ஐ.பி.எல். போட்டியில் விளையாட சுமித், வார்னருக்கு அனுமதி இல்லை இந்திய கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கை


ஐ.பி.எல். போட்டியில் விளையாட சுமித், வார்னருக்கு அனுமதி இல்லை இந்திய கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 28 March 2018 9:15 PM GMT (Updated: 28 March 2018 8:38 PM GMT)

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தடை எதிரொலியாக ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோர் இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் கால்பதிக்க அனுமதி கிடையாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தடை எதிரொலியாக ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோர் இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் கால்பதிக்க அனுமதி கிடையாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஐ.பி.எல். போட்டிக்கும் தடை


ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்கள் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் விதித்த ஓராண்டு தடை, ஐ.பி.எல். போட்டியிலும் எதிரொலித்து இருக்கிறது. இது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துடன் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினர். அதைத் தொடர்ந்து ஸ்டீவன் சுமித், வார்னர் ஆகியோருக்கு இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட தடை விதிப்பது என்று முடிவு செய்திருப்பதாக ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். அவர்களுக்கு பதிலாக சம்பந்தப்பட்ட ஐ.பி.எல். அணி நிர்வாகம் மாற்று வீரர்களை சேர்த்துக் கொள்ளலாம் என்றும் கூறினார்.

ஸ்டீவன் சுமித், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ரூ.12 கோடிக்கு தக்கவைக்கப்பட்டார். இரண்டு ஆண்டு கால தடை காலம் முடிந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த சீசனுக்கு திரும்பியதும், தங்கள் அணிக்காக ஏற்கனவே ஆடிய ஸ்டீவன் சுமித்தை உடனடியாக இழுத்துக் கொண்டது. அவர் இல்லாதது அந்த அணிக்கு பெரும் பின்னடைவு என்பதில் சந்தேகமில்லை. அவருக்கு பதிலாக ராஜஸ்தான் அணியின் புதிய கேப்டனாக ரஹானே நியமிக்கப்பட்டு விட்டார். ஸ்டீவன் சுமித் தலைமையில் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணி கடந்த ஆண்டு இறுதிப்போட்டி வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது. அவர் ஐ.பி.எல். போட்டியில் 69 ஆட்டங்களில் விளையாடி ஒரு சதம், 5 அரை சதம் உள்பட 1,703 ரன்கள் சேர்த்துள்ளார்.

டேவிட் வார்னர் எப்படி?

அதிரடிக்கு பெயர் போன டேவிட் வார்னர் ரூ.12 கோடிக்கு ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியால் தக்க வைக்கப்பட்டார். 2015, 2016, 2017-ம் ஆண்டுகளில் அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டார். இதில் 2016-ம் ஆண்டு ஐதராபாத் அணி சாம்பியன் பட்டத்தை வென்றதில் வார்னரின் பங்களிப்பு மகத்தானது என்பதை மறுப்பதற்கு இல்லை. இந்திய கிரிக்கெட் வாரியம் தடை விதிப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாகவே டேவிட் வார்னர், ஐதராபாத் அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்து விட்டார். அவருக்கு பதிலாக ஷிகர் தவான் அல்லது மனிஷ்பாண்டே அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.

வார்னர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இதுவரை 114 ஆட்டங்களில் விளையாடி 3 சதம், 36 அரைசதம் உள்பட 4,014 ரன்கள் குவித்து இருக்கிறார்.

Next Story