3-வது ஒருநாள் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா சுருண்டது: உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாஹல், குல்தீப் துருப்பு சீட்டாக இருப்பார்கள்


3-வது ஒருநாள் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா சுருண்டது: உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாஹல், குல்தீப் துருப்பு சீட்டாக இருப்பார்கள்
x
தினத்தந்தி 8 Feb 2018 10:00 PM GMT (Updated: 8 Feb 2018 8:20 PM GMT)

சுழற்பந்து வீச்சாளர்கள் யுஸ்வேந்திர சாஹலும், குல்தீப் யாதவும் 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியின் துருப்பு சீட்டாக இருப்பார்கள் என்று கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

கேப்டவுன்,

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் மிரட்டி வரும் சுழற்பந்து வீச்சாளர்கள் யுஸ்வேந்திர சாஹலும், குல்தீப் யாதவும் 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியின் துருப்பு சீட்டாக இருப்பார்கள் என்று கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

இந்தியா அபார வெற்றி

கேப்டவுனில் நேற்று முன்தினம் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 6 விக்கெட்டுக்கு 303 ரன்கள் குவித்தது. கேப்டன் விராட் கோலி 160 ரன்களும் (12 பவுண்டரி, 2 சிக்சர்), ஷிகர் தவான் 76 ரன்களும் விளாசினர்.

விராட் கோலி பவுண்டரி, சிக்சரை தவிர்த்து 100 ரன்களை ஓடியே எடுத்தார். இதன் மூலம் அதிக ரன்களை ஓடி எடுத்த இந்திய வீரர், ஒட்டுமொத்த அளவில் 5-வது வீரர் என்ற சிறப்பை கோலி பெற்றார்.

அடுத்து களம் இறங்கிய தென்ஆப்பிரிக்க அணி யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோரின் சுழல் வலையில் சிக்கி சிதறியது. அந்த அணி 40 ஓவர்களில் 179 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வி அடைந்தது. டுமினியை (51 ரன்) தவிர மற்றவர்கள் குறைந்த ரன்னில் நடையை கட்டினர். இந்திய அணி தரப்பில் யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் தலா 4 விக்கெட்டுகளும், பும்ரா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 3-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. தென்ஆப்பிரிக்க மண்ணில் ஒரு நாள் தொடரில் ஒன்றில் இந்தியா மூன்று ஆட்டங்களில் வெற்றி கண்டது இதுவே முதல் முறையாகும்.

விராட் கோலி பேட்டி

ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட இந்திய கேப்டன் விராட் கோலி நிருபர்களிடம் கூறியதாவது:-

இறுதி கட்டத்தில் தசைப்பிடிப்பால் கொஞ்சம் தளர்வடைந்தேன். ஆனாலும் அணி 300 ரன்களை கடக்க வேண்டும் என்றால் நான் கடைசி வரை களத்தில் நின்று ஆடுவது அவசியம் என்பதை உணர்ந்திருந்தேன். எப்போதும் யாராவது ஒரு பேட்ஸ்மேன் கடைசி வரை நின்று பேட்டிங் செய்வது அணிக்கு தேவையானதாகும். அது மட்டுமின்றி இது போன்ற சூழலே நம்மை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் சோதித்து பார்க்கக்கூடியது. இன்னிங்ஸ் முழுவதும் விளையாடி ஆட்டம் இழக்காமல் 160 ரன்கள் குவித்தது மிகவும் திருப்தி அளிக்கிறது.

4-வது ஒரு நாள் போட்டியில் இதைவிட இன்னும் தீவிரமாக விளையாடுவோம். ஏனெனில் எந்த வகையிலும் தொடரை இழக்கக்கூடாது. தென்ஆப்பிரிக்க அணியினர் பதிலடி கொடுக்க எல்லா வகையிலும் எழுச்சி பெற முயற்சிப்பார்கள். அதற்கு இடம் கொடுக்கக்கூடாது என்று விரும்புகிறோம்.

இந்த ஆண்டில் நான் 30-வது வயதில் அடியெடுத்து வைக்கப்போகிறேன். என்னை பொறுத்தவரை 34-35 வயதிலும் கூட இத்தகைய வழியில் (ஆக்ரோஷமாக) கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதே எனது ஆசை. அதற்காகத்தான் மிக கடினமாக பயிற்சி மேற்கொள்கிறேன். ஆனால் ஒரு கட்டத்தில் துடிப்புடனும், ஆக்ரோஷமுடனும் விளையாடும் மனப்பாங்கு என்னை விட்டு விலகும் போது, களத்தில் என்ன செய்யப்போகிறேன் என்பது தெரியாது.

