பஸ் இன்டர்வியூ’’ மூலம் வேலைகிடைத்தது. கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைக்காதவர்களுக்கும், படித்துமுடித்த சில மாதங்களுக்குள் நல்ல வேலை அமைந்தது. என்ஜினீயரிங் படித்த மாணவர்களால் குடும்பத்தின் பொருளாதாரமே உயர்ந்தது. படித்து முடித்தவுடன் தங்கள் மகன் அல்லது மகள் குடும்பத்தை கைதூக்கிவிடுவார்கள் என்ற எண்ணத்தில், ஏழை-எளிய மக்கள்கூட கையில் பணம் இல்லை என்றாலும், கடன் வாங்கியோ, நகைகளை அடகு வைத்தோ, விற்றோ பிள்ளைகளை படிக்க வைத்தார்கள். அந்த எண்ணங்களும் வீண் போகவில்லை. இவ்வாறு மாணவர்களின் முதல்தேர்வு என்ஜினீயரிங் கல்லூரி என்ற நிலையில், ஏராளமான என்ஜினீயரிங் கல்லூரிகள் தனியாரால் தொடங்கப்பட்டன. அரசும் கல்லூரிகளை தொடங்கின. நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் உருவாகின.

550-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகள் தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் இருந்தன. ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சத்துக்கும் மேல் மாணவர்கள் படித்துமுடித்து வெளியேறினர். காலப்போக்கில் வேலைவாய்ப்புகள் மங்கின. என்ஜினீயரிங் படித்து நிறையபேர் வேலையில்லாமல் இருக்கும் நிலையில், கல்லூரிகளில் போதிய அளவு மாணவர் சேர்க்கையும் குறையத் தொடங்கியது. ஆண்டுதோறும் பல கல்லூரிகள் மூடப்பட்டு வந்தன. பல கல்லூரிகள் பாடப்பிரிவுகளை போதிய மாணவர்கள் இல்லாமல் ரத்துசெய்துவிட்டன. இப்போது 440 என்ஜினீயரிங் கல்லூரிகளும், 28 நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் இருக்கின்றன. ஆனால் போதிய அளவு மாணவர் சேர்க்கை இல்லாமல் தற்போதும் கல்லூரிகள் தள்ளாடுகின்றன. ஒரு காலத்தில் படித்தவுடன் கைமேல் வேலை என்று கருதப்பட்ட சிவில், மெக்கானிக்கல் படிப்புகளுக்கு வேலைவாய்ப்புகள் இல்லாமல் பல கல்லூரிகளில் அந்த பாடப்பிரிவுகள் இப்போது இல்லை. என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு ஏன் கிராக்கி இல்லை? என்று ஆராய்ந்தால், உடனடி வேலைவாய்ப்பு கிடைக்காததுதான்.

இவ்வளவுக்கும் நிறைய தொழிற்சாலைகள் புதிது புதிதாக உருவாகின்றன. அவர்களுக்கு வேலையாட்கள் தேவையும் நிறைய இருக்கிறது. ஆனால் அவர்கள் எதிர்பார்க்கும் தகுதியும், திறமையும் இப்போதைய என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள பாடத்திட்டத்தில் இல்லை. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அண்ணா பல்கலைக்கழகம் பாடத்திட்டத்தில் சின்ன, சின்ன மாற்றங்களை செய்தாலும், அதெல்லாம் நவீன காலத்துக்கு போதுமானதாக இல்லை. கடைசியாக என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு பாடத்திட்டத்தை முழுமையாக மாற்றி 25 ஆண்டுகள் ஆகின்றன. கடந்த 25 ஆண்டுகளில் உலகம் எவ்வளவோ மாறிவிட்டது. வேலை வழங்குபவர்கள், வேலைக்கு எடுக்கும் இளைஞர்களுக்கு இன்னென்ன தகுதிவேண்டும்? என்று எதிர்பார்க்கிறார்கள். அதை பழைய பாடத்திட்டம் பூர்த்தி செய்கிறதா? என்று பார்த்தால், அது இல்லை. எனவே 25 ஆண்டுகளுக்கு பிறகு, அண்ணா பல்கலைக்கழகம் என்ஜினீயரிங் கல்லூரிகளில் பாடத்திட்டத்தை மாற்ற நிபுணர் குழுவின் ஆலோசனையை பெறுவதற்கு முடிவு செய்திருக்கிறது.

இந்த புதியக்குழு 90 நிபுணர்களை கொண்டதாக இருக்கும். அதாவது, 10 பேர் கல்வியாளர்கள், 10 பேர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், 10 பேர் மனிதவள நிபுணர்கள், 10 பேர் என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள பல்வேறு படிப்புகளில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள், 10 பேர் பழைய மாணவர்களில் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் என்பது உள்பட பல தரப்பினரை கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் எடுத்துள்ள இந்த முயற்சி, அருமையான முயற்சியாகும். நிபுணர்களின் கருத்தை வாங்கும்முன், தொழிற்சாலைகளையும், தொழில் நிறுவனங்களையும் கலந்து ஆலோசித்து வேலைவாய்ப்புகளுக்கு என்னென்ன திறமைகளை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்? என்பதை உறுதி செய்து, வெளிநாட்டில் தலைசிறந்த பல்கலைக்கழகங்களோடும் தொடர்புகொண்டு, ஒரு நல்ல பாதையை அண்ணா பல்கலைக்கழகம் காட்ட வேண்டும் என்பதே என்ஜினீயரிங் படிப்புகளுக்கு பழைய ஒளிமிகுந்த காலம் இருக்கவேண்டும் என்று விரும்பும் மாணவர்களின், பெற்றோரின் கோரிக்கையாக இருக்கிறது.

Next Story