விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் மும்பை அணி


விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் மும்பை அணி
x
தினத்தந்தி 17 Oct 2018 10:15 PM GMT (Updated: 17 Oct 2018 7:16 PM GMT)

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டிக்கு மும்பை அணி தகுதிபெற்றது.

பெங்களூரு,

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் மும்பை - ஐதராபாத் அணிகள் இடையிலான அரைஇறுதி ஆட்டம் பெங்களூருவில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் சேர்த்தது. ரோகித் ராயுடு 121 ரன்கள் (132 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்) குவித்தார். அடுத்து களம் இறங்கிய மும்பை அணியில் பிரித்வி ஷா 61 ரன்கள் (44 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி அதிரடியான தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தார். மற்றொரு தொடக்க வீரர் ரோகித் சர்மா 17 ரன்னில் போல்டு ஆனார்.

மும்பை அணி 25 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. அப்போது கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (55 ரன்), ரஹானே (17 ரன்) களத்தில் இருந்தனர். தொடர்ந்து மழை பெய்ததால் முடிவை அறிய உள்ளூர் போட்டிக்குரிய வி.ஜே.டி. முறை கடைபிடிக்கப்பட்டது. இதன்படி 25 ஓவர்களில் மும்பைக்கு 96 ரன்களே போதுமானதாக இருந்தது. இதனால் 60 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்று 6 ஆண்டுக்கு பிறகு இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதே மைதானத்தில் இன்று நடக்கும் 2-வது அரைஇறுதியில் டெல்லி-ஜார்கண்ட் அணிகள் சந்திக்கின்றன.

Next Story