ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்:இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 248 ரன்கள் எடுத்தது


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்:இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 248 ரன்கள் எடுத்தது
x
தினத்தந்தி 26 March 2017 10:15 PM GMT (Updated: 26 March 2017 8:31 PM GMT)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் நிதானமாக விளையாடி வரும் இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்துள்ளது.

தர்மசாலா, 

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தர்மசாலாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 300 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தது. கேப்டன் ஸ்டீவன் சுமித் சதம் அடித்தார். அதன் பிறகு முதல் நாளில் எஞ்சியிருந்த ஒரு ஓவரை ஆடிய இந்திய அணி ரன் எதுவும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் 2-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. ‘விக்கெட்டை எளிதில் இழந்து விடக்கூடாது; தடுப்பாட்டத்தில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும்’ என்ற நோக்குடன் இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் லோகேஷ் ராகுலும், முரளிவிஜயும் களம் இறங்கினர். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் ஆக்ரோஷமாக, அவ்வப்போது பவுன்சர்களை போட்டு தாக்குதலை தொடுத்தனர்.

எச்சரிக்கையுடன் ஆடிய போதிலும் இந்தியாவின் தொடக்க ஜோடி 11-வது ஓவரில் பிரிந்தது. விஜய் 11 ரன்னில் (36 பந்து, 2 பவுண்டரி), வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட்டின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட்டிடம் கேட்ச் ஆனார். 2-வது விக்கெட்டுக்கு புஜாரா நுழைந்தார். ராகுல் 10 ரன்னில் இருந்த போது, ஸ்லிப்பில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ரென்ஷா கோட்டை விட்டார்.

ராகுல் அரைசதம்

புஜாரா வழக்கம் போல் நிதானத்தை கடைபிடிக்க இந்தியாவின் ஸ்கோர் ஆமை வேகத்தில் நகர்ந்தது. உணவு இடைவேளையின் போது இந்திய அணி 28 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 64 ரன்கள் மட்டுமே (ஆஸ்திரேலியா உணவு இடைவேளையின் போது 131 ரன் சேர்த்தது) எடுத்திருந்தது.

அதே சமயம் ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டிற்கு ஓடவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்திய லோகேஷ் ராகுல் இந்த தொடரில் 5-வது முறையாக அரைசதத்தை கடந்தார். ஆனால் இந்த முறையும் அவரால் அரைசதத்தை மூன்று இலக்க ஸ்கோராக மாற்ற இயலவில்லை.

அணியின் ஸ்கோர் 108 ரன்களை எட்டிய போது, ராகுல் (60 ரன், 124 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) கம்மின்ஸ் ஆப்-சைடுக்கு வெளியே வீசிய பவுன்சர் பந்தை தேவையில்லாமல் வளைத்து பிடித்து (புல்ஷாட்) அடிக்க முயன்றார். பந்து பேட்டின் விளிம்பில் பட்டு எழும்பி ‘கவர்’ திசையில் நின்ற வார்னரிடம் கேட்ச்சாக விழுந்தது. முந்தைய பந்தில் ராகுலை நோக்கி ஏதோ வசைப்பாடி வம்புக்கு இழுத்த கம்மின்ஸ் அடுத்த பந்திலேயே அவரை காலி செய்து விட்டார்.

புஜாரா 57 ரன்

இதைத் தொடர்ந்து கேப்டன் ரஹானே அடியெடுத்து வைத்தார். ஆச்சரியப்படும் வகையில் ரன் கணக்கை பவுண்டரி, சிக்சருடன் ரஹானே தொடங்கினார். புஜாரா - ரஹானே ஜோடி விளையாடிய விதம் வலுவான ஒரு அடித்தளத்தை அமைப்பார்கள் போல் தான் தோன்றியது. ஆனால் தேனீர் இடைவெளிக்கு பிறகு ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சு எடுபட ஆரம்பித்ததும் நிலைமை தலைகீழானது. புஜாரா 57 ரன்களில் (151 பந்து, 6 பவுண்டரி) சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனின் பந்து வீச்சில் அருகில் நின்ற பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப்பிடம் கேட்ச் ஆனார். அடுத்து வந்த கருண் நாயர் (5 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. கேப்டன் ரஹானேவும் (46 ரன், 104 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) முக்கியமான கட்டத்தில் ஸ்லிப்பில் நின்ற ஸ்டீவன் சுமித்திடம் சிக்கினார். சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன், இந்திய வீரர்களுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்தார்.

