‘என்னைப் பற்றிய ரகசியம்!' -ரோகித் சர்மா


‘என்னைப் பற்றிய ரகசியம்! -ரோகித் சர்மா
x
தினத்தந்தி 6 Oct 2018 12:07 PM GMT (Updated: 6 Oct 2018 12:07 PM GMT)

ஆசியக் கோப்பை வெற்றி கேப்டன் ரோகித் சர்மாவுடன் ஒரு சிறு சுறுசுறு சந்திப்பு...

ஓர் அணியின் கேப்டனாக இருப்பதில் சவாலான விஷயம் என்ன?

உதாரணத்துக்கு ஐ.பி.எல்.லை எடுத்துக்கொண்டால், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களை ஒருங்கிணைத்துச் செல்வது.

நீங்கள் தவிர்க்க நினைக்கும் ஒரு பழக்கம்?

ஞாபகமறதி. பாஸ்போர்ட், பர்ஸ், ஐபேடு என்று எதை எதையோ நான் மறந்துவிடுவேன்.

உங்களிடம் இருக்கும் மூடநம்பிக்கை?

நான் ஒரு போட்டியில் நன்றாக ஆடினால் அதே ஆடையைத்தான் தொடர் முழுவதும் அணிந்து ஆட விரும்புவேன்- துவைத்துத்தான்!

நீங்கள் வெறுக்கும் வார்த்தை?

திறமைசாலி. என்னைப் பற்றி நிறையப் பேர் இந்த வார்த்தையைச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் நான் வெறுக்கும் வார்த்தை இதுதான்.

உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காதது?

தூக்கம். காலையில் அலாரம் ஒலிக்கத் தொடங்கியதும் எழ ஆசைப்பட்டுக் கொண்டே... இருக்கிறேன்.

உங்களைப் பற்றி பலருக்கும் தெரியாத ஒரு ரகசியம்?

நான் ஒரு பந்துவீச்சாளராகத்தான் எனது கிரிக்கெட்டை தொடங்கினேன். யதேச்சையாகத்தான் பேட்ஸ்மேன் ஆனேன்.

உங்கள் சொந்த ஊரான மும்பையில் உங்களுக்குப் பிடித்த விஷயம்?

இங்கு கிடைக்கும் சாலையோர உணவுகள். அவற்றுக்கு நான் அடிமை. இன்றும் திடீரென்று தெருவில் நண்பர்களுடன் இறங்கி பானி பூரி, சேவ் பூரி சாப்பிட ஆரம்பித்துவிடுவேன்.

உங்கள் வாழ்க்கையின் திருப்புமுனை எது?

நான் படித்த பள்ளியில் நடந்த ஒரு கோடைகால விளையாட்டு முகாம். அதற்கான கட்டணத்தை எனது பெற்றோரால் செலுத்தமுடியாத நிலையில், என் மாமாதான் பணம் கொடுத்தார். அந்த முகாமில்தான் முதல்முறையாக எனது கிரிக்கெட் திறமை கவனிக்கப்பட்டது.

கிரிக்கெட் வரலாற்றிலேயே சிறந்தவராக நீங்கள் கருதுவது?

சச்சின் தெண்டுல்கர்.

இந்திய கேப்டன்களிலேயே சிறந்தவர்?

டோனி.

இந்தப் பெயர்களைச் சொல்லும்போது உங்கள் ஞாபகத்துக்கு வருவது...

விராட் கோலி: ஆக்ரோஷம்.

சவுரவ் கங்குலி: துணிச்சல்.

யுவராஜ் சிங்: பார்ட்டி கொண்டாட்டம்.

Next Story