கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தானிடம் தோல்வி கண்டு வெளியேறியது பெங்களூரு அணி + "||" + IPL Cricket: The Bengal team lost in the defeat to Rajasthan

ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தானிடம் தோல்வி கண்டு வெளியேறியது பெங்களூரு அணி

ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தானிடம் தோல்வி கண்டு வெளியேறியது பெங்களூரு அணி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தானிடம் தோல்வியடைந்து பெங்களூரு அணி வெளியேறியது.
ஜெய்ப்பூர்,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணி ராஜஸ்தானிடம் படுதோல்வி அடைந்து போட்டியை விட்டு வெளியேறியது. ராஜஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரேயாஸ் கோபால் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.


11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஜெய்ப்பூரில் நேற்று மாலை நடந்த 53-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் மோதின. ராஜஸ்தான் அணியில் ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தேசிய அணிக்காக ஆடுவதற்கு தாயகம் (இங்கிலாந்து) திரும்பி விட்டதால் அவர்களுக்கு பதிலாக ஹென்ரிச் கிளாசென், பென் லாக்லின் சேர்க்கப்பட்டனர். இதே போல் அனுரீத்சிங் கழற்றி விடப்பட்டு சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரேயாஸ் கோபால் இடம் பெற்றார்.

‘டாஸ்’ ஜெயித்த ராஜஸ்தான் கேப்டன் ரஹானே, ஆடுகளம் 2-வது பேட் செய்வதற்கு கடினமாக மாறக்கூடும் என்று கூறி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ராகுல் திரிபாதியும், ஜோப்ரா ஆர்ச்சரும் ராஜஸ்தானின் இன்னிங்சை தொடங்கினர். ஆர்ச்சர் ரன் கணக்கை ஆரம்பிப்பதற்கு முன்பே நடையை கட்டினார்.

அடுத்து கேப்டன் ரஹானே, திரிபாதியுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அவசரம் காட்டாமல் ஆடுகளத்தன்மையை உணர்ந்து அதற்கு ஏற்ப விளையாடி ரன்களை திரட்டினர். ஸ்கோர் 101 ரன்களை அடைந்த போது, ரஹானே 33 ரன்களில் (31 பந்து, 3 பவுண்டரி) உமேஷ் யாதவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். 3-வது விக்கெட்டுக்கு இறங்கிய சஞ்சு சாம்சனும் (0) சந்தித்த முதல் பந்திலேயே காலியானார். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் ஹென்ரிச் கிளாசன் (32 ரன், 21 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) கணிசமான பங்களிப்பை அளித்தார். மறுமுனையில் தொடக்க வீரர் திரிபாதி நிலைத்து நின்று மிரட்டினார். டிம் சவுதியின் கடைசி ஓவரில் கிருஷ்ணப்பா கவுதம் 2 சிக்சர் விளாசி அணி சவாலான ஸ்கோரை எட்டுவதற்கு வித்திட்டார். கிருஷ்ணப்பா கவுதம் (14 ரன்) கடைசி பந்தில் ரன்-அவுட் ஆனார். 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்தது. திரிபாதி 80 ரன்களுடன் (58 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தார்.

பின்னர் 16 ஓவர்களுக்குள் இலக்கை எட்டினால் மும்பையின் ரன்ரேட்டை முந்திவிடலாம் என்ற திட்டமிடலுடன் பெங்களூரு அணி பேட் செய்தது. ராஜஸ்தான் அணி முதல் ஓவரிலேயே சுழற்பந்து வீச்சு தாக்குதலை தொடுத்தது. தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் விராட் கோலி (4 ரன், 9 பந்து), கிருஷ்ணப்பா கவுதமின் சுழலில் கிளன் போல்டு ஆனார். இதைத் தொடர்ந்து 2-வது விக்கெட்டுக்கு பார்த்தீவ் பட்டேலும், டிவில்லியர்சும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஜோப்ரா ஆர்ச்சரின் ஓவரில் டிவில்லியர்ஸ் 3 பவுண்டரிகளை ஓட விட்டார். 8.2 ஓவர்களில் அந்த அணி ஒரு விக்கெட்டுக்கு 75 ரன்கள் எடுத்திருந்ததை பார்த்த போது எளிதில் வெற்றி பெற்று விடும் என்றே தோன்றியது.

இந்த பரபரப்பான கட்டத்தில் சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரேயாஸ் கோபால் ஆட்டத்தின் போக்கை தலைகீழாக மாற்றிக்காட்டினார். 20 ரன்களில் இருந்த போது ‘கேட்ச்’ கண்டத்தில் இருந்து தப்பிப்பிழைத்த பார்த்தீவ் பட்டேல் 33 ரன்களில் (21 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) கோபாலின் சுழலில், விக்கெட் கீப்பர் கிளாசென் மூலம் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். அடுத்து வந்த மொயீன் அலியும் (1 ரன்) அதே ஓவரில் சிக்கினார். கோபாலின் அடுத்த ஓவரில் மன்தீப்சிங் (3 ரன்) விரட்டப்பட்டார்.