முதல் மூன்று டெஸ்டில் எல்லா இன்னிங்சிலும் ஒற்றை இலக்கில் நடையை கட்டிய அஸ்வின் இந்த இன்னிங்சில் 30 ரன்கள் (49 பந்து, 4 பவுண்டரி) எடுத்தார். நாதன் லயனின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆன அஸ்வின், டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்து பார்த்தும் பலன் கிட்டவில்லை.

இந்தியா 6-248 ரன்

மிடில்பகுதியில் இந்திய வீரர்களின் தடுமாற்றத்தால் ஆஸ்திரேலியாவின் கை சற்று ஓங்கியது. 7-வது விக்கெட்டுக்கு விருத்திமான் சஹாவும், ரவீந்திர ஜடேஜாவும் கைகோர்த்தனர். ஜடேஜா, எதிரணியின் சுழற்பந்து வீச்சில் அதிரடியாக 2 சிக்சர்களை பறக்க விட்டு ஆறுதல் அளித்தார். சஹா 9 ரன்னில் ஆடிக்கொண்டிருந்த போது வழங்கிய எளிதான கேட்ச் வாய்ப்பை ஸ்லிப்பில் நின்ற ரென்ஷா நழுவ விட்டார். அந்த கேட்ச்சை மட்டும் பிடித்திருந்ததால், இந்திய அணியின் நிலைமை இன்னும் மோசமாகியிருக்கும்.

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 91 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் (ரன்ரேட் 2.72) எடுத்துள்ளது. விருத்திமான் சஹா 10 ரன்னுடனும் (43 பந்து), ரவீந்திர ஜடேஜா 16 ரன்களுடனும் (23 பந்து, 2 சிக்சர்) களத்தில் இருக்கிறார்கள். ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் லயன் 4 விக் கெட்டுகளை வீழ்த்தினார்.

முடிவு கிடைக்கும்?

இந்திய அணி இன்னும் 52 ரன்கள் பின்தங்கி உள்ளது. கைவசம் 4 விக்கெட்டுகள் இருக்கிறது. இரு அணிக்கும் சரிசமமான ஒரு வாய்ப்பே தென்படுகிறது.

ஆனால் ஆடுகளத்தில் இப்போதே பந்து பவுன்சுடன் குறிப்பிடத்தக்க அளவுக்கு சுழன்றும் திரும்புகிறது. அடுத்த மூன்று நாட்கள் இங்கு பேட் செய்ய இன்னும் கடினமாக இருக்கும். அதனால் இந்த டெஸ்டில் நிச்சயம் முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 3-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.

ஸ்கோர் போர்டு

முதல் இன்னிங்ஸ்

ஆஸ்திரேலியா 300 ரன்

இந்தியா

லோகேஷ் ராகுல்(சி) வார்னர்

(பி) கம்மின்ஸ் 60

விஜய் (சி)வேட்(பி)ஹேசில்வுட் 11

புஜாரா (சி) ஹேன்ட்ஸ்கோம்ப்

(பி) லயன் 57

ரஹானே (சி) சுமித் (பி) லயன் 46

கருண் நாயர்(சி)வேட்(பி)லயன் 5

அஸ்வின் எல்.பி.டபிள்யூ(பி)லயன் 30

விருத்திமான் சஹா(நாட்-அவுட்) 10

ஜடேஜா (நாட்-அவுட்) 16

எக்ஸ்டிரா 13

மொத்தம் (91 ஓவர்களில்

6 விக்கெட்டுக்கு) 248

விக்கெட் வீழ்ச்சி: 1-21, 2-108, 3-157, 4-167, 5-216, 6-221

பந்து வீச்சு விவரம்

ஹேசில்வுட் 18-6-40-1

கம்மின்ஸ் 21-5-59-1

நாதன் லயன் 28-5-67-4

ஸ்டீவ் ஓ கீபே 24-4-69-0

Next Story