கிரிக்கெட்

சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 162 ரன்கள் சேர்ப்பு + "||" + Against Chennai Super Kings Delhi team to 162 runs

சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 162 ரன்கள் சேர்ப்பு

சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 162 ரன்கள் சேர்ப்பு
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 162 ரன்கள் சேர்த்தது.
புதுடெல்லி,

11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. இதில் டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நேற்றிரவு நடந்த 52-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சும், டெல்லி டேர்டெவில்சும் மோதின. சென்னை அணியில் டேவிட் வில்லி நீக்கப்பட்டு நிகிடி சேர்க்கப்பட்டார். டெல்லி அணியில் ஜாசன் ராய், ஜூனியர் டாலா ஆகியோருக்கு பதிலாக மேக்ஸ்வெல், அவேஷ்கான் இடம் பிடித்தனர்.


‘டாஸ்’ ஜெயித்த சென்னை கேப்டன் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங்கை தொடங்கிய டெல்லி அணிக்கு, சென்னை பவுலர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். தொடக்க வீரர் பிரித்வி ஷா 17 ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யரும், விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்டும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஹர்பஜன்சிங்கின் சுழலில் ரிஷாப் பான்ட் 2 சிக்சரும், ஒரு பவுண்டரியும் விரட்டினார். 10 ஓவர்களில் அந்த அணி ஒரு விக்கெட்டுக்கு 77 ரன்கள் எடுத்திருந்தது.

அபாயகரமான இந்த ஜோடிக்கு வேகப்பந்து வீச்சாளர் நிகிடி ஒரே ஓவரில் ‘செக்’ வைத்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 19 ரன்னிலும், ரிஷாப் பான்ட் 38 ரன்னிலும் (26 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேறினர். பின்னர் இறங்கிய மேக்ஸ்வெல் (5 ரன்), அபிஷேக் ஷர்மா (2 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. 16 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 110 ரன்களுடன் தடுமாறியதை பார்த்த போது, அந்த அணி 150 ரன்களை தொடுமா? என்ற கேள்வி எழுந்தது.

இந்த சூழலில் 6-வது விக்கெட்டுக்கு கைகோர்த்த தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கரும், ஹர்ஷல் பட்டேலும் அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். வெய்ன் பிராவோ வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரில் ஹர்ஷல் பட்டேல் 3 சிக்சரும், விஜய் சங்கர் ஒரு சிக்சரும் பறக்கவிட்டு உள்ளூர் ரசிகர்களை பரவசப்படுத்தினர். தனது முதல் 3 ஓவர்களில் 26 ரன்கள் வழங்கிய பிராவோ கடைசி ஓவரில் மட்டும் 26 ரன்களை அள்ளிகொடுத்து விட்டார்.

20 ஓவர் முடிவில் டெல்லி அணி 5 விக்கெட்டுக்கு 162 ரன்கள் சேர்த்தது. ஹர்ஷல் பட்டேல் 36 ரன்களுடனும் (16 பந்து, ஒரு பவுண்டரி, 4 சிக்சர்), விஜய் சங்கர் 36 ரன்களுடனும் (28 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தனர். சென்னை தரப்பில் நிகிடி 2 விக்கெட்டும், தீபக் சாஹர், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் 163 ரன்கள் இலக்கை நோக்கி சென்னை அணி ஆடியது. ஷேன் வாட்சனும், அம்பத்தி ராயுடுவும் முதல் விக்கெட்டுக்கு 46 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் தந்தனர். ஷேன் வாட்சன் 14 ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா முதல் பந்திலேயே கண்டம் தப்பினார். அமித் மிஸ்ராவின் சுழலில் அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் நழுவ விட்டார். மறுமுனையில் டெல்லியின் பந்து வீச்சை பின்னியெடுத்த அம்பத்தி ராயுடு அரைசதத்தை நிறைவு செய்தார்.

அணியின் ஸ்கோர் 70 ரன்களை எட்டிய போது அம்பத்தி ராயுடு (50 ரன், 29 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) எல்லைக்கோடு அருகே கேட்ச் ஆனார். இந்த சீசனில் அம்பத்தி ராயுடு இதுவரை ஒரு சதம், 3 அரைசதம் உள்பட 585 ரன்கள் குவித்திருப்பது கவனிக்கத்தக்கது. தொடர்ந்து சுரேஷ் ரெய்னா 15 ரன்னில் வீழ்ந்தார்.

14 ஓவர் முடிந்திருந்த போது சென்னை அணி 3 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது கேப்டன் டோனி (11 ரன்), சாம் பில்லிங்ஸ் (1 ரன்) ஆடிக்கொண்டிருந்தனர்.