தேவையற்ற தேசத்துரோக சட்டம் !


தேவையற்ற தேசத்துரோக சட்டம் !
x
தினத்தந்தி 12 May 2022 7:46 PM GMT (Updated: 2022-05-13T01:16:08+05:30)

இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சிசெய்து கொண்டிருந்தபோது, சுதந்திரத்திற்காக போராடியவர்களை அடக்கி ஒடுக்க கொண்டுவரப்பட்டதுதான் தேசத்துரோக சட்டம்.

இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சிசெய்து கொண்டிருந்தபோது, சுதந்திரத்திற்காக போராடியவர்களை அடக்கி ஒடுக்க கொண்டுவரப்பட்டதுதான் தேசத்துரோக சட்டம். ‘இம்’ என்றால் சிறை வாசம், ‘ஏன்’ என்றால் வனவாசம் என்று சொல்லும் வகையில், நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரர்களை சிறையில் அடைத்து சித்திரவதை செய்வதற்காக, 1860-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டதுதான் தேசத்துரோக சட்டம். இந்த சட்டத்தின் அடிப்படையில்தான், சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்கள் எல்லாம் சிறையில் வாடி வதங்கினார்கள்.

சுதந்திரம் என்ற வார்த்தையே தேசத்துரோகமாக கருதப்பட்ட காலம் அது. வ.உ.சிதம்பரம் பிள்ளையை சிறையில் செக்கிழுக்க வைத்தது இந்த சட்டம்தான். “பழையன கழிதலும், புதியன புகுதலும்” என்பது வாழ்க்கையின் நியதி. ஆனால், ஆங்கிலேயர்கள் தங்கள் வசதிக்காக கொண்டுவந்த, அதுவும் 162 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட தேசத்துரோக சட்டத்தின் பிரிவுகள், இந்திய தண்டனை சட்டம் ‘124 ஏ’ பிரிவுடன் இணைக்கப்பட்டுள்ளதுதான் கொடுமையிலும் கொடுமை.

ஆங்கிலேயர்கள் காலத்தில் இங்கிலாந்து அரசுக்கு எதிராக பேச்சு, நடத்தை, கிளர்ச்சியை தூண்டுதல் போன்ற தேசத் துரோக குற்றங்களுக்காக கடுமையான தண்டனையை வழங்கும் இந்தச் சட்டப்பிரிவு, இந்திய தண்டனை சட்டத்தில் அரசுக்கு எதிராக வார்த்தைகள், சைகைகள் மற்றும் பிற வழிகளில் துவேசம், அவமதிப்பு மற்றும் அவமரியாதையை உருவாக்குதல் என்பதை குறிப்பிடுகிறது. “இந்த சட்டத்தை நீக்கவேண்டும். இது அடிப்படை பேச்சுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமைக்கு விரோதமானது” என்று காலாகாலமாக போராட்டம் நடந்தது.

அதுவும் கடந்த 2010-ம் ஆண்டுக்கு பிறகு, ஏராளமான ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், மாணவர்கள், ஏன் சாதாரண குடிமக்கள் மீதே தேசத் துரோக சட்டம் பாய்ந்தது. இப்போது 13 ஆயிரம் பேர் இந்த சட்டத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்கள். ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது, கூடங்குளம் அணுமின்நிலையத்தை எதிர்த்து போராடிய ஏராளமானவர்கள், குறிப்பாக மீனவ சமுதாயத்தினர் மீது இந்த தேசத்துரோக சட்டம் மூலம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

1962-ம் ஆண்டே சுப்ரீம் கோர்ட்டில் கேதார்நாத்சிங் வழக்கின் தீர்ப்பின்போதும், 1995-ம் ஆண்டு பல்வந்த் சிங் வழக்கின் தீர்ப்பின்போதும் சில தெளிவான வழிமுறைகள், நிபந்தனைகள் தெரிவிக்கப்பட்டதே தவிர, முற்றிலுமாக நீக்கப்படவில்லை. இப்போது சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூரியகாந்த், ஹீமா கோலி அடங்கிய பெஞ்ச் சர்ச்சைக்குரிய இந்த இந்திய தண்டனை சட்டம் ‘124 ஏ’ பிரிவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

“இதை மறு ஆய்வு செய்கிறோம்” என்று மத்திய அரசு கூறியதை ஏற்றுக்கொண்டு, மறு ஆய்வு செய்ய அனுமதியும் கொடுத்துள்ளது. இந்த சட்டத்தின்கீழ் புதிதாக எந்த வழக்கும் பதிவு செய்யக்கூடாது என்றும், ஏற்கனவே இந்த சட்டத்தின் அடிப்படையில் நிலுவையில் இருக்கும் விசாரணைகள், அப்பீல்கள், நடைமுறைகள் எல்லாமே கிடப்பில் போடப்பட வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்கீழ், இதற்கு முன்பாக கைது செய்யப்பட்டவர்கள், ஜாமீனில் வெளிவரவும் முடியும் என்று அந்தத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்பு எல்லோராலும் வரவேற்கப்படுகிறது. ஆனால், மத்திய அரசாங்கம் இதை மறு ஆய்வு செய்யாமல் தூக்கி எறியும் முடிவுக்கு வரவேண்டும் என்பது கோரிக்கையாக இருக்கிறது. மறு ஆய்வு என்ற பெயரில் நீண்டகாலம் எடுத்துக்கொள்ளக்கூடாது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 3-வது வாரம் நடக்கிறது. அந்த விசாரணையின்போது, இடைக்கால தடை விதிக்கப்பட்ட இந்த தேசத் துரோக சட்டப் பிரிவை, ஏற்கனவே ஆங்கிலேயர் காலத்தில் பிறப்பிக்கப்பட்ட பல சட்டங்களை பா.ஜ.க. அரசாங்கம் கைவிட்டதுபோல, நிரந்தரமாக ரத்து செய்ய மத்திய அரசாங்கம் முடிவெடுத்துள்ளது என்ற நல்ல செய்தியை கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

Next Story