இன்னொரு பக்கம் போராடிய டிவில்லியர்ஸ் இந்த சீசனில் தனது 6-வது அரைசதத்தை கடந்தார். அவரைத்தான் பெங்களூரு அணி மலை போல் நம்பி இருந்தது. கடைசியில் அவருக்கும் கோபால் ‘செக்’ வைத்தார். அவரது பந்தில் டிவில்லியர்ஸ் (53 ரன், 35 பந்து, 7 பவுண்டரி) ஸ்டம்பிங் ஆனார். அத்துடன் பெங்களூரு அணியின் நம்பிக்கையும் சிதறிப்போனது. அதன் பிறகு கொத்து கொத்தாக விக்கெட்டுகளை கபளகரம் செய்து ஆட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்த ராஜஸ்தான் பவுலர்கள், பெங்களூரு அணியை நிமிர விடாமல் முடக்கினர்.

19.2 ஓவர்களில் பெங்களூரு அணி 134 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் ராஜஸ்தான் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் 7-வது வெற்றியை ருசித்து, பிளே-ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது. இன்றைய கடைசி கட்ட லீக் சுற்றுக்கே பிறகே ராஜஸ்தான் அணியின் தலைவிதி தெரியும். ராஜஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் 24 வயதான ஸ்ரேயாஸ் கோபால் 4 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்து அட்டகாசப்படுத்தினார். அவரது பந்து வீச்சில் ஒரு பவுண்டரி கூட அடிக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. அவரே ஆட்டநாயகன் விருதை பெற்றார். 8-வது தோல்வியை சந்தித்த கோலி தலைமையிலான பெங்களூரு அணி பரிதாபமாக போட்டியை விட்டு வெளியேறியது.

ராஜஸ்தான் அணியின் வாய்ப்பு எப்படி?

பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை பந்தாடியதன் மூலம் முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல் அணி அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பில் தொடருகிறது. ஆனால் அந்த அணிக்கு சில ஆட்டங்களின் முடிவு சாதகமாக அமைய வேண்டும்.

இன்றைய கடைசி லீக் ஆட்டங்களில் மும்பை அணி டெல்லியிடமும், பஞ்சாப் அணி சென்னையிடமும் ‘சரண்’ அடைய வேண்டும். அவ்வாறு நிகழ்ந்தால் மும்பை, பஞ்சாப் அணிகள் தலா 12 புள்ளிகளுடன் இருக்கும். ராஜஸ்தான் அணி 14 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்குள் நுழைந்து விடும். மாறாக மும்பை அணி வெற்றி பெற்றால் ராஜஸ்தான் அணி வெளியேற்றப்படும். ஏனெனில் ராஜஸ்தான் அணியின் ரன்ரேட் மோசமான (-0.250) நிலையில் இருக்கிறது.

6-வது முறையாக லீக் சுற்றுடன் ‘அவுட்’

ஐ.பி.எல். வரலாற்றில் பெங்களூரு அணி லீக் சுற்றுடன் வெளியேறுவது 6-வது முறையாகும். ஏற்கனவே 2008, 2012, 2013, 2014, 2017 ஆகிய ஆண்டுகளிலும் முதல் சுற்றை தாண்டவில்லை. இதுவரை ஐ.பி.எல். கோப்பையை உச்சிமுகராத பெங்களூரு அணிக்கு இந்த முறையும் ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. அதே சமயம் மூன்று முறை அந்த அணி இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சொந்த ஊர் அணிக்கு ‘வேட்டு’ வைத்த சுழற்பந்து வீச்சாளர்கள்

இந்த ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை புரட்டியெடுத்தவர்கள் ராஜஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்கள் கிருஷ்ணப்பா கவுதம், ஸ்ரேயாஸ் கோபால். இவர்கள் இருவரும் பெங்களூரில் பிறந்தவர்கள் ஆவர். எதிரணிக்காக விளையாடி ‘சொந்த ஊர்’ அணிக்கு வேட்டு வைத்து விட்டார்களே? என்று பெங்களூரு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் புலம்பி இருக்கிறார்கள்.

கேப்டன்கள் சொல்வது என்ன?

தோல்விக்கு பிறகு பெங்களூரு கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘இந்த ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் ஒரு விக்கெட்டுக்கு 75 ரன்களுடன் நல்ல நிலையில் இருந்தோம். அதன் பிறகு இந்த மாதிரி விக்கெட்டுகளை மளமளவென இழந்தது எங்களுக்கு புதுமையாகவே தெரிந்தது. டிவில்லியர்சின் பேட்டிங் நேர்த்தியாக இருந்தது. அவரைத் தவிர மற்றவர்கள் ஷாட்டுகளை தேர்வு செய்து அடித்த விதம் மோசமாக இருந்தது. இந்த தவறை 5-6 வீரர்கள் தொடர்ந்து செய்தனர். டிவில்லியர்ஸ் நன்றாக ஆடினாலும், அவருக்கு மற்ற வீரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. பேட்டிங்கில் மிடில்வரிசையை வலுப்படுத்த விரும்பினோம். ஆனால் அது நடக்கவில்லை. இந்த தோல்வி மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. களத்தில் நீடிக்கும் மற்ற அணிகள் சிறப்பாக செயல்பட வாழ்த்துகள்’என்றார்.

ராஜஸ்தான் கேப்டன் ரஹானே கூறுகையில், ‘இந்த ஆடுகளத்தில் 160 ரன்களுக்கு மேல் எடுப்பது மிகவும் கடினமானது என்பதை அறிவோம். பெங்களூரு அணி சிறந்த பேட்டிங் வரிசையை பெற்றிருந்தாலும் எங்களது பவுலர்கள் கடும் நெருக்கடி கொடுத்து அபாரமாக பந்து வீசினர். அவர்களுக்கு எனது பாராட்டுகள்’ என்றார்.