ஊதிய ஒப்பந்த பிரச்சினை தீராததால் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தை புறக்கணித்த ஆஸ்திரேலிய ‘ஏ’ அணி வீரர்கள்


ஊதிய ஒப்பந்த பிரச்சினை தீராததால் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தை புறக்கணித்த ஆஸ்திரேலிய ‘ஏ’ அணி வீரர்கள்
x
தினத்தந்தி 6 July 2017 9:03 PM GMT (Updated: 6 July 2017 9:03 PM GMT)

ஊதிய ஒப்பந்த பிரச்சினையில் முடிவு எட்டப்படாததால் ஆஸ்திரேலிய ‘ஏ’ கிரிக்கெட் அணி வீரர்கள் தென் ஆப்பிரிக்க பயணத்தை புறக்கணிப்பதாக நேற்று அறிவித்தனர்.

சிட்னி,

ஊதிய ஒப்பந்த பிரச்சினையில் முடிவு எட்டப்படாததால் ஆஸ்திரேலிய ‘ஏ’ கிரிக்கெட் அணி வீரர்கள் தென் ஆப்பிரிக்க பயணத்தை புறக்கணிப்பதாக நேற்று அறிவித்தனர். இதனால் போட்டி தொடர் ரத்தாகிறது.

ஊதிய ஒப்பந்த பிரச்சினை

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் கடந்த மாதம் இறுதியுடன் முடிந்து விட்டது. புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்துக்கும் இடையே சில மாதங்களாக நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.

சம்பளம் தவிர கிரிக்கெட் வாரிய வருவாயில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை வீரர்களுக்கு வழங்கி வரும் பழைய நடைமுறையை ஒப்பந்தத்தில் இருந்து நீக்க வேண்டும் என்பதில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பிடிவாதமாக இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் வருவாய் பகிர்வு முறை தொடர வேண்டும் என்பதில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் உறுதியாக இருக்கிறது. இரு தரப்பினரும் தங்கள் நிலைப்பாட்டில் இருந்து இறங்கி வர மறுப்பதால் ஒப்பந்த விவகாரத்தில் இழுபறி தொடருகிறது.

தென்ஆப்பிரிக்க பயணம் புறக்கணிப்பு

இந்த நிலையில் வருகிற 12–ந் தேதி முதல் தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் (4 நாள் ஆட்டம்) மற்றும் 3 நாடுகள் இடையிலான ஒருநாள் போட்டி தொடரில் (3–வது அணி இந்தியா ஏ) விளையாட திட்டமிட்டு இருந்த உஸ்மான் கவாஜா தலைமையிலான ஆஸ்திரேலிய ‘ஏ’ கிரிக்கெட் அணியினர் தென்ஆப்பிரிக்க பயணத்தை புறக்கணிப்பதாக நேற்று அறிவித்தனர்.

இது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், ‘ஊதிய ஒப்பந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதால் ஆஸ்திரேலிய ‘ஏ’ அணி வீரர்கள் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளமாட்டார்கள் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். எல்லா வீரர்களின் நலன் கருதி தங்களது சொந்த லட்சியத்தை தியாகம் செய்து ஆஸ்திரேலிய ‘ஏ’ அணியினர் இந்த முடிவை எடுத்துள்ளனர். அவர்களின் இந்த தன்னலமற்ற செயல் வீரர்கள் இடையே இருக்கும் ஒற்றுமையையும், அர்ப்பணிப்பையும் காட்டுகிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் பிடிவாதமாக போக்கு எல்லா வீரர்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய வாரியம் ஏமாற்றம்

வீரர்களின் புறக்கணிப்பு முடிவு ஏமாற்றம் அளிப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘புதிய ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. பேச்சுவார்த்தை முடிவுக்கு வராத நிலையில் தென்ஆப்பிரிக்க பயணத்தை புறக்கணிக்க எடுத்த முடிவு தவறானது’ என்று ஆஸ்திரேலிய வாரியம் கூறியுள்ளது.

ஆஸ்திரேலிய சீனியர் அணி ஆகஸ்டு மாதத்தில் வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும். அதன் பிறகு அந்த அணி இந்தியாவில் ஒருநாள் போட்டித் தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளது. நவம்பரில் உள்ளூரில் ஆ‌ஷஸ் தொடரில் விளையாட வேண்டி இருக்கிறது. வீரர்கள் வேலைநிறுத்தத்தில் குதித்து இருப்பதால் இந்த போட்டி தொடர்கள் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.


Next Story