3-வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி


3-வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி
x
தினத்தந்தி 1 July 2017 5:30 AM GMT (Updated: 2017-07-01T11:00:29+05:30)

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 93 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி.

ஆண்டிகுவா,

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. மழையால் முதலாவது ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது. 2-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 3-வது ஒரு நாள் போட்டி ஆன்டிகுவாவில் நேற்று நடந்தது. முந்தைய நாள் இரவு பெய்த மழை காரணமாக ஆட்டம் 45 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது. இந்திய அணியில் மாற்றம் ஏதும் இல்லை. வெஸ்ட் இண்டீஸ் அணியில் மூன்று மாற்றமாக கீரன் பவெல், ஜோனதன் கார்டர், அல்ஜாரி ஜோசப் ஆகியோர் நீக்கப்பட்டு புதுமுக வீரர்கள் கைல் ஹோப், கேஸ்ரிக் வில்லியம்ஸ் மற்றும் ரோவ்மன் பவெல் சேர்க்கப்பட்டனர். கைல் ஹோப்பின் சகோதரர் ஷாய் ஹோப்பும் அணியில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து 3-வது முறையாக டாஸ் ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர் இந்த முறையும் பந்துவீச்சையே தேர்வு செய்தார்.

இதையடுத்து ரஹானேவும், ஷிகர் தவானும் இந்தியாவின் பேட்டிங்கை தொடங்கினர். தவான் இரண்டு ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் விராட் கோலியும் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து களம் புகுந்த யுவராஜ்சிங் 39 ரன்கள் (55 பந்து, 4 பவுண்டரி) எடுத்த நிலையில் எல்.பி.டபிள்யூ. ஆனார். மறுமுனையில் தாக்குப்பிடித்து போராடிய ரஹானே 72 ரன்களில் (112 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெளியேறினார்.இதன் பின்னர் டோனியும், கேதர் ஜாதவும் ஜோடி சேர்ந்து இறுதி கட்டத்தில் அதிரடி காட்டினர். 

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் சேர்த்தது. டோனி 78 ரன்களுடனும் (79 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), கேதர் ஜாதவ் 40 ரன்களுடனும் (26 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர். இதன் மூலம் வெஸ்ட் இண்டீசுக்கு 252 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

தொடர்ந்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியினர் ரன்கள் குவிக்க தடுமாறினர். இந்திய அணியினரின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சீரான இடைவேளியில் ஆட்டமிழந்தனர். ஜெசன் முகமது 40 ரன்களும் ரோவ்மன் பவல் 30 ரன்களும் ஷாய் ஹோப் 24 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். மேற்கிந்திய தீவுகள் அணி 38.1 ஓவரில் 158 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய தரப்பில் அஸ்வின், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்களையும், பாண்டியா 2 விக்கெட்டையும் சாய்த்தனர். இதன் மூலம் இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மூன்று போட்டிகள் முடிந்த நிலையில் இந்திய அணி 2-0 என்று முன்னிலை வகிக்கிறது. அடுத்த போட்டி வருகிற ஞாயிறு அன்று நடைபெற உள்ளது.


Next Story