பிடியை விடமாட்டோம்

சர்வதேச கிரிக்கெட்டில் ரன் எடுப்பது எளிதல்ல. இந்த ஆடுகளத்தில் தொடக்கத்தில் கொஞ்சம் வேகம் இருந்தது. அதனால் எதிரணியின் வேகப்பந்து வீச்சு தாக்குதலுக்கு ஏற்ப ஆட்ட அணுகுமுறையை மாற்றிக் கொண்டோம். ஆனால் 30-வது ஓவருக்கு பிறகு ஆடுகளத்தன்மை திடீரென மாறியது. அதன் பிறகு மெதுவாக (ஸ்லோ) காணப்பட்டது. அதனால் மறுபடியும் ஆட்ட பாணியை மாற்ற வேண்டி இருந்தது. இதே போல் விக்கெட் சரியும் போதும், அதற்கு ஏற்ப செயல்பட வேண்டி இருந்தது. ஷிகர் தவானுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து பேட்டிங் செய்த போது, ஒன்று, இரண்டு ரன்கள் வீதம் எடுப்பதில் கவனம் செலுத்தினேன். அவர் ஆட்டம் இழந்ததும் எனது பேட்டிங் வேகத்தை அதிகரித்துக் கொண்டேன்.

கடினமான இந்த சுற்றுப்பயணத்தில் கடைசி டெஸ்ட் மற்றும் முதல் மூன்று ஒரு நாள் போட்டி என்று தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருக்கிறோம். இந்த நிலையை எட்டுவதற்கு நிறைய உழைத்துள்ளோம். அதனால் இந்த பிடியை விட்டு விடக்கூடாது. ஒரு அணியாக உண்மையிலேயே நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். அதே நேரத்தில் எங்களது பணி இன்னும் பாதி கூட முடிவடையவில்லை. தென்ஆப்பிரிக்காவை 6-0 என்ற கணக்கில் ‘ஒயிட்வாஷ்’ செய்வதற்கு வாய்ப்புள்ளதா என்று கேட்கிறீர்கள். அது பற்றி இப்போது சிந்திக்க தேவையில்லை. இந்த தொடரில் இன்னும் 3 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன.

3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருப்பதால் இனி நாங்கள் தொடரை இழக்க வாய்ப்பில்லை. இதுவே மிகப்பெரிய விஷயம் தான். ஏற்கனவே நான் சொன்ன மாதிரி, 4-வது ஆட்டத்தில் இன்னும் தீவிரமாகவும், உத்வேகத்துடனும் விளையாட வேண்டியது முக்கியமாகும்.

சாஹல், யாதவுக்கு பாராட்டு

மணிக்கட்டை அதிகமாக பயன்படுத்தி சுழற்பந்து வீசக்கூடிய யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் இந்த போட்டியிலும் அசத்தி விட்டனர். அவர்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பு குறிப்பாக வெளிநாட்டு மண்ணில் டெஸ்டில் ஆடுவதற்கு வாய்ப்பு உள்ளதா என்று கேட்கிறீர்கள். இப்போது அது பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இங்குள்ள சூழலில் அவர்கள் பந்து வீசும் விதமும், விக்கெட் வீழ்த்தும் திறனும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்குரிய வாய்ப்பை பிரகாசப்படுத்தி வருவது போல் தான் தோன்றுகிறது.

இரண்டு பேரும் தங்களது சுழற்பந்து வீச்சு மூலம் எதிரணியை முற்றிலும் முடக்குவதை பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது. இந்த ஆட்டத்திலும் அவர்கள் இருவரும் சேர்ந்து 8 விக்கெட்டுகள் சாய்த்ததை நம்பவே முடியவில்லை. இதை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. வெற்றிக்கான எல்லா பெருமையும் குல்தீப், சாஹலையே சாரும். இருவரும் தங்களது பந்து வீச்சை மேம்படுத்திக்கொள்ள தொடர்ந்து சிரத்தையுடன் உழைக்கிறார்கள். ‘இறங்கி வந்து, ரிஸ்க் எடுத்து ஷாட் அடி’ என்று எதிரணி பேட்ஸ்மேனுக்கு சவால் விடுப்பது போல் ரொம்ப தைரியமாக பந்தை மேல்வாக்கில் தூக்கி போடுகிறார்கள். பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளத்திலும் கூட துணிச்சலாக பவுலிங் செய்கிறார்கள். ஒவ்வொரு ஓவரிலும் விதவிதமாக பவுலிங் செய்து பேட்ஸ்மேன்களுக்கு சவால் கொடுக்கிறார்கள். இது போன்ற பந்து வீச்சை இதற்கு முன்பு நான் பார்த்ததில்லை. கடந்த இரு ஆட்டங்களிலும் பெரும்பாலான விக்கெட்டுகளை இவர்கள் தான் கபளகரம் செய்தனர். இரு ஆட்டத்திலும் இரண்டு அணிக்கும் இடையே வித்தியாசம் குல்தீப்-சாஹல் கூட்டணியின் பந்து வீச்சு தான்.

உலக கோப்பை கிரிக்கெட்டில்...

இது போன்ற சூழலில் தான் 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் (இங்கிலாந்தில் நடக்கிறது) விளையாட இருக்கிறோம். அதனால் குல்தீப், சாஹலின் பந்து வீச்சு எங்களுக்கு துருப்பு சீட்டாக இருக்கும் என்று கருதுகிறேன்.

இவ்வாறு விராட் கோலி கூறினார்.

இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக தென்ஆப்பிரிக்க வீரர்கள் இந்த ஆட்டத்தில் இளஞ்சிவப்பு (பிங்க்) நிற உடை அணிந்து விளையாட உள்ளனர்.

Next Story