உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றது ஆப்கானிஸ்தான்


உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றது ஆப்கானிஸ்தான்
x
தினத்தந்தி 23 March 2018 11:30 PM GMT (Updated: 23 March 2018 9:44 PM GMT)

தகுதி சுற்றில் அயர்லாந்தை விரட்டியடித்த ஆப்கானிஸ்தான், 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு கடைசி அணியாக தகுதி பெற்றது.

ஹராரே,

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் சிக்ஸ் பிரிவில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் அயர்லாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பால் ஸ்டிர்லிங் 55 ரன்களும், கெவின் ஓ பிரையன் 41 ரன்களும் எடுத்தனர். ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன் மூலம் அவரது ஒட்டுமொத்த விக்கெட் எண்ணிக்கை 99 ஆக உயர்ந்தது. இன்னும் ஒரு விக்கெட் எடுத்து விட்டால், ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட் கைப்பற்றிய சாதனையாளராக ரஷித்கான் உருவெடுப்பார்.

அடுத்து களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 49.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முகமது ஷாசாத் 54 ரன்களும், குல்படின் நயிப் 45 ரன்களும், கேப்டன் அஸ்கார் ஸ்டானிக்ஜாய் 39 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர்.

இந்த வெற்றியின் மூலம் சூப்பர் சிக்ஸ் பிரிவில் 6 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்த ஆப்கானிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியதுடன், 2019-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கும் தகுதி பெற்றது. ஏற்கனவே வெஸ்ட் இண்டீசும் (8 புள்ளி) உலக கோப்பை வாய்ப்பை உறுதி செய்து விட்டது. ஜிம்பாப்வே (5 புள்ளி), ஸ்காட்லாந்து (5 புள்ளி), அயர்லாந்து (4 புள்ளி), ஐக்கிய அரபு அமீரகம் (2 புள்ளி) ஆகிய அணிகள் உலக கோப்பையில் விளையாடும் வாய்ப்பை இழந்தன.

லீக் சுற்றில் 4 ஆட்டங்களில் ஒன்றில் (பி பிரிவு) மட்டுமே வெற்றி கண்ட ஆப்கானிஸ்தான் அணி வெளியேறும் நிலையிலேயே இருந்தது. ஆனால் கடைசி லீக்கில் நேபாளம் அணி ஹாங்காங்கை வீழ்த்தியதன் மூலம் அதிர்ஷ்ட கதவு திறந்தது. மூன்று அணிகள் ஒரே புள்ளியுடன் இருந்த போது ரன்ரேட்டில் மயிரிழையில் ஆப்கானிஸ்தான் அணி முன்னிலை வகித்ததால் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்குள் நுழைந்தது. ஆனால் லீக் போட்டியில் இருந்து புள்ளிகள் எதுவும் எடுத்து வராததால் சூப்பர் சிக்ஸ் சுற்றில் மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப்போட்டி வாய்ப்பை பற்றி நினைத்து பார்க்க முடியும் என்ற நெருக்கடிக்கு மத்தியில் வெஸ்ட் இண்டீஸ், ஐக்கிய அரபு அமீரகம், அயர்லாந்து ஆகிய அணிகளை துவம்சம் செய்து அசத்தி இருக்கிறது. தொடர்ந்து 2 முறையாக உலக கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி ஆடுகிறது.

தகுதி சுற்றின் இறுதி ஆட்டம் நாளை நடக்கிறது. இதில் ஆப்கானிஸ்தான் அணி, வெஸ்ட் இண்டீசை எதிர்கொள்கிறது.

உலக கோப்பையில் பங்கேற்கும் 10 அணிகள்

10 அணிகள் இடையிலான 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2019) இங்கிலாந்தில் நடக்கிறது. இதில் தரவரிசையில் முன்னிலை வகித்த டாப்- 8 அணிகள் நேரடியாகவும், இரு அணிகள் தகுதி சுற்று போட்டியின் வாயிலாகவும் தகுதி பெற்றன. உலக கோப்பையில் கலந்து கொள்ளும் அணிகள் விவரம் வருமாறு:-

இந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான்.

Next Story