கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘திரில்’ வெற்றி + "||" + I.P.L. Cricket : Chennai Super Kings' thrill won the match against Mumbai

ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘திரில்’ வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘திரில்’ வெற்றி
மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘திரில்’ வெற்றி பெற்றது.
மும்பை,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பைக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு பந்து மீதம் இருக்கையில் வெற்றி பெற்றது.

11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. மே 27-ந்தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ஐதராபாத் சன் ரைசர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-4 இடத்தை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.


மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய தொடக்க லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் ஜெயித்த சென்னை கேப்டன் டோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த மும்பை அணிக்கு, சென்னை வேகப்பந்து வீச்சாளர்கள் தீபக் சாஹரும், ஷேன் வாட்சனும் நன்கு நெருக்கடி கொடுத்தனர்.

மும்பை தொடக்க ஆட்டக்காரரான இவின் லீவிஸ் (0) தீபக் சாஹரின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்தும் பலன் இல்லை. ஐ.பி.எல். வரலாற்றில் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தை முதல்முறையாக பயன்படுத்தியவர் இவின் லீவிஸ் தான். ஐ.பி.எல்.-ல் இது தான் அவருக்கு முதல் ஆட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு தொடக்க வீரர் கேப்டன் ரோகித் சர்மா 15 ரன்களில் கேட்ச் ஆனார். இதன் பின்னர் இஷான் கிஷனும், சூர்யகுமார் யாதவும் கூட்டணி போட்டு அணியை சரிவில் இருந்து மீட்டனர். முதல் 10 ஓவர்களில் மும்பை அணி 2 விக்கெட்டுக்கு 65 ரன்களே எடுத்திருந்தது. பிற்பாதியில் மும்பை வீரர்கள் அதிரடி காட்டினர். சூர்யகுமார் யாதவ் 43 ரன்களும் (6 பவுண்டரி, ஒரு சிக்சர்), இஷான் கிஷன் 40 ரன்களும் (4 பவுண்டரி, ஒரு சிக்சர்) தங்களது பங்குக்கு எடுத்தனர்.

இறுதிகட்டத்தில் சகோதரர்கள் ஹர்திக் பாண்ட்யாவும், குணால் பாண்டயாவும் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். குறிப்பாக குணால் பாண்ட்யா, வேகப்பந்து வீச்சாளர் மார்க்வுட்டின் பவுலிங்கில் 2 சிக்சரை பறக்க விட்டு உள்ளூர் ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் மும்பை அணி 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் சேர்த்தது. குணால் பாண்ட்யா 41 ரன்களுடனும் (22 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), ஹர்திக் பாண்ட்யா 22 ரன்களுடனும் (20 பந்து, 2 பவுண்டரி) களத்தில் இருந்தனர். ஹர்திக் பாண்ட்யா இன்னிங்சில் கடைசி பந்தில் ரன் எடுக்க ஓடுகையில், சென்னை பவுலர் வெய்ன் பிராவோவுடன் மோதி கீழே விழுந்தார். காயத்துடன் அவர் வெளியேறினார். சென்னை அணி தரப்பில் வாட்சன் 2 விக்கெட்டுகளும், இம்ரான் தாஹிர், சாஹர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 166 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணிக்கு, மும்பை பவுலர்கள் குடைச்சல் கொடுத்தனர். ஷேன் வாட்சன் (16 ரன்), துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா (4 ரன்), அம்பத்தி ராயுடு (22 ரன்), கேப்டன் டோனி (5 ரன்), ஜடேஜா (12 ரன்) ஆகியோர் அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. சென்னை அணி 75 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை (12 ஓவர்) இழந்து தத்தளித்தது.

இந்த சூழலில் களம் கண்ட ஆல்-ரவுண்டர் வெய்ன் பிராவோ தனிநபராக ஆட்டத்தின் போக்கை மாற்றி பிரமிக்க வைத்தார். மும்பை பந்து வீச்சை வெளுத்து வாங்கிய அவர், சென்னை அணிக்கு நம்பிக்கைவூட்டினார். ஒரு பக்கம் விக்கெட் விழுந்தாலும் அவரது ‘சரவெடி’ மட்டும் தணியவில்லை. கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 27 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை வீசிய பும்ராவின் பந்து வீச்சில் பிராவோ 3 சிக்சர் உள்பட 20 ரன்கள் சேகரித்ததுடன் கடைசி பந்தில் கேட்ச் ஆனார். பிராவோ 68 ரன்களில் (30 பந்து, 3 பவுண்டரி, 7 சிக்சர்) பெவிலியன் திரும்பினார்.

கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 7 ரன் தேவைபட்டது. கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்ததால் பரபரப்பு தொற்றிக் கொண்டது. காயத்தால் பாதியில் வெளியேறி மீண்டும் களம் கண்ட கேதர் ஜாதவ், முஸ்தாபிஜூர் ரகுமான் வீசிய கடைசி ஓவரை எதிர்கொண்டார். இதில் முதல் 3 பந்துகளை விட்ட கேதர் ஜாதவ் 4-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார். அடுத்த பந்தில் பவுண்டரி அடித்து சென்னை அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.

சென்னை அணி 19.5 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 169 ரன்கள் குவித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது. கேதர் ஜாதவ் 24 ரன்களுடன் களத்தில் இருந்தார். 2 ஆண்டு தடை காலத்திற்கு பிறகு ஐ.பி.எல். போட்டிக்கு திரும்பிய சென்னை அணி இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கி அட்டகாசப்படுத்தி இருக்கிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...