பஞ்சாப்பிடம் பணிந்தது கொல்கத்தா கெய்ல், ராகுல் அதிரடி அரைசதம்


பஞ்சாப்பிடம் பணிந்தது கொல்கத்தா கெய்ல், ராகுல் அதிரடி அரைசதம்
x
தினத்தந்தி 21 April 2018 10:45 PM GMT (Updated: 21 April 2018 8:41 PM GMT)

கெய்ல், ராகுல் அதிரடி அரைசதத்தால் பஞ்சாப்பிடம் பணிந்தது கொல்கத்தா.

கொல்கத்தா,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் முன்னாள் சாம்பியன் கொல்கத்தா அணி, பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் கெய்ல், ராகுலின் அதிரடியில் ‘சரண்’ அடைந்தது.

ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் நேற்று மாலை கொல்கத்தா ஈடன்கார்டன் ஸ்டேடியத்தில் நடந்த 18-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும், கொல்கத்தா நைட் ரைடர்சும் மோதின. பஞ்சாப் அணியில் ஒரு மாற்றமாக மொகித் ஷர்மா நீக்கப்பட்டு அங்கித் ராஜ்பூத் சேர்க்கப்பட்டார். ‘டாஸ்’ ஜெயித்த பஞ்சாப் கேப்டன் அஸ்வின் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியில் சுனில் நரின் ஒரு ரன்னில் நடையை கட்டினார். இதன் பின்னர் கிறிஸ் லின்னும், ராபின் உத்தப்பாவும் கைகோர்த்து அணியை தூக்கி நிறுத்தினர். முஜீப் ரகுமானின் சுழலில் உத்தப்பா ‘ஹாட்ரிக்’ பவுண்டரி விரட்ட, பரிந்தர் ஸ்ரனின் ஓவரில் கிறிஸ் லின் இரண்டு சிக்சர்களை பறக்கவிட்டார். ஸ்கோர் 78 ரன்களை எட்டிய போது உத்தப்பா 34 ரன்களில் (23 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) அஸ்வினின் சுழலில் சிக்கினார். அடுத்து வந்த நிதிஷ் ராணா (3 ரன்) கவனக்குறைவால் ரன்-அவுட் ஆனார். 4-வது விக்கெட்டுக்கு கேப்டன் தினேஷ் கார்த்திக் இறங்கினார்.

கிறிஸ் லின்-கார்த்திக் ஜோடியின் அதிரடியால் ரன்ரேட் 9.50-க்கு மேலாக பயணித்தது. லின் விளாசிய ஒரு சிக்சர் 103 மீட்டர் தூரத்திற்கு ஓடியது. இவர்கள் ஆடிய விதத்தை பார்த்த போது அந்த அணி எளிதில் 200 ரன்களை கடக்கும் போலவே தெரிந்தது. ஆனால் இறுதி கட்டத்தில் அவர்களின் உத்வேகத்துக்கு பஞ்சாப் பவுலர்கள் கொஞ்சம் முட்டுக்கட்டை போட்டனர்.

கிறிஸ் லின் 74 ரன்களிலும் (41 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்), அடுத்து வந்த ரஸ்செல் 10 ரன்னிலும், கேப்டன் தினேஷ் கார்த்திக் 43 ரன்னிலும் (28 பந்து, 6 பவுண்டரி) பெவிலியன் திரும்பினர். 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. கடைசி 2 ஓவர்களில் கொல்கத்தா வெறும் 11 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பின்னர் கடின இலக்கை நோக்கி பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுலும், கிறிஸ் கெய்லும் களம் புகுந்தனர். அடுத்தடுத்து இரு பவுண்டரிகளுடன் அணியின் ரன் கணக்கை தொடங்கிய ராகுல், ஆக்ரோஷமாக மட்டையை சுழட்டினார். இன்னொரு பக்கம் கெய்ல் தனக்கே உரிய பாணியில் நொறுக்கினார். ரஸ்செலின் ஓவரில் 2 சிக்சர்களை சர்வசாதாரணமாக தெறிக்க விட்டார்.

‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவர்களில் பஞ்சாப் 73 ரன்களை திரட்டி அசத்தியது. 8.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 96 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் ஒன்றரை மணி நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து ‘டக்வொர்த்-லீவிஸ்’ விதிப்படி பஞ்சாப் அணி 13 ஓவர்களில் 125 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. மழை ஓய்ந்த பிறகு மறுபடியும் ‘ரன்மழை’ ஆரம்பித்தது.

மீண்டும் ஆட்டம் தொடங்கிய போது சந்தித்த முதல் பந்தையே சிக்சராக்கி கெய்ல் அரைசதத்தை கடந்தார். இதே போல் ராகுலும் சுனில் நரினின் பந்து வீச்சில் சிக்சர் அடித்து அரைசதத்தை எட்டினார். மேலும் இரண்டு பவுண்டரிகளை ஓட விட்ட ராகுல் (60 ரன், 27 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்) அதே ஓவரில் ஆட்டம் இழந்தார். இறுதியில் கெய்ல் பந்தை சிக்சருக்கு கிளப்பி இன்னிங்சை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.

பஞ்சாப் அணி 11.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 126 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கிறிஸ் கெய்ல் 62 ரன்களுடன் (38 பந்து, 5 பவுண்டரி, 6 சிக்சர்) களத்தில் இருந்தார். லோகேஷ் ராகுல் ஆட்டநாயகன் விருதை பெற்றார். 4-வது வெற்றியை பெற்ற பஞ்சாப் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. கொல்கத்தா அணிக்கு இது 3-வது தோல்வியாகும்.

Next Story