கிரிக்கெட்

அறிமுகம் மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து குக் சாதனை + "||" + Introduction and last Test match Beat the hundred Cook Adventure

அறிமுகம் மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து குக் சாதனை

அறிமுகம் மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து குக் சாதனை
அறிமுகம் மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து குக் சாதனை படைத்தார்.
லண்டன்,

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அலஸ்டயர் குக் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மேலும் ஒரு சாதனைக்கு சொந்தக்காரர் ஆகி இருக்கிறார். இந்தியாவுக்கு எதிராக லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வரும் கடைசி டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் அலஸ்டயர் குக் 2-வது இன்னிங்சில் சதம் (147 ரன்கள்) அடித்தார். இதன் மூலம் அறிமுகம் மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த 5-வது வீரர் மற்றும் முதல் இங்கிலாந்து வீரர் என்ற அரிய சாதனையை குக் படைத்து இருக்கிறார்.


2006-ம் ஆண்டு நாக்பூரில் நடந்த இந்தியாவுக்கு எதிரான தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் 2-வது இன்னிங்சில் குக் (ஆட்டம் இழக்காமல் 104 ரன்கள்) சதம் அடித்து இருந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களது கடைசி டெஸ்டில் சதம் அடித்த 40-வது வீரர், இங்கிலாந்து அளவில் 13-வது வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ள குக் இடைவிடாது தொடர்ச்சியாக அதிக டெஸ்டுகளில் (150 டெஸ்ட்) பங்கேற்றவர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆவார்.

இதற்கு முன்பு ஆஸ்திரேலிய வீரர்கள் ரெஜினால்ட் டப் (1902-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக 104 ரன்கள், 1905-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக 146 ரன்கள்), வில்லியம் போன்போர்ட் (1924-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக 110 ரன்கள், 1934-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக 266 ரன்கள்), கிரேக் சேப்பல் (1970-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக 108 ரன்கள், 1984-ம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிராக 182 ரன்கள்), இந்திய வீரர் முகமது அசாருதீன் (1984-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக 110 ரன்கள், 2000-ம் ஆண்டில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 102 ரன்கள்) ஆகியோர் தங்களது அறிமுகம் மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து சாதனை படைத்து இருந்தனர்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர் என்ற பெருமைக்குரிய இடக்கை பேட்ஸ்மேனான அலஸ்டயர் குக் சர்வதேச அளவில் 6-வது வீரராக இருந்தார். இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 71 ரன்கள் எடுத்த குக் 2-வது இன்னிங்சில் 147 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.

இதன் மூலம் குக் (12,472 ரன்கள், 161 டெஸ்டில்) டெஸ்ட் போட்டியில் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் 5-வது இடத்தில் இருந்த இலங்கை வீரர் சங்கக்கராவை (12,400 ரன்கள், 134 டெஸ்டில்) பின்னுக்கு தள்ளி 5-வது இடத்தை அபகரித்தார். டெஸ்ட் போட்டியில் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் இந்தியாவின் தெண்டுல்கர் (15,921 ரன்கள், 200 டெஸ்டில்) ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (13,378 ரன்கள், 168 டெஸ்டில்), தென்ஆப்பிரிக்காவின் காலிஸ் (13,289 ரன்கள், 166 டெஸ்டில்), இந்தியாவின் டிராவிட் (13,288 ரன்கள், 164 டெஸ்டில்) ஆகியோர் முறையே முதல் 4 இடங்களில் உள்ளனர்.