ஐபிஎல்: டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு 201 ரன்களை இலக்காக வைத்தது கொல்கத்தா நைட்ரைடர்ஸ்


ஐபிஎல்: டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு 201 ரன்களை இலக்காக வைத்தது கொல்கத்தா நைட்ரைடர்ஸ்
x
தினத்தந்தி 16 April 2018 4:35 PM GMT (Updated: 16 April 2018 4:35 PM GMT)

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி வெற்றி பெற 201 ரன்களை இலக்காக வைத்தது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி. #IPL

கொல்கத்தா,

11 வது ஐபிஎல் போட்டியின் 13 வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி கொல்கத்தா 
ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, கொல்கத்தா 
அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லின் மற்று சுனில் நரேன் ஆகியோர் களமிறங்கினர். ஆட்டத்தின் 2.3வது ஓவரில் சுனில் நரேன் வெறும் 1 
ரன்களில் ஆட்டமிழக்க அடுத்ததாக உத்தப்பா களமிறங்கினர். இருவரும் இணைந்து டெல்லி அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். கொல்கத்தா அணியில் ஒரு புறம் ரன் வேகம் எகிற, மறுபுறம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

ஆட்டத்தின் 13.4 வது ஓவரில் கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் 19 ரன்களில் கிறிஸ் மோரிஸ் பந்து வீச்சில் ஆட்டமிழக்க, நிதிஷ் ராணாவுடன் அதிரடி ஆட்டக்காரர் ஆந்தரே ரசூல் கை கோர்த்தார். ரசூலின் அதிரடி ஆட்டம் டெல்லி டேர்டெவில்ஸ் அணியினரை கலங்கடிக்க செய்தது. வெறும் 12 பந்துகளை எதிர்கொண்ட ரசூல் 41 ரன்கள் (6 சிக்ஸர்கள்) சேர்த்த நிலையில் டிரண்ட் போல்ட் பந்து வீச்சில் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய நிதிஷ் ராணா தனது அரை சதத்தினை பூர்த்தி செய்து 59 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 200 ரன்களை குவித்தது. டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் தரப்பில் ராகுல் தெவாதியா 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் மோரிஸ் மற்றும் டிரண்ட் போல்ட் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.


இந்நிலையில் 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி டேர்டெவில்ஸ் அணி விளையாடி வருகிறது.


Next Story