தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணி 289 ரன்கள் சேர்ப்பு


தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணி 289 ரன்கள் சேர்ப்பு
x
தினத்தந்தி 10 Feb 2018 11:45 PM GMT (Updated: 11 Feb 2018 12:14 AM GMT)

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 289 ரன்கள் சேர்த்தது. ஷிகர் தவான் சதம் விளாசினார்.

ஜோகன்னஸ்பர்க்,

இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வான்டரர்ஸ் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இந்திய அணியில் தசைப்பிடிப்பால் அவதிப்படும் கேதர் ஜாதவுக்கு பதிலாக ஸ்ரேயாஸ் அய்யர் சேர்க்கப்பட்டார். தென்ஆப்பிரிக்க அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டன. காயத்தால் முதல் 3 ஆட்டங்களில் ஆடாத டிவில்லியர்ஸ் திரும்பினார். கடந்த ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்ட மோர்னே மோர்கலும் ஆடும் லெவனில் இடம் பிடித்தார். இம்ரான் தாஹிர், ஜோன்டோ நீக்கப்பட்டனர். மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக இந்த ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க வீரர்கள் பிரத்யேகமாக இளஞ்சிவப்பு நிற உடை (பிங்க்) அணிந்தனர்.

‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி தயக்கமின்றி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதன்படி ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். இந்த ஆட்டத்திலும் தடுமாறிய ரோகித் சர்மா (5), வேகப்பந்து வீச்சாளர் ரபடாவின் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் ஆனார். இந்த சுற்றுப்பயணத்தில் ரபடாவின் பந்து வீச்சுக்கு ரோகித் சர்மா 6-வது முறையாக இரையாகி இருக்கிறார்.

இதன் பின்னர் தவானுடன், கேப்டன் விராட் கோலி கைகோர்த்தார். இருவரும் ஸ்கோரை சீரான வேகத்தில் உயர்த்தினர். ஆடுகளம் பந்து வீச்சுக்கு பெரிய அளவில் ஒத்துழைக்கவில்லை. பேட்டிங்குக்கு உகந்த வகையிலேயே காணப்பட்டது. அதனால் இருவரும் சிரமமின்றி ரன்களை திரட்டினர். 31 ரன்னில் இருந்த போது தவான் அதிர்ஷ்டவசமாக ரன்-அவுட் கண்டத்தில் இருந்து தப்பி பிழைத்தார். நிகிடியின் ஓவரில் கோலியும், பெலக்வாயோவின் பந்து வீச்சில் தவானும் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டு அசத்தினர்.

அணியின் ஸ்கோர் 178 ரன்களாக (31.1 ஓவர்) உயர்ந்த போது இந்த ஜோடி பிரிந்தது. தனது 46-வது அரைசதத்தை கடந்த விராட் கோலி (75 ரன், 83 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) கிறிஸ் மோரிசின் பந்து வீச்சில் மில்லரிடம் கேட்ச் ஆனார். அடுத்து ரஹானே களம் புகுந்தார்.

மறுமுனையில் பட்டையை கிளப்பிய ஷிகர் தவான் 90 ரன்களை தாண்டிய பிறகு சிக்சர் மற்றும் பவுண்டரியுடன் தனது 13-வது சதத்தை பூர்த்தி செய்தார். தென்ஆப்பிரிக்க மண்ணில் அவரது முதல் செஞ்சுரியாகும். இது அவரது 100-வது ஒரு நாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இந்தியா 34.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்திருந்த போது, மழைமேகம் திரண்டது. இடி மின்னலுடன், பலத்த காற்று வீசியது. மோசமான வானிலை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. லேசான மழையும் பெய்தது. இதனால் 53 நிமிடங்கள் பாதிப்பு ஏற்பட்டாலும் ஓவர் குறைக்கப்படவில்லை.

அதே சமயம் இந்த பாதிப்பு, இந்தியாவின் உத்வேகத்தை வெகுவாக தளர்த்தியது. ஒரு கட்டத்தில் 300 ரன்களை எளிதில் கடக்கும் போல் தோன்றிய இந்தியாவின் ரன்வேகம் கடைசி பகுதியில் குறைந்து போனது. தொடர்ந்து ஆடிய தவான் 109 ரன்களில் (105 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்) மோர்கலின் பந்து வீச்சை வலுவாக அடித்த போது, அது ‘மிட்ஆப்’ திசையில் நின்ற டிவில்லியர்சின் கையில் கேட்ச்சாக தஞ்சமடைந்தது.

அதைத் தொடர்ந்து ரஹானே (8 ரன்), ஸ்ரேயாஸ் அய்யர் (18 ரன்), ஹர்திக் பாண்ட்யா (9 ரன்), புவனேஷ்வர்குமார் (5 ரன்) உள்ளிட்டோர் குறிப்பிட்ட இடைவெளியில் வெளியேற்றப்பட்டனர். இதற்கு மத்தியில் விக்கெட் கீப்பர் டோனி மட்டும், நிலைத்து நின்று ஆடினார். அவர் கடைசி ஓவரில் 2 பவுண்டரி விரட்டி ஆறுதல் அளித்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் குவித்தது. டோனி 42 ரன்களுடன் (43 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தார்.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் நிகிடி, ரபடா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர் 290 ரன்கள் இலக்கை நோக்கி தென்ஆப்பிரிக்க அணி ஆடியது. கேப்டன் மார்க்ராம் 22 ரன்களில், பும்ராவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்து பார்த்தும் பலன் இல்லை. அத்துடன் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது தென்ஆப்பிரிக்க அணி 7.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 43 ரன்கள் எடுத்திருந்தது.

* இந்திய தொடக்க ஆட்டக்காரர் 32 வயதான ஷிகர் தவானுக்கு இது 100-வது ஒரு நாள் போட்டியாகும். 100-வது ஆட்டத்தில் சதம் அடித்த 9-வது வீரர், இந்திய அளவில் முதல் வீரர் என்ற சிறப்பை தவான் பெற்றார். இதற்கு முன்பு கார்டன் கிரீனிட்ஜ் (வெஸ்ட் இண்டீஸ்), கிறிஸ் கெய்ன்ஸ் (நியூசிலாந்து), முகமது யூசுப் (பாகிஸ்தான்), சங்கக்கரா (இலங்கை), கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்), டிரஸ்கோதிக் (இங்கிலாந்து), சர்வான் (வெஸ்ட் இண்டீஸ்), டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா) ஆகியோர் இத்தகைய மைல்கல் போட்டியில் சதம் அடித்தவர்கள் ஆவர்.

* ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய அளவில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் 5-வது இடத்தில் இருந்த முகமது அசாருதீனை (9,378 ரன்), விராட் கோலி நேற்று முந்தினார். கோலி இதுவரை 206 ஆட்டங்களில் 9,423 ரன்கள் எடுத்துள்ளார். இந்த வகையில் முதல் 4 இடங்களில் முறையே சச்சின் தெண்டுல்கர் (18,426 ரன்), கங்குலி (11,221 ரன்), டிராவிட் (10,768 ரன்), டோனி (9,780 ரன்) ஆகியோர் உள்ளனர்.

Next Story