வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்திய அணியின் ஆதிக்கம் தொடருமா?


வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்திய அணியின் ஆதிக்கம் தொடருமா?
x
தினத்தந்தி 23 Oct 2018 11:30 PM GMT (Updated: 23 Oct 2018 8:53 PM GMT)

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ஆதிக்கம் செலுத்தும் வேட்கையுடன் இந்திய அணி இன்று 2-வது ஒரு நாள் போட்டியில் களம் இறங்குகிறது.

விசாகப்பட்டினம்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. கவுகாத்தியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி துறைமுக நகரான விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மைதானத்தில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

தொடக்க ஆட்டத்தில் இந்திய அணியின் பந்து வீச்சு சரியில்லை. வெஸ்ட் இண்டீஸ் 322 ரன்கள் குவித்த போதிலும், கேப்டன் விராட் கோலி (140 ரன்), துணை கேப்டன் ரோகித் சர்மா (152 ரன்) ஆகியோர் சதம் அடித்ததால் மலைப்பான இலக்கை சுலபமாக எட்ட முடிந்தது. அதே உத்வேகத்துடன் இன்றைய ஆட்டத்திலும் இந்திய வீரர்கள் கோலோச்சுவதை எதிர்நோக்கி உள்ளனர்.

இந்த தொடரை பொறுத்தவரை மிடில் வரிசையை வலுப்படுத்துவது தான் இந்திய அணியின் பிரதான நோக்கமாகும். முதல் ஆட்டத்தில் மிடில் வரிசை பேட்ஸ்மேன்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. வாய்ப்பு கிடைக்கும் ஆட்டங்களில் அவர்கள் நிலைத்து நின்று ஆடுவது அவசியமாகும்.

இது குறித்து அம்பத்தி ராயுடு நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘மிடில் வரிசையில் ஆடுவதால் எனக்கு எந்த நெருக்கடியும் இல்லை. இது எனக்கு ஒன்றும் புதிது அல்ல. நீண்ட காலமாக நான் மிடில் வரிசையில் விளையாடி இருக்கிறேன். எது பற்றியும் நினைக்காமல் இயல்பாக ஆடும்படி அணி நிர்வாகம் அறிவுறுத்தியிருக்கிறது’ என்றார்.

டெஸ்ட் தொடரில் சொதப்பிய இளம் வீரர்களை கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணியினர், முதலாவது ஒரு நாள் போட்டியில் ஓரளவு தாக்குப்பிடித்து ஆடினர். ஹெட்மயர் சதம் விளாசி கவனத்தை ஈர்த்தார். தொடக்க ஆட்டக்காரர் கீரன் பவெல் அதிரடியாக அரைசதம் அடித்தார். இதே போல் அவர்களது பந்து வீச்சாளர்களும் கலக்கினால், இந்தியாவுக்கு சிக்கல் உருவாகும்.

இது குறித்து வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டன் நிருபர்களிடம் கூறும் போது, ‘குறுகிய வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில், பவுலர்கள் புதிய பந்தை சரியாக பயன்படுத்தி நெருக்கடி கொடுக்க வேண்டியது முக்கியமாகும். இதைத் தான் ஒவ்வொரு அணியும் இலக்காக வைத்திருக்கும். முந்தைய ஆட்டத்தில் 2 அல்லது 3 விக்கெட்டுகளை சீக்கிரம் கைப்பற்றி இருந்தால் இந்திய மிடில் வரிசை பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்திருக்க முடியும். 50 ஓவர்கள் முழுமையாக தாக்குப்பிடித்து ஆடியதும், 320 ரன்களுக்கு மேல் எடுத்ததும் நல்ல அறிகுறியாகும். ஆனால் இது போன்று கணிசமான ஸ்கோர் குவிக்கும் போது, எதிரணியை கட்டுப்படுத்த பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட வேண்டும். பேட்டிங்கில் மறுபடியும் அசத்துவோம் என்று நம்புகிறேன். விசாகப்பட்டினம் ஆடுகளத்தில் புற்கள் இல்லை. இங்கு சுழற்பந்து வீச்சாளர்கள் நன்றாக செயல்பட்டு இருப்பதை கவனத்தில் கொண்டுள்ளோம்’ என்றார்.

இந்த ஸ்டேடியத்தில் இதுவரை நடந்துள்ள 7 ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி 6-ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் சந்தித்துள்ளது. 2005-ம் ஆண்டு இங்கு நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 356 ரன்கள் குவித்தது அதிகபட்சமாகும். இதே ஆட்டத்தில் டோனி 148 ரன்கள் சேர்த்தது தனிநபர் சிறந்த ஸ்கோராகும். இந்த மைதானத்தில் இன்னொரு சிறப்பு அம்சம் என்னவென்றால் இங்கு டாசில் தோற்ற அணி ஒரு போதும் போட்டியில் வென்றது கிடையாது.

சமீப காலமாக இங்குள்ள ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கிறது. அதனால் கைமணிக்கட்டை அதிகமாக பயன்படுத்தி சுழற்பந்து வீசும் குல்தீப் யாதவ் இந்திய அணியில் இடம் பெறுவார் என்று தெரிகிறது. ஆட்டத்தின் போது லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), அம்பத்தி ராயுடு, ரிஷாப் பான்ட், டோனி, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, உமேஷ் யாதவ், ரவீந்திர ஜடேஜா அல்லது கலீல் அகமது.

வெஸ்ட் இண்டீஸ்: சந்தர்பால் ஹேம்ராஜ், கீரன் பவெல், ஷாய் ஹோப், ஹெட்மயர், சாமுவேல்ஸ், ரோவ்மன் பவெல், ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), ஆஷ்லே நர்ஸ் அல்லது பாபியன் ஆலென், கீமோ பால் அல்லது ஒஷானே தாமஸ் அல்லது அல்ஜாரி ஜோசப், தேவேந்திர பிஷூ, கெமார் ரோச்.

பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்ஷன் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ்1 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

புதிய சாதனையை நோக்கி கோலி

இந்திய கேப்டன் விராட் கோலி இந்த ஆட்டத்தில் 81 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் ஒரு நாள் போட்டியில் அவரது ரன் எண்ணிக்கை 10 ஆயிரமாக உயரும். அதன் மூலம் ஒரு நாள் போட்டி வரலாற்றில் அதிவேகமாக இந்த மைல்கல்லை எட்டிய வீரர் என்ற பெருமையை பெறுவார். 17 ஆண்டுகளாக இச்சாதனை இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் வசம் உள்ளது.

இதே போல் ரோகித் சர்மா இரண்டு சிக்சர் அடித்தால், இந்திய வீரர்களில் அதிக சிக்சர் நொறுக்கியவர்களின் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள சச்சின் தெண்டுல்கரை (195 சிக்சர்) முந்துவார்.



Next